தூத்துக்குடி, டிச.21 கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை வழங்கினார்
தலைநகர் டில்லியிலிருந்து சென்னை திரும்பியதும், மாநில அவசரகால கட்டுப்பாட்டு மய்யத்திற்கு சென்று. முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள், பால் விநியோகம் மீட்புப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் இன்று (21.12.2023) காலை விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தாமிரபரணி ஆறு மற்றும் அணைகளில் உள்ள நீர் இருப்பு பற்றியும். மீட்புப் பணிகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். பெரும் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஆய்வைத் துவங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதன் பிறகு, நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற் கொண்டார்.
முன்னதாக டில்லி சென்றிருந்த முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்றும், தென் மாவட்ட மழை பாதிப்புக்கு தற்காலிக சீரமைப்புப் பணிக்கு ரூ.2,000 கோடியும் மொத்தம் ரூ.21,692 கோடியும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று (20.12.2023)ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
No comments:
Post a Comment