சமூகநீதி தளத்தில் நமக்கான 'நூலகம்' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

சமூகநீதி தளத்தில் நமக்கான 'நூலகம்' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

உலகத் தமிழர்கள் பார்வையில்!

"திராவிடத்தால் வீழ்ந்தோம்," என்பார்கள் சிலர். உலகம் முழுவதும் மருத்துவம், தொழில் நுட்பம், கணினித் துறை என ஏராளமான பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். 

அந்தளவு உயரம் போக, அந்தளவுக் கல்வி முக்கியம் என்பது அடிப்படை அறிவு. திராவிட அரசுகள் செய்த கல்விக்கான அத்தனை உதவிகளையும் பெற்று சிறுக, சிறுக மேலேறி, இன்று விண்ணைத் தொடும் விமானத்தில் பறக்கிறார்கள் என்றால் யார் காரணம்? திராவிடம் தானே காரணம்! 

ஜாதி, மதம், போலித் தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்குத் திராவிடம் குறித்தப் புரிதல் இல்லாமல் இருக்கலாம். அதேநேரம் சிறப்பான கல்வி கற்று, வெளிநாடுகளில் பணிபுரியும் சிலருக்கும் தாங்கள் கடந்து வந்த பாதை தெரியவில்லை. அவையெல்லாம் தெரிய ஈரோட்டுக் கண்ணாடியும், இயக்க வரலாறும் முக்கியம்!

அதேநேரம் தமிழ்நாட்டின் வரலாறுகள் அறிந்து, தம்மைப் போன்றே அடுத்த தலைமுறையும் செழித்தோங்க வேண்டுமென ஒரு படையே பம்பரமாய் வேலை செய்கிறது! தங்கள் வேலை நேரம் போக, தமிழ்நாட்டின் அரசியல் களம் தான் அவர்களின் சிந்தனை! வெளிநாட்டில் வசித்தாலும் எந்தப் பொழுதுபோக்கிலும், பொழுதைக் கழிக்காமல் பொறுப்புடன் சமூகக் கடமை ஆற்றுபவர்கள் அவர்கள்! 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வயது 91 என்றதும் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்தனர்!

மருத்துவர் சென்பாலன்

ஓமான் நாட்டில் பணிபுரியும் மருத்துவர் சென்பாலன் அவர்கள் கூறும் போது,  

"தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்க்கை என்பது தமிழ்நாட்டு அரசியலின் வரலாறு! எந் தெந்த ஆண்டுகளில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதை தம் நினைவுத் திறனில் இருந்தும், தான் சேகரித்து வைத்த ஆவணங்களில் இருந்தும் எடுத்துக் கூற வல்லவர் ஆசிரியர் அவர்கள்! செய்திகளை மாற்றியும், திரித்தும் போலி செய்திகளைப் பரப்பிடும் இந்தக் காலத்தில் ஆசிரியரைப் போன்றோர் நம்முடன் இருப்பது யானை பலம்!

இத்தனை தகவல்களை, இத்தனை செய்திகளை அச்சுப் பிசகாமல் நினைவில் வைத்திருந்து, தேவைப்படும் நேரத்தில் எடுத்தாள்வது பல நேரங் களில் பெரும் வியப்புக்குரிய ஒன்று! எம்போன்ற இளைய சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டியதும், பின்பற்ற வேண்டியதுமான "கூர்மதி" திறன் ஆசிரியருக்கே உரித்தான ஒன்று!

இவையனைத்தும் சமூகத்தின் நலனுக்காக, சமூக நீதிக்காகப் பயன்பட்டு வருகிறது! தன்னலன் பாராது, தமிழர் நலனுக்காகவே தனது சிந்தை, பொருள், செயல் அனைத்தையும் பயன்படுத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர்  பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் என உளமார விழைகிறோம்", என்று மருத்துவர் சென்பாலன் கூறினார்.

கார்த்திக் இராமசாமி

அமெரிக்க வங்கி ஒன்றில் சிங்கப்பூரில் பணிபுரியும் கார்த்திக் இராமசாமி கூறும் போது, "தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை, 50 விழுக் காடாக மாற்றி, அது‌ சட்டப் பாதுகாப்போடு இருக் கிறது என்றால் அதற்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தான் முக்கியக் காரணம்!

