சுயமரியாதைச் சுடரொளிகள் நாத்திகன் நாகூர் சின்னதம்பி – வி.கே.இராமு ஆகியோர் இல்லத்துத் திருமணம் இது!
கவிஞர் இல்லம் – உறவினர் வீட்டில் நான் தலைமையேற்று நடத்தும் 35 ஆம் திருமணம்!
பெரியாரால் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்ச்சிக்கு அடையாளமாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடை அளித்தது பாராட்டத்தக்கது!
இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள் – வெற்றிகரமாக வாழ்வார்கள்!
சென்னை, டிச.11 தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் வீழ்ந்துவிடமாட்டார்கள், வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான குடும்பம் நாகூர் நாத்திகன் சின்னதம்பி – ருக்மணி, வி.கே.இராமு – தனம் குடும்பம் என்று சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவுபடுத்தி வாழ்த்துரை வழங்கி னார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள் கா.இளவல் – பா.வினோதா
கடந்த 9.4.2023 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் நாகூர் நாத்திகன் – ருக்மணிஅம்மாள், செருநல்லூர் வி.கே.ராமு –
வி.கே.ஆர்.தனம் இல்லத்து வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது. மணமகன் கா.இளவல் பி.டெக்., – மணமகள் பா.வினோதா பி.இ., ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இந்த சுயமரியாதைத் திருமணத்தின் குடும்பம் எத்தகையது?
உடையார்பாளையம் திருவாளர்கள் ஜெகந்நாதன் – சாரதாம்பாள், திருச்சி இராமலிங்கம் – சாரதி ஆகி யோரின் பெயர்த்தியும், திருவாளர்கள் ஜெ.பாண்டியன் – இரா.ஜெயலட்சுமி ஆகியோரின் அருமை மகளுமான பா.வினோதா பி.இ., அதேபோல, சுயமரியாதைச் சுட ரொளி நாத்திகன் என்ற பெயரை தன்னுடைய பெய ரோடு எப்பொழுதுமே விடாமல் இணைத்துக் கொண் டிருக்கின்ற ஒரு சீரிய கொள்கைவாதி – ‘‘சிரிப்புக்கு ஒரு சின்னதம்பி” என்று நாங்கள் வேடிக்கையாக அழைக் கக்கூடிய அருமைத் தோழர் நாகூர் சின்னத்தம்பி – அதுபோலவே, கொள்கைப் போராட்ட வீராங்கனை ருக்மணி அம்மாள் – அதுபோலவே, கொள்கையில் தீவிரமான பற்றுக்கொண்டு இசை புலத்தின் மூலமாகவும், கொள்கைப் பிரச்சாரகராக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த செருநல்லூர் சுயமரியாதைச் சுடரொளி தோழர் வி.கே.ராமு – அவருடைய வாழ்விணையர் வி.கே.ஆர்.தனம் ஆகியோருடைய பெயரனும், பெரியார் சமூகக் காப்பணியிலும் மற்றும் பல்வேறு பணிகளிலும் பெரியார் திடல் நடத்துகின்ற அருமையான நிகழ்வுகளிலும், பணிகள் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் பங்கேற்கக்கூடிய இணையரான மானமிகு சி.காமராஜ் – பெரியார் செல்வி ஆகியோருடைய அன்புச் செல்வன் மணமகன் கா.இளவல் ஆகியோருக்கும் நடைபெறக் கூடிய இம்மணவிழாவில் நம் அனைவரையும் வர வேற்று உரையாற்றிய, இந்தக் குடும்பத்திற்கு உரியவராக இருக்கக்கூடிய, மூத்த மாப்பிள்ளையாக இருக்கக்கூடிய நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளரும், பிரச்சார செயலாளருமான அருமைக்குரிய தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,
அதுபோலவே, இந்நிகழ்வில் மணமக்களை வாழ்த்தி விளக்கவுரையாற்றிய ஊடகவியலாளர் அருமைத் தோழர் குணசேகரன் அவர்களே, அருமைத் தோழர் இராஜேந்திரன் அவர்களே,
மற்றும் இங்கே பல்வேறு துறைகளிலிருந்து வந்தி ருக்கக்கூடிய பல நண்பர்களையும் இங்கே பார்க்கின் றோம்.
பல கருத்துள்ளவர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய மணவிழாவாக பெருமைக்குரிய அளவில் அமைந் திருக்கின்ற இவ்விழாவில் கலந்துகொண்டிருக்கின்ற அருமைத் தோழர்களே!
கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிரணியினரின் மூத்த பண்பாளரும், போராளியுமான பார்வதி அவர்களே, திருமதி மோகனா அவர்களே மற்றும் ஏராளமான தோழர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடும்பத்தினுடைய தலைவன், தலைவன் என்று சொன்னார்கள் – அந்த வகையில் இப்பொழுது அதைப் பொறுப்பாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறேன் என்று சொன்னாலும், அந்தப் பொறுப்பு எனக்குக் கவிஞர் அவர்களைப்போலவே, ஒரு படி கூடுதலாக இருக்கிறது என்று நான் கருதி, உங்கள் அனைவரையும் மீண்டும் வருக! வருக! என்று வரவேற்கிறேன்.
அதுபோலவே, எங்கள் பிள்ளை இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தத் திருமண விழாவில் எத்தனைப் பெருமக்கள், டாக்டர்கள் பார்வையாளர் வரிசையில்…!
ஏராளமான பொறியாளர்கள், ஏராளமான டாக்டர்கள், ஏராளமான மருத்துவத் துறை நண்பர்கள் – இன்னும் பார்க்க முடியாத தோழர்கள் எல்லாம் இன்றைக்கு வந்தி ருக்கிறார்கள். இதுவே ஒரு பரவசமூட்டக் கூடிய காட்சி யாக இந்த மணவிழா மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இவற்றையெல்லாம்விட, நம்முடைய கவிஞர் அவர்கள், அருள்மொழி ஆகியோர் விளக்கமாக இங்கே சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள் எல்லோருக்கும் தெரியவேண்டும் – இங்கே கவிஞர் அவர்கள் சொன்னார்கள், ‘‘இந்தக் குடும்பத்தில் நடைபெறக்கூடிய 35 ஆவது சுயமரியாதைத் திருமணம்” என்று.
நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடந்துகொண்டி ருந்தாலும் கூட, இன்னும் சிறப்பு என்னவென்றால், பெரியார் செல்விக்கும் – காமராஜூக்கும் 30 ஆண்டு களுக்கு முன்பு, என்னுடைய தலைமையில்தான் அவர்கள் திருமணத்தை நடத்திக் கொண்டார்கள்.
இப்பொழுது அவருடைய பிள்ளைகளுக்கும் என்னு டைய தலைமையில் மணவிழாவினை நடத்தி வைக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன் என்று சொன் னால், முன்பைவிட, இன்னும் தீவிரமாக இந்த இயக் கத்தை, இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக் கின்றார்கள் என்று சொன்னால், நீண்ட காலம் நான் வாழ்கிறேன் என்று சொல்வதற்காக அல்ல. இந்தக் கொள்கை நீண்ட காலமாக, எவராலும் அசைக்க முடி யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது; ஒவ்வொரு ஆண் டும் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு அடை யாளமாகும்.
பெரியார் உலகம் என்ற
ஓர் அற்புதத் திட்டம்!
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, கவிஞர் அவர்கள் பெரியார் உலகத்தைப்பற்றி சொன்னார்கள். நன்றி உணர்ச்சி என்பதுதான் மனிதர்களுக்கு மிக முக் கியமான அடையாளமாகும். அந்த அளவு கோலைப் பார்க்கின்ற நேரத்தில், நம்மவர்கள் எத்தனை பேர் தகுதியானவர்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு நான்காவது தலைமுறையின் மணவிழாவினை நடத்தி வைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியோ, அதை விட ஒரு கூடுதலான மகிழ்ச்சி – பெரியார் உலகம் என்கிற ஓர் அற்புதமான திட்டம்.
காலங்காலமாக தந்தை பெரியாருடைய தொண்டை, வருகின்ற தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லக்கூடிய வகை யில், மிகப்பெரிய அளவில் உருவாகக் கூடிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கவிஞர் குடும்பத்தின் சார்பில் நான்காவது தலைமுறையினர் பெரியார் உலகத்திற்கு அளித்த நன்கொடை – நன்றி உணர்ச்சி!
முதல் கட்டமாக 30 கோடி ரூபாய்க்குத் திட்டமிட்டு, அய்யா அவர்களுடைய 95 அடி உயர சிலையும், 45 அடி பீடமும், நூலகம், ஆய்வகம், குழந்தைகள் பகுதி, பூங்கா, கோளரங்கம் என்று பல்வேறு திட்டங்களை யெல்லாம் திராவிட இயக்கம் சாதித்தவை – சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாறு – போராட்டங்களை யெல்லாம் உள்ளடக்கி இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை யில், மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால், அந்தத் திட்டம் மக்களுடைய ஆதர வோடு நடக்கின்றது என்பதுதான் மிக முக்கியமாகும்.
