புதுடில்லி, டிச.13 டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என துணைவேந்தர் சாந்திசிறீ து.பண்டிட் அறிவித்தார்.
இந்தியாவில் முற்போக்கு சிந்தனை மிக்க பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இதில் பயிலும் மாணவர்கள் சிவப்பு சிந்தனையாளர்களாக உருவாகி விடுவதாகவும் ஒரு கருத்து நிலவியது. இங்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயில் கின்றனர். இவர்களில் வடக்கு மற்றும் தென் மாநில மாணவர்கள் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகப் புகார்கள் உண்டு. இதை போக்கும் முயற்சியில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அங்கு நடைபெற்ற பாரதி பிறந்தநாள் விழாவில் வெளியானது.
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பல்கலைக் கழகமான இதன் சிறப்புநிலை தமிழ்த்துறை சார்பில் பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதியின் பிறந்த நாளை, இந்திய மொழிகள் நாளாக நாடு முழுவதிலும் கொண்டாட வேண்டும் என கடந்த ஆண்டு ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது. இதுவும் நேற்று முன்தினம் (11.12.2023) ஜேஎன்யுவில் கடைப்பிடிக்கப் பட்டது. இந்த விழாவில் ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திசிறீ து.பண்டிட் பேசும்போது, “ஜேஎன்யு பல்கலைக்கழகம் வடக்கு, தெற்கு எனும் வேறுபாடு களைக் கடந்து இந்தியாஎனும் நிலையில் இயங்க வேண்டும். இதனைப் பறைசாற்றும் விதமாக விரைவில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது” என்றார்.
No comments:
Post a Comment