நமது குழந்தைகள் ஓரளவிற்குப் படித்து, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய கல் லூரிகளில் பொறியியல் அல்லது மருத்துவப் படிப்பு படிக்க இந்த 50 விழுக்காடு இடம் முக்கியத் தேவை.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் அண்ணா பல்கலைக் கழகத்தில் 100 இடம் இருந்தால் அதில் 50 இடம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. அதேபோல ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் 100 இடம் இருந்தால் அதில் 50 இடங்கள் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது!

இன்றைக்கு "நீட்" தேர்வினால் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் ஆசிரியர்! நாளை தமிழ்க் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வியோ, அரசு வேலையோ தடைப்படக் கூடாது என்பதற்காகவே இவ்வளவு உழைப்பு!

நம் தாத்தாக்கள் நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருந்தார்கள். பிறகு கொஞ்சம் நிலம் வாங்கி னார்கள். இப்போது நாம்தாம் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியுள்ளோம். தமிழ்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் இருக்கின்றன. இருந்தும் நம் குடும்பங்களில் யாரும் பட்டப் படிப்பு படித்ததில்லை. நாம்தாம் முதல் படிக்கட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம் குழந்தைகள் காலத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்.

அதற்குத் துணையாக இருப்பது திராவிட சித்தாந்தம் மட்டுமே! நமது தலைவர்களை நாம் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் நம் நலனை, நம் பிள்ளைகளின் நலனை முன்னிட்டு!

அவ்வகையில் 90 வயதில் 80 ஆண்டுகளைத் தமிழ்நாட்டிற்குத் தந்த மாபெரும் தலைவருக்கு, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அயல்நாட்டுத் தமிழர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்", என கார்த்திக் இராமசாமி கூறினார்.

பிலால் அலியார்

துபாய் நாட்டில் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் பிலால் அலியார்   கூறும்போது, "தமிழ்நாட்டில் நேர்மையாக அரசியல் செய்பவர் களுக்கான அளவீடாக நான் எப்போதுமே முன் வைப்பது, தேர்தல் அரசியலில் திமுகவை ஆத ரிக்கும் இயக்கங்கள், தனி நபர்களையே! 

அதனடிப்படையில் தமது 88 ஆவது வயதில் 02.12.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாகக் கூறும்போது, "தி.மு.க. தலைமையிலான திராவிடர் ஆட்சியை நிறுவிட உழைப்போம்!", என்றார்கள். அதுவே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குமான அறைகூவலாக இருந்தது.

பத்தாண்டுகளாக வலதுசாரி பார்வை கொண்ட பார்ப்பனீயத்தால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வின் ஆட்சியை அகற்றுவதே நம் நோக்கம் எனத் தெளிவாக, தீர்க்கமாகக் கூறினார் ஆசிரியர். 

ஆசிரியர் அவர்களின் வயது 91. இத்தனை ஆண்டு காலமும் தந்தை பெரியார், மரியாதைக் குரிய மணியம்மையாருக்குப் பிறகு இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி வருகிறார். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களோடும், பிற முற் போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரிடமும் திராவிடர் கொள்கைகளுக்காக இணைந்து செயல் படுபவர் மற்றும் வழிகாட்டியாக இருப்பவர்!

இந்திய, தமிழ்நாடு அரசியலில் இட ஒதுக்கீடு, சமூக நீதி, கல்வி, ஜாதி ஒழிப்பு, மத நல்லிணக்கம் போன்றவற்றிற்காகப் பெரியார் திடலை எப்போதும் திறந்து வைத்திருப்பவர். அ.தி.மு.க. ஆட்சியில் சமூகநீதிக்காக எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா வுடன் இணைந்து செயல்படவும் தயங்காதவர். 

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு அரசாணைக்காக ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீரங்கனை என்கிற பட்டத்தை ஆசிரியர் வழங்கினாலும், அந்த அரசாணைக்குப் பின்னால் உள்ள அவரின் சமரசமற்ற உழைப்பைத் திராவிட - தி.மு.க. சிந்தனையாளர்களும் உணர்ந்தே இருக்கிறோம்!

தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளும், பாஜகவின் ஜாதிய பார்வையிலான கட்டமைப்புகளும் வலுப் பெறும் நேரத்தில், திராவிட கருத்தாக்கத்தின் தேவையும், வீரியமும் இன்னும் அதிகமாகவே வேண்டியிருக்கிறது. தி.மு.க.வின் எதிர்காலமாக விளங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன், ஒரே மேடையில் ஸநாதனத்திற்கு எதிராக முழங்கிய முழக்கம் இந்தியாவெங்கும் எதிரொலித்தது; பார்ப்பனீய அமைப்புகளையும் அலறச் செய்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

2ஜி அலைக்கற்றை எனும் பெயரில் தி.மு.க. மீதும், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா மீதும் இந்தியப் பார்ப்பன-பனியா கும்பலின் தாக்குதலுக்கு எதிராக வலிமையாக நின்று, ஒட்டுமொத்தப் பார்ப்பன ஊடகங்களின் முக மூடியை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் தமிழர் தலைவர் ஆசிரியரின் பணி மகத்தானது!

நாம் இங்கு இயங்குவது நம் மக்களுக்கான சமூகநீதி அரசியலுக்காக மட்டுமே! சமூகநீதித் தளத்தில் நமக்கான நூலகமாக விளங்கும் ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்", என பிலால் அலியார் கூறினார்.

ஆர்.ஜெ. ராஜராஜன்

சிங்கப்பூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும்  ராஜராஜன் ஆர்.ஜெ., அவர்களிடம் பேசிய போது, தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். வரலாற்று ரீதியில் பல்வேறு கால கட்டங்களில் இந்த இடப்பெயர்வுகள் நிகழ்ந் திருக்கின்றன. பஞ்சம் பிழைக்க இடம் பெயர்ந்த வர்கள், விடுதலைப் போராட்டத்தை ஒட்டி இடம் பெயர்ந்தவர்கள் என நிறைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் குடியுரிமைப் பெற்று வாழ்கிறார்கள். 

காலம், காலமாக ஸநாதனத்தால் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை, திராவிடர் இயக்கம் மீட்டுத் தந்தது, அது தமிழர்களை அதிகமாகப் பரவி வாழ வழி செய்தது. இந்த மாற்றம் பல நாடுகளில், பல பெரிய நிறுவனங்களில், பல உயர் பொறுப்பு களுக்குத் தமிழர்கள் செல்லும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது!

இதற்கான அடிப்படை திராவிடர் இயக்கங் களும், அதைக் கட்டிக் காத்த தந்தை பெரியாரும் தான் என்பதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது!

அப்படியான திராவிட இயக்கத்தின் பயனால், பலன் பெற்ற ஒருவன்தான் நான் என்பதைக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்! இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி வாழும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்களை இணைக்கும் மய்யமாகப் பெரியார் திடலும், தமிழர் தலைவர் ஆசிரியரும் இருக்கிறார்கள்!

ஒவ்வொரு முறையும் ஆசிரியரை நேரில் சந்திக்கும் போதும், காணொலி வாயிலாகப் பார்க் கும் போதும், சொற்பொழிவுகளைக் கேட்கும் போதும் - அதிலிருந்து நமக்கான வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கொள்கிறோம்; நிகழ்கால கடமைகளையும் புரிந்துக் கொள்கிறோம்!

பெரியார் வழியில் வாழும் ஆசிரியர் அவர்கள் ஓய்வென்பதையே விரும்பமாட்டார். இன்றும் ஓயாது உழைக்கிறார், நாள்தோறும் நிறையப் படிக்கிறார், நிறைய எழுதுகிறார், நிறைய உரை யாடுகிறார், உடல் நலத்தையும் நல்ல வண்ணம் பேணுகிறார். அவரது "இயக்கத்தில்" திராவிடர் இயக்கமும் உயர்ந்து நிற்கிறது!

என்னைப் போன்ற பல மாணவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து, ஆசிரியரிடம் நாள்தோறும் கற்று வருகிறோம்! அவர் வழியில் நடக்கிறோம்! வாழ்க ஆசிரியர்! வாழ்க பெரியார்! வாழ்க திராவிடம்!", எனத் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் ராஜராஜன் ஆர்.ஜெ.

- வி.சி.வில்வம் -


No comments:

Post a Comment