அந்த உணர்வோடு, நம்முடைய மணமக்கள், தங்களுடைய நன்றியைக் காட்ட கவிஞர் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்தார் கள். நன்கொடையை விட வேறு என்ன சிறப்பு என்றால், நான்காவது தலைமுறையினர் இந்தக் கொள்கையோடு நாங்கள் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல – இந்தக் கொள்கையைப் பின்பற்றுவதால், நாங்கள் தாழ்ந்துவிட வில்லை; நாங்கள் வீழ்ந்துவிடவில்லை – உயர்ந்திருக் கின்றோம் என்ற நிலையில், கவிஞரின் மூன்று பேரன் களும் அளித்தனர்.
வாழ்க்கைப் பயணத்தில் இந்தக் கொள்கையைப் பின்பற்றினால், யாரும் வீழ்ந்துவிடமாட்டார்கள். அந்த வகையில், ஒரு புதிய திருப்பமாக இந்த மணவிழா நடைபெறுகிறது.
ஆடம்பரமாக திருமணத்தை நடத்தவேண்டாம்!
தந்தை பெரியாருடைய கொள்கை எல்லாவற்றையும் நாம் நிறைவேற்றிவிட்டோம். ஒன்றே ஒன்று என்ன வென்றால், ஆடம்பரமாக மணவிழாவினை நடத்துவது, ஏராளமான மக்களைத் திரட்டுவதைப் பார்த்தால், பெரியாருக்குக் கடிதம் எழுதினால் என்ன எழுதுவோம் என்பதைப்பற்றி அருள்மொழி அவர்கள் இங்கே சொன்னார்கள்.
பெரியார் அவர்கள் நமக்குக் கடிதம் எழுதினால் என்ன எழுதுவார் என்றால், மணவிழா முடிந்து வாழ்த் துக் கடிதம் எழுதினால் என்ன எழுதுவார் என்றால், ‘‘என்னடா, ஆசிரியர், பெரியார் மேலே இருக்கிறார், கீழே இருக்கிறார், அவர் கடிதம் எழுதுகிறார்” என்றெல் லாம் சொல்லுகிறாரே என்று நீங்கள் எல்லாம் நினைக் கலாம்; இது மூடநம்பிக்கையல்ல – முழுக்க முழுக்க இது ஒரு இனிமையான, சுவையான கற்பனை.
பெரியார் கடிதத்தில் என்ன எழுதியிருப்பார், ‘‘இவ்வளவு செலவு செய்யவேண்டுமா? இவ்வளவு ரூபாய் செலவு செய்வதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செலவு செய்திருக்க லாமே! இவ்வளவு பெரிய சால்வையைப் போடலாமா? அதற்குப் பதிலாக புத்தகங்களை வாங்கி 10 பேருக்குக் கொடுத்திருக்கலாமே?” என்று எழுதியிருப்பார்.
அய்யா அவர்கள் எப்பொழுதும் உண்மையைப் பேசியே பழக்கப்பட்டவர்.
சென்னை மாநகராட்சியில் ஒரு பெரிய வரவேற்பு நடைபெற்றது. அந்த வரவேற்பிற்கு பெரிய எதிர்ப்பு மிகக் கடுமையாக இருந்தது. அப்பொழுது மேயராக சம்பந்தன் (1966-1967) இருந்தார். நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர். அவர் வரவேற்பு கொடுக்கின்றபொழுது, எதிரிகள், அய்யா அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று மூர்மார்க்கெட் பகுதியில் நின்றிருந் தார்கள்.
மைனர் மோசஸ் அவர்கள், மிசாவில் சிறையில் இருந்தவர். மேயராகவும் (1965-1966) இருந்தவர். அவரும், மற்ற தோழர்களும் அங்கே சென்று கருப்புக் கொடி காட்ட ஆளே இல்லாமல் செய்துவிட்டார்கள்.
அந்த வரவேற்பு விழாவில், பெரிய பெரிய அதிகாரிகள், ஏராளமான கவுன்சிலர்கள் பூங்கொத்து கொடுத்து அய்யா அவர்களை வரவேற்றனர். அதை எல்லாவற்றையும் அய்யா அவர்கள் வாங்கிக்கொண்டு, உள்ளே சென்று உரையாற்ற ஆரம்பித்தார்.
சென்னை மாநகராட்சி வரவேற்பில்
தந்தை பெரியார் கூறிய கருத்து!
‘‘நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள். இந்தக் கார்ப் பரேசன் இருக்கிறதே, இத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறீர்களே, அதனால் என்ன லாபம்? இதைக் கலைத்துவிட்டு, ஒரு அதிகாரி மட்டும் இருந்தால், அவர் தவறு செய்தாலும், பணம் வாங்கினாலும் ஒரே முறைதான் வாங்குவார். இப்பொழுது ஆளாளுக்குப் பணம் வாங்குகிறார்கள். எதற்காக இந்தக் கார்ப்பரேசன்? அதனால் என்ன பயன்? சண்டை போடுவதற்குத்தானே கார்ப்பரேசன்? மக்கள் பணம்தானே வீண்?” என்று சொன்னார்.
