தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆர்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். காங்கிரஸ் 64, பிஆர்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தைக் கைப்பற்றின. இதன்பின்னர் அய்தராபாத்தின் எல்.பி. மைதானத்தில் டிச. 7 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சராக விக்ரமர்கா, அமைச்சர்களாக உத்தம் குமார் ரெட்டி, கோமடிரெட்டி, வெங்கட ரெட்டி, சி.தாமோதர் ராஜநரசிம்மா, டி.சிறீதர் பாபு, சிறீனிவாஸ் ரெட்டி, பொன்னம் பிரபாகர், கொண்டா சுரேகா, டி.அனுசுயா, தும்மலா நாகேஸ்வர ராவ், ஜுபள்ளி கிருஷ்ண ராவ் ஆகியோர் பதவி யேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கும் பொருட்டு, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவ ராக அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஅய்எம்அய்எம்) கட்சி எம்.எல்.ஏ. அக்பருதீன் ஒவைசி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் உடனிருந்தார். தற்காலிக அவைத் தலைவர் முன்னிலையில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பாஜகவின் 7 சட்டமன்ற உறுப் பினர்கள் மட்டும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை.
என்ன காரணம்? தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சட்டப் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
அவர்தான் மற்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதுதான் சட்டமன்ற மரபும்கூட! அந்த வகையில் அக்பருதின் ஒவைசி தற்காலிக சட்டப் பேரவைத் தலைவர் பொறுப்பேற்று, மற்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால், பிஜேபியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள் ளாமல் புறக்கணித்தது எவ்வளவு கீழ்த்தரம்!
பிஜேபியின் கோர முகம் எத்தகைய அநாகரிகமானது என்பதற்கு இந்த ஒன்று மட்டுமே போதுமானது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 17.22 கோடியாகும். இது இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களில் 14.21 விழுக்காடாகும்.
இப்பொழுது இந்தத் தொகை கூடுதலாக இருக்கவே செய்யும். 140 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? இந்திய அரசமைப்புச் சட்டம் இதனை ஏற்க வில்லையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுதானே சட்டமன்ற உறுப்பினர்களாக ஆகியுள்ளனர். ஒருக்கால் பிஜேபி, சங்பரி வார்க் கூட்டம் தனியே ஓர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளதா?
உலகில் முஸ்லீம்கள் அதிகம் எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தெலங்கானாவில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டவிதம் உலக அளவில் இந்தியாவின் மரியாதையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது.
இதற்குக் காரணம் இவர்கள் மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப் பட்ட “வரையறுக்கப்பட்ட நமது தேசியம்” (We or our Nation Hood Defined) என்ற நூலில் குறிப்பிடுவது என்ன?
“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல் நாட்டினராகக் கருதக் கூடாது; அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்கள் உரிமையும் இன்றி இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வாக்கர்.
அதனுடைய நீட்சி தான் தெலங்கானாவில் இப்பொழுது நடந்துள்ள கண் மூடித்தனமான மதவெறிப் பார்வை! இந்திய அரசமைப்புச் சட்டப்படிப் பார்க்கப் போனால் பிஜேபி சட்டப்படிக்கான கட்சியல்ல என்பது துல்லியமாக விளங்கும்!
No comments:
Post a Comment