மிக்ஜாம் புயல் – தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தல்!
புதுடில்லி,டிச.7- மிக்ஜாம் புயல், தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, நிவாரணப்பணிகளுக்கு தமிழ் நாட்டுக்கு ரூ..5060 கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என பிரத மருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நேற்று (6.12.2023) நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உணவு மற்றும் நிவாரண பொருட்கள் படகுகளில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப் பட்டு வருகிறது. மிக மோசமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடன டியாக புயல் பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். ஒன்றிய குழுவை உடனே அனுப்பிப் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும்.” வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் 3.12.2023 அன்று இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் காலையிலிருந்து இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மடிப்பாக்கம், முடிச்சூர், பள்ளிக் கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் 5.12.2023 அன்று அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று (6.12.2023) ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
காவல்துறையில் 11.75% பெண்கள் மக்களவையில் ஒன்றியஅரசு தகவல்
புதுடில்லி, டிச.7- காவல் துறையில் பெண்களின் பலத்தை 33 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், 11.75 சதவீத பெண்கள் மட்டுமே தற்போது காவல் பணியில் இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையில் பெண்களின் பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் 5.12.2023 அன்று அளித்த எழுத்துபூர்வ பதிலில், ‘காவல் துறையில் பெண்களின் பலத்தை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற் கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அய்ந்து முறை அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் குறைந்தது 3 பெண் உதவி ஆய்வாளர்கள், 10 பெண் காவலர்கள் பணியில் இருந்தால், 24 மணிநேரமும் பொதுமக்களுக்கு பெண் காவலர்களின் உதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் காவல்துறையில் காலியாக உள்ள காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டின்படி (2022) நாடு முழுவதும் காவல் துறையில் பெண்கள் 11.75 சதவீதம் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை முந்தைய 2020-ஆம் ஆண்டில் 10.30 சதவீதமாகவும் 2021-ஆம் ஆண்டில் 10.49-சதவீதமாகவும் இருந்தது.
அனைத்து பெண்கள் காவல் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு 518-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 745-ஆக அதிகரித்துள்ளது.
காவல் துறையில் பெண்கள் பலர் இணைவதை ஊக்குவிக்கும் வகையில் பெண் காவலர்களின் நலனுக்கான நடவடிக்கையை வலுப்படுத்தவும் குடியிருப்பு, மருத்துவ, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி பணியிடத்தில் பெண் காவலர்களுக்குப் பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’
No comments:
Post a Comment