இதைக் கேட்டவுடன், அங்கே இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண் டார்கள்.
இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்து, விழாவிற்கு அழைத்திருந்தாலும், அதற்காக அய்யா அவர்கள் பேசாமல், அவர் மனதில் பட்டதை சொல்கிறாரே என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தனர்.
அதுபோன்று, இம்மணவிழா சிறப்பான வகையில் நடைபெற்றாலும் – ஆனால், இப்பொழுது இப்படி நடத்துவதும் தேவைப்படக் கூடிய ஒன்றுதான்.
ஏனென்றால், இந்தக் கொள்கையைப் பின்பற்றிய வர்கள் வீழ்ந்துவிடமாட்டார்கள் – தாழ்ந்துபோக மாட் டார்கள் – வளர்ச்சியடைவார்கள் என்பதைத்தான் இங்கே ராஜேந்திரன், குணசேகரன், கவிஞர் ஆகியோர் சொன்னார்கள்.
பெரியாரால் வாழ்கிறோம் என்பதற்கான
நன்றி அடையாளம்!
பெரியார் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் – அந்தத் தோழர்கள் நன்கொடை, சந்தாக்கள் போன்ற வற்றைக் கொடுப்பார்கள். அது முக்கியமல்ல – அதை விட முக்கியமானது என்னவென்றால், பெரியாருடைய கொள்கையால் பயனடைந்தவர்கள் – பயனடைபவர் கள் நன்றி காட்டவேண்டும். அதுகுறித்து அய்யா சொல்வார், ‘‘நன்றி என்பது உதவி செய்பவர் எதிர் பார்க்கக் கூடாது; பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பு” என்று.
ஆகவே, நம்முடைய கடமை என்று வரும்பொழுது தான், இந்த இளந்தலைமுறையினர் அதைச் செய்தார்கள். அதை ஒவ்வொரு தோழரும் பின்பற்றவேண்டும்.
ஏனென்றால், ஒவ்வொரு குடும்பமும், பெரியாரால் வாழ்கிறோம், பெரியாருடைய உழைப்பினாலே வாழ்கி றோம் என்பதால், நாம் பெரியாருக்கு என்ன செய்கி றோம்?
நேரே நீங்கள் காவல் நிலையத்திற்கு வரவேண்டாம்; போராட்டத்திற்கு வரவேண்டாம்; அதற்கெல்லாம் நாங் கள் இருக்கிறோம். பலிகடா ஆவதற்காகவே நாங்கள் இருக்கிறோம். ஆனால், குறைந்தபட்சம், நீங்கள் அமர்ந்து சாப்பிடும் நேரத்தில், இந்த உணவு, இந்தப் பெருமை, இந்த வீடு, இந்தப் பட்டங்கள் எல்லாம் யாரால்? பெரியாரால் என்று நினைக்கக் கூடிய அந்த சிந்தனைகள் இருக்கிறதே – அந்த சிந்தனை என்பது பெரியாருக்குப் பெருமை சேர்ப்பதற்காக அல்ல.
உதாரணத்திற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம் – அந்த மருந்தை யாருக்காக சாப்பிடுகிறோம்? மருந்து கண்டுபிடித்தவர்களைத் திருப்திபடுத்துவதற்காகவா? அல்ல – நம்முடைய நோய் தீருவதற்காகவா?
நாகூர் நாத்திகன் சின்னதம்பியின் இல்லம் எங்களுக்கெல்லாம் விருந்தோம்பல் இல்லம்!
இங்கே நண்பர்கள் சொன்னார்கள், மீண்டும் ஸநாதனம் – மீண்டும் அடிமைத்தனம் – மீண்டும் ஒரு நொடிப்பொழுதில், இருக்கின்ற சட்டங்கள் செல்லாது – சமூகநீதி காணாமல் போகும் என்று சொல்லக்கூடிய அளவில், இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.
அடுத்ததாக நண்பர்களே, இந்தக் குடும்பத்தைப் பற்றி நிறைய சொன்னார்கள். தோழர் சின்னத்தம்பி அவர்கள், அவருடைய மாமனார் வேலாயுதம் அவர்கள். நாகூரில் அவர்களுடைய வீட்டின்முன் திண்ணை இருக்கும்.
75 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் எல்லாம் மாணவப் பருவத்தில், கலைஞர் போன்றவர்கள் பிரச்சாரத்திற்காக செல்கிறபொழுது, அவருடைய வீட்டில்தான் சாப்பிடுவோம். அந்த வீடுதான் எங்களுக்கெல்லாம் விருந்தோம்பல் வீடு. அம்மா ருக்மணி போன்றவர்கள், சின்னத்தம்பி போன்ற வர்கள் இருந்தார்கள்.
