அனைவருக்கும் என் இனிய வணக்கம்.
ஆண்டுகள் ஆக ஆக வயதுகள் ஏற ஏற இளமைகூடும் பேரதிசயம் பெற்ற என் அன்னை தமிழை வணங்கி, தன்னைவிட உயரத்தில் நிற்கவைக்க எங்களை தரணியை ஆளவைக்க முழுமூச்சாய் உழைக்கும் ஆசிரியர் பெருமக்களை வணங்கி,அறியாமையை சுருக்கி அறிவைப் பெருக்கி நாளை சூரியனைப் போல் ஒளி வீசக் காத்திருக்கும் என் இளம் காளையர்களே, கன்னியர்களே உங்கள் அத்துணை பேரையும் சிரம்தாழ்ந்து வணங்கி, பேசப் போகிறேன் என் தலைப்பில் இறங்கி….
நான் உங்கள் முன் பேச வந்துள்ள தலைப்பு “வைக்கம் வீரர்” .
“சிந்தனைக்கும் சீர்த்திருத்தத்திற்கும் தொடக்கப் புள்ளியிட்டு, புரட்சிக்கும் புதுமைக்கும் காற்புள்ளியிட்டு, முட்டாள்தனத்திற்கும் மூடத்தனத்திற்கும் முற்றுப்புள்ளியிட்ட பெரியாரே பகுத்தறிவின் உயிர் புள்ளி…
தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் மூலம், இம் மண்ணில் நிலவிய ஜாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண் களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்துப் போராடினார்,
தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர் களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப் படுவதையும் பெரியார் எதிர்த்தார்.
ஒருவர் உழைக்கவும், ஒருவர் உழைக்காமல் பிழைக்கவும் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற கற்பிதங்களை சாடினார், ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் எனில் ஏன் அனைவரும் கோவிலில் அர்ச்சகர் ஆகமுடியாது என்று கேள்வியை எழுப்பினார், இன்று பெண்களும் அர்ச்சகராகலாம் என்று அரசாங்கம் சொல்கிறது,
நாட்டில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் வேண்டும் என்றார், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று வீட்டில் முடக்கி வைக்கப்பட்ட பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
பெண் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் ஈ.வெ.ராமசாமி அவர்களே இனி பெண்களின் தந்தை என்று – சென்னையில் பெண்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தி “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கியது எத்தனைச் சிறப்பு!
1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றனர் அவர் குடும்பத்தார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை என்று இருந்ததை எதிர்த்து, ஒரு தெருவில் நாய் போகலாம், கழுதை போகலாம், மனிதன் போகக்கூடாதா என்ற கேள்வி எழுப்பியதுடன் போராடி வெற்றிகண்டார், அதனால், திரு.வி.க. தந்தை பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை வழங்கினார்,
இன்றைய இணைய வசதிக்கு ஏற்றாற் போல் தமிழ் எழுத்துச் சீர்திருத்த முறையை வலியுறுத்திக் கொண்டுவந்தார், அதனை ஏற்ற தமிழ்நாடு அரசு எழுத்துச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவந்தது.
அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த நமது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், “தனது நிலவுப் பயணத்தின் அடித்தளம் தந்தை பெரியாரின் தொலை நோக்கு சிந்தனைதான்,” என்று பேசினார் என்பதே உணர்த்துகிறது – நமது வழ்வியல் வழிகாட்டி தந்தை பெரியார்தான் என்பதை,
தமிழ்நாடு அரசு இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுகிறது.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பேச வாய்ப்பளித்து, பேச விட்டு அமைதி காத்து, ஒத்துழைத்த அத்துணைப் பேரையும் சிரம் தாழ்ந்து வணங்குவது நல்ல பழக்கம். அதுவே எனது வழக்கம், தமிழே என்றும் என் முழக்கம், பேசி முடிக்கிறேன் வணக்கம்.
மு.மைசா,
ஹஜ்ஜா சாரா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடகரை, மயிலாடுதுறை.
No comments:
Post a Comment