பெரியார் செல்வியைப் படிக்க வைத்தது நான் அல்ல – இயக்கமே!
அதற்கு அடுத்தடுத்த தலைமுறைகள் இப்பொழுது இவ்வளவு வேகமாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போன்று செருநல்லூர் ராமு அவர்கள் நல்ல குரல் வளத்தோடு பாடக்கூடியவர் – இசைமூலம் பெரிய அளவிற்குப் பிரச்சாரம் செய்யக்கூடியவர். அப்பொழுது குழந்தையாக இருந்தவர்தான் பெரியார்செல்வி. மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, இங்கே அவர் பேசினார். ‘‘ஆசிரியர் எங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல, அவர்தான் என்னை படிக்க வைத்தார்” என்று.
ஆசிரியர் அவரைப் படிக்க வைக்கவில்லை; இயக்கம்தான் அவரைப் படிக்க வைத்தது என்பதுதான் மிகவும் முக்கியம்.
அதேபோன்று, ராஜேந்திரன் அவர்களும் சொன் னார், ‘‘ஆசிரியர்தான் என்னை உருவாக்கினார்” என்று.
இயக்கம்தான் அவரை உருவாக்கிற்று!
ஆசிரியருக்கு என்ன வேலை?
மாணவர்களை உருவாக்குவதுதான் வேலை.
அந்த மாணவர்கள் எல்லாம், அதே ஆசிரியர் பின் னால்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நடைமுறையும் அது இல்லை. அதுதான் மிகவும் முக்கியம்.
சிரிப்புக்கு ஒரு சின்னதம்பி!
ஆனால், எங்கே இருந்தாலும், ‘‘ஆசிரியர்” என்று அழைக்கின்றார்கள் பாருங்கள், அதுதான் ஆசிரியர் தொழிலுக்குப் பெருமை சேர்க்கக் கூடியது, சிறப்புக் குரியது.
அந்த வகையில், நல்ல குடும்பம், ஒரு கொள்கைப் பல்கலைக் கழகமாக – ஒரு சுயமரியாதை பல்கலைக் கழகமாக இருக்கிறது.
நம்முடைய சின்னதம்பி அவர்களானாலும் சரி, ருக்மணி அம்மாவானாலும் சரி – எங்களோடு பல நேரங் களில் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வோம்.
இரவெல்லாம் அவர் விழித்துக்கொண்டு இருப்பார், வேனில். நாங்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருப்போம். அவர் சிரிப்பு எங்களால் மறக்கவே முடியாது. ருக்மணி அம்மா அவர்கள் அதை வழக்கமாக சுட்டிக்காட்டுவார்.
சின்னதம்பி அவர்கள் கூட்டம் முடிந்து நாங்கள் எல்லாம் வரும்பொழுது, ‘‘பேச்சா அது?” என்பார்.
என்னங்க, அவ்வளவு மோசமாக இருந்ததா? என்று கேட்டவுடன்,
அதற்கு இன்னும் அதிகளவிற்குச் சிரிப்பார்.
நீதிக்கட்சிக் காலத்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டுமா? சுயமரியாதை இயக்கச் செய்தி களைத் தெரிந்துகொள்ளவேண்டுமா?
சின்னதம்பி அவர்கள், ஒரு வரலாற்று ஆவணம் போன்று புரட்டிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, சிறப்பாக அந்த வரலாறுகளையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல்படைத்தவர்.
இப்படிப்பட்ட கொள்கைப் பாரம்பரியமிக்க ஒரு குடும்பம்.
அதேபோன்று, இராமு. இராமு அவர்கள், பாடகர் மட்டுமல்ல – பல கலவரங்களைச் சந்தித்திருக்கிறார், எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார், அவர் பாடும்பொழுது.
ஒரு பிரபலமான திரைப்பட பாடலான ‘‘மணப்பாறை மாடு கட்டி” என்ற பாடலுக்கு எதிர் பாட்டு ஒன்றைத் தயார் செய்தார் இராமு அவர்கள்.
கொள்கைப் பாடல்களைப் பாடும்
செருநல்லூர் வி.கே.இராமு!
எதிர்ப்பாட்டு என்றால், கொள்கை ரீதியாகப் பிரச் சாரப் பாட்டு. அவர் அந்தப் பாடலைப் பாடும்பொழுது, பல பேர் இந்தக் கொள்கை வயப்படுவதற்கு அந்தப் பாடல் ஆதரவாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் கல வரம் செய்வதற்கும் அந்தப் பாட்டுக் காரணமாக இருந்தது.
இராமு அவர்கள் மறைந்த பிறகும், தனம் அம்மை யார், தன்னுடைய பிள்ளைகளை இந்தக் கொள்கை, இந்த இயக்கத்திலேயே வழிநடத்தினார்கள்.
இப்படி நம்முடைய பிள்ளைகள் வளர்ந்து பொறியாளராக வந்திருக்கிறார்கள். மணமகனை நான் பார்க்கும்பொழுது, அண்ணாந்து பார்க்கவேண்டியதாக இருக்கிறது. அப்படித்தான் இருக்கவேண்டும். எல்லாப் பிள்ளைகளையும் நாம் அண்ணாந்து பார்க்கக் கூடிய நிலைதான் இருக்கவேண்டும். அதாவது, நெடிதுயர்ந்து இருக்கிறார்கள்; எல்லாத் துறைகளிலும்!
அதுமட்டுமல்ல, பெரியார் செல்விக்கு இன்னொரு ஓர் அருமையான பாராட்டு என்னவென்றால், காமராஜ் – பெரியார் செல்வி வாழ்விணையராக ஆனது மட்டு மல்ல; தன்னுடைய தம்பிகள், மற்றவர்கள் எல்லோரு டைய வளர்ச்சிக்கு, அவர்களுடைய பாதுகாப்புக்கு, அவர்களுடைய படிப்பிற்கு – இந்தக் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருப்பதற்கான ஓர் அற்புதமான பணியைச் செய்திருக்கிறார்.
தன் பெண்டு, தன் பிள்ளை என்று சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு வாழ்ந்திருக்கிறார். மற்றவர்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
வெற்றிச்செல்வி – கவிஞர் வீடு என்பது விருந்தாளிகள் இல்லாத நாளே இல்லை என்னும் வீடு!
பெரியார் செல்வி எங்கள் பிள்ளை. என்னிடம் அதிகமாக ஞாபகப்படுத்துவது, சண்டை போட்டு கடிதம் எழுதினேன் அல்லவா என்று சொல்வார். பிள்ளைகள், அப்பாவிடம் சண்டை போடுவது என்பது இயல்புதான். எல்லாப் பிள்ளைகளும் அப்படித்தான்.
இப்படி இந்தக் குடும்பங்களைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கலாம். கவிஞரைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவருடைய வாழ்விணையர் வெற்றிச்செல்வி அவர்கள்.
அடக்கம், ஆழம், தொண்டு, வீட்டுப் பணி – எந்த நேரம் பார்த்தாலும் அவர்கள் வீட்டில் விருந் தாளிகள் இல்லாத நாளே இருக்காது.
கருப்புச் சட்டை அணிந்துள்ள மணமகன்!
செல் விருந்து- வருகை விருந்து – எப்பொழுதும் விருந்து என்று இருக்கக்கூடிய நிலை இந்தக் குடும்பத்தில். இப்படிப்பட்ட ஓர் அருமையான குடும்பத்தின் மண விழா இன்றைக்கு நடைபெறுகிறது.
அதுவும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, நான்காவது தலைமுறைக்கு மணவிழாவினை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி சேர்ப்பது என்னவென்றால், பார்க்க முடியாதவர்களையெல்லாம் பார்க்கிறோம். மீண்டும் பெரியார் சமூகக் காப்பணி இன்னும் வேகமாக இங்கு இருக்கக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு நாங்கள் வளர்ந்தாலும், இன்னும் நாங்கள் பெரியார் சமூகக் காப்பணி உறுப்பினர்கள்தான் என்று சொல்லக்கூடிய அளவில் சிறப்பாக இருக்கிறார்கள்.
எனவே, இந்த மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்பாக வாழ்விணையர்களாக வாழ்ந்துகாட்ட வேண் டும். அடுத்தடுத்து இந்தக் கொள்கையில் இன்னும் தீவிரமான உணர்வைப் பெறுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மணமகன் கருப்புச் சட்டை அணிந்து அமர்ந்துள்ளார்.
இன்றைக்கு ஸநாதனம் எப்படி வீழ்ந்திருக்கிறது பாருங்கள்; துணிச்சல் என்பது இதுதான்.
ஏன் சுயமரியாதைக்காரர்?
ஏன் திராவிடர் கழகத்தக்காரர்?
ஏன் கருப்புச் சட்டை அணிகிறோம்?
நண்பர்களே, இன்றைக்குக் கருப்புச் சட்டை அணிவது என்பது பெரிய அதிசயமில்லை.
கொள்கைக் குடும்பத்தில் பூத்த மலர்கள்!
கருப்புச் சட்டைக்கு ஒரு தனிப்பெருமை இன்றைக்கு என்னவென்றால், எல்லா அரசியல் கட்சிக்காரர்களும், எல்லா பொதுவானவர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள்.
எப்பொழுதெல்லாம் போராட்ட உணர்வு எழு கிறதோ, எப்பொழுதெல்லாம் சமூகநீதி தேவை என்று நினைக்கிறார்களோ, எப்பொழுதெல்லாம் அவர்களு டைய போராட்டத்தில் வெற்றி அடையவேண்டும் என்று நினைக்கிறார்களோ – எல்லாக் கட்சியினரும் – இந்நாள் முதலமைச்சர் – மேனாள் முதலமைச்சர் – எந்நாள் முதலமைச்சர் – எதிர்க்கட்சியினர் எல்லோரும் கருப்புச் சட்டை அணிந்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் கருப்புச் சட்டை அணிந்தால், அவரை சங்கடத்தோடு எல்லோரும் பார்த்தார்கள்.
ஆனால், இன்றைக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும், உரிமை வேண்டும் என்றால், கருப்புச் சட்டைதான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி அவர்களும் கருப்புச் சட்டை அணிந்து வருகிறார்.
அந்தக் காலத்தில் கருப்புச் சட்டை என்றால், அதைக் கண்டு எல்லோரும் அலறிய காலம் ஒன்று உண்டு.
விபூதி வீரமுத்துசாமி என்பவர் ‘‘கருப்புக்கு ஒரு மறுப்பு” என்று எழுதினார்.
நம்முடைய ஆள் மிக வேகமாக ‘‘மறுப்புக்கு ஒரு செருப்பு’’ என்று எழுதினார்கள்.
ஒரு செருப்பு தன்மீது வீசப்பட்டதும், திரும்பிச் சென்று இன்னொரு செருப்பையும் எடுத்தவர் தந்தை பெரியார்.
ஆகவே, இன்றைக்கு இந்தக் கொள்கை வளர்ந் திருக்கிறது. அத்தனை எதிர்ப்புகளில் எதிர்நீச்சல் அடித்து வளர்ந்த கொள்கை இந்தக் கொள்கை. அப் படிப்பட்ட கொள்கையில் பூத்த மலர்கள் – காய்த்த கனி கள் – அதனுடைய விளைவுகள்தான் இந்த மணவிழா.
அடுத்த தலைமுறையினரின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்!
இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக, இவர்களுடைய அடுத்த தலைமுறையினரின் மணவிழாவினையும் நானே நடத்தி வைப்பேன். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. இது ஒன்றும் பேராசை என்று நீங்கள் யாரும் நினைக்கவேண்டாம்; இது விஞ்ஞானத்தினுடைய அற்புதம்.
மனத்தின்மை, அதைவிட நம் எதிரிகள் – எவ்வளவுக் கெவ்வளவு எதிரிகள் வருகிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு நாம் உறுதியாக வாழ்வோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஏனென்றால், களத்தில் நிற்கின்ற வாழ்நாள் போர் வீரனுக்கு எதிரிகளைப் பார்த்தால்தான் நரம்புகள் முறுக்கேறும், ரத்தம் சூடேறும் – அதுபோன்ற ஓர் உணர்வுதான் மிகவும் முக்கியம்.
ஏற்கெனவே இங்கே கவிஞரும் சொல்லிவிட்டார். உலக அறிஞர்கள் நிறைய பேர் இந்தக் குடும்பத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் ஒருவருக்கொருவரை மிஞ்சக் கூடிய அளவில் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டுத் திருமணம்:
மாமனார் – மாமியார் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணமும் – நீதிமன்றத் தீர்ப்பும்!
அதுதான் பெரியாருடைய அருட்கொடை! பெரியார் கொள்கையைப் பின்பற்றினால், கல்வி யில் உயருவார்கள், உழைப்பில் உயருவார்கள், வாழ்வில் உயர்வார்கள் என்பதற்கு அடையாள மான இந்தக் கொள்கையில் பூத்த மலர்களை, காய்த்த கனிகளை, கொள்கை மணிகளை பாராட்டி, வாழ்த்தி இம்மணவிழாவினை நடத்தி வைக் கிறேன்.
இங்கே கவிஞர் அவர்கள் சொன்னார்கள், ஒரு புதிய கருத்தை மிக ஆழமான கருத்தைச் சொன்னார். அது அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய விஷயம்.
சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்றார்கள் – யாருடைய திருமணம்? என்னுடைய வாழ்விணையர் மோகனா அவர்களின் அப்பா – அம்மா திருமணம்தான்.
அதில் வேடிக்கை என்னவென்றால், சுயமரியாதைத் திருமணம் ஒன்றுதான் வழக்காகின்றது – அந்த வழக்கிற்குப் பெயர் தெய்வானை ஆச்சி – சிதம்பரம் என்பதுதான். வழக்குரைஞர்கள் எல்லோருக்கும் அது தெளிவாகத் தெரியும்.
எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால், திருமணத்திற்குப் பிறகு நான் பி.எல். தேர்வு எழுதினேன் – தேர்வில் அதுகுறித்துத்தான் கேள்வி கேட்கப்பட்டது. எனக்கு மதிப்பெண் பெறுவதற்கு மிகவும் வசதியாகப் போயிற்று. ஏனென்றால், பொதுக்கூட்டங்களில் பேசிப் பேசி பழக்கம் என்பதால்.
அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது, சட்டம் தன் மரியாதையை இழந்தது இந்த வழக்கின் தீர்ப்பினால்.
அண்ணா அவர்களால், ‘திராவிட மாடல்’ ஆட்சியினால், திராவிட ஆட்சியினால் சட்டம் அதற்குரிய மரியாதையை மீண்டும் பெற்றது.
அதுதான் சுயமரியாதைத் திருமணத்தினுடைய பலாபலன்களில் மிகவும் முக்கியமானது. அதைத்தான் கவிஞர் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்.
அந்த வழக்கில், இரண்டு பெரிய வழக்குரைஞர்கள் வாதாடினார்கள். பெரியார் அவர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி, சாட்சி சொன்னார். அப்படி சொன்ன பிறகும்கூட, ‘‘இது சடங்குகளை ஒழிப்பது, சம்பிரதாயங்களை ஒழிப் பது – ஆகவே, சுயமரியாதைத் திருமணம் என்பது சட்டப்படி செல்லாது” என்று நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்தனர்.
இவர்களுக்கு வாதாடியவர் திருவாங்கூரில் தலைமை நீதிபதியாக இருந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர்.
என்னுடைய வாழ்விணையர் மோகனா அவர்களின் தாய், தந்தையருக்காக வாதாடியவர்.
இந்தத் திருமணம் செல்லும் என்று சொல்லுவதற்காக அவர் நிறைய விஷயங்களைக் கூறினார்.
ஆனால், தத்துவ ரீதியாக சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு சொல்லிவிட்டு, சொத்திற் காகதானே இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள் – சூத்திரப் பிள்ளைகளுக்கு – சட்டப்படி இல்லாத குழந் தைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தக் குழந்தை களுக்கு சொத்துகள் கிடைக்கும். சொத்துகளுக்கு அவர் களுக்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பில் சொன்னார்கள்.
முன்பு கீழ்நீதிமன்றத்தில் கொடுத்த சொத்துகளைவிட, அதிகமான சொத்துகளைக் கொடுக்க உத்தரவிட்டனர்.
உடனே வழக்குரைஞர் என்னுடைய மாமனார் – மாமியாரிடம் சொன்னார், ‘‘அம்மா, தீர்ப்பைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். முன்பை விட அதிக சொத்து உங்களுக்கு வந்திருக்கிறது” என்றார்.
உடனே அந்த அம்மையார் கேட்டார், ‘‘ஏங்க, எங்களுக்கு சொத்தா முக்கியம்? பெரியார் தலைமையில் நடந்த திருமணத்தை செல்லாது என்று சொல்லி, நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து இருக்கிறோம், அவர்களை வைப்பாட்டி பிள்ளைகள் என்றும் சொல்லி யிருக்கிறார்களே, மானம் முக்கியமா? இந்தத் தீர்ப்பு முக்கியமா?” என்றார்.
அந்தத் தீர்ப்பை லட்சியம் செய்யாததினால்தான், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.
சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம் கொடுத்த அண்ணாவுக்கும் நன்றி கூறுவோம்!
அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற் றதும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தார். திராவிட ஆட்சிக்குக் கோடான கோடி நன்றிகளை உலகம் உள்ள அளவிற்கும் சொல்ல வேண்டும்.
அதைத்தான் கவிஞர் அவர்கள், ‘‘சட்டம் தான் இழந்த மரியாதயை மீண்டும் பெற்றது” என்று சொன்னார். இதுதான் சுயமரியாதைத் திருமணத்தினுடைய மிக முக்கியமான அடிப்படை என்று கூறி, தந்தை பெரியார் அவர்களுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் மிகப்பெரிய நன்றியை நாம் என்றென்றைக்கும் செலுத்தி, அவர் களுடைய நினைவிற்கு வீர வணக்கம் செலுத்தி, மண மக்கள் செல்வர்கள் இளவல் – வினோதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சியை உறுதிமொழி கூறி நடத்திக் கொள்வார்கள்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றி னார்.
No comments:
Post a Comment