ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1: தென் இந்தியா முற்போக்குச் சிந்தனை கொண்ட முதலமைச்சர்களைக் கொண்ட மாநிலங்களாக மாறிவிட்டது குறித்து?
– ம.ஆறுமுகம், வேலூர்
பதில் 1: சமூகநீதியை இந்தியாவிற்கே வழிகாட்டிய பெரியார் மண் தமிழ்நாடு; அதுபோலவே கருநாடக – மைசூர் ராஜ்ஜியம் – திருவிதாங்கூர், கொச்சி ஆகிய பகுதிகளும் மனித உரிமைப் போராட்டங்கள் வெடித்தவை – வேமன்னா, வீரேசம் போன்ற பல சீர்திருத்தக்காரர்களின் குரல் ஒலித்த பான்மையுமுடையவை. தென்னிந்தியா எப்போதும் அதிக பக்குவம் அடைந்த மண். அந்த நிலை அடிக்கட்டுமானம் சரியாக இருப்பதால் பெரும் அளவுக்கு நிலவரம் சரியாகவே உள்ளது!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட மதவெறி கோரத் தாண்டவத்தின்போது கூட தென்னிந்தியா – தென் மாநிலங்கள் தனித்தன்மையுடன்தான் பெரிதும்இருந்தன என்ற பழைய வரலாறும் நினைவு கூரத்தக்கது!
கேள்வி 2: ஹிந்தி பேசும் மக்களை காங்கிரஸ் தோல்விக்கு (மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில்) குறைசொல்வது தவறா? சரியா?
– வே.செல்வம், எண்ணூர்
பதில் 2: மக்களைப் பக்குவப்படுத்தாதது, தங்களை முன்னிலைப்படுத்தல், பதவி வேட்டை அரசியல் தலைவர்களும் – கோஷ்டி சண்டைகளும், பாழ் செய்யும் உட்பகையுமே காரணம். மக்களிடம் பிரச்சாரம் பெரிதும் சேரவில்லையே – தமிழ்நாடு போல! மக்களைக் குறை சொல்லி என்ன பயன்?
கேள்வி 3: 2015 வெள்ளத்தின் போது 8 நாள்கள் வரை இயங்காத சென்னை நகரம், 2023இல் இரண்டே நாள்களில் 60 விழுக்காடு பகுதி பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதே?
– ம.வெங்கடேசன், மதுரை
பதில் 3: அரசியல் வயிற்றெரிச்சல்காரர்கள் இதை மாற்றி உண்மைக்குத் திரை போட்டல்லவா பேசுகிறார்கள்.
வரலாறு காணாத இவ்வளவு மழை – 47 ஆண்டுகளுக்கு முன் பெய்த அதே அளவு மீறிய நிலையும் அப்போது இல்லாதிருந்தும் கோட்டூர்புரத்தில்கூட படகு விட்ட நிலை ஏற்பட்டதை ஏனோ எடப்பாடிகள் வசதியாக மறந்துவிட்டனர். அமைச்சர்களே திருப்பி அனுப்பப்பட்டனரே அது வசதியாக மறந்துவிட்டதா?
கேள்வி 4: “தாழ்த்தப்பட்ட – பழங்குடியின உயர்கல்வி மாணவர்களில் ஜாதிவெறி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் புள்ளிவிவரம் எங்களிடம் இல்லை” என்று ஒன்றிய அரசு கூறியுள்ளதே?
– ச.பாரி, அரியலூர்
பதில் 4: இதிலிருந்து அச்சமூகத்தின் மீதும், ஒடுக்கப்பட்டோர் மீதும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியமும், ஆளுமையின் பாரபட்சமும் – உயர்ஜாதி அல்லது பசு மாட்டுப் பக்கமே அக்கறை உள்ளது என்பதும் புரிகிறதல்லவா?
கேள்வி 5: பிரபல முகம் என கருதப்பட்ட கமல்நாத் செய்யாததை இளைய முகம் என்று கருதப்பட்ட ரேவந்த் ரெட்டி செய்து சாதித்துள்ளாரே?
– மா.காளிமுத்து, திண்டிவனம்
பதில் 5: மற்றவர்களை மதிக்கத் தெரியாத பிரபலங்கள் காட்டும் வழி தோல்வியே; மக்களை நோக்கிப் பாயும் ஏவுகணையே இளைஞர்களுக்கு வெற்றி, மடியில் விழுந்த கனியாகிக் கிடைக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை! காங்கிரஸ் கற்க வேண்டிய பாடம்! மற்ற அரசியல் கட்சிகளுக்கும்கூட!!
கேள்வி 6: ஒருபுறம் வந்தே பாரத் என்ற பெயரில் ஜிகினா காட்டினாலும் மறுபுறம் சாதாரண ரயில்களில் ஆடு மாடுகளை விட மோசமாகப் பயணிகள் நடத்தப்படுகிறார்களே?
– தி.சந்திரன், புதுக்கோட்டை
பதில் 6: இது அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா போன்ற உச்ச பணக்காரர்களுக்கான ஆட்சி. இதில் ஏழை மக்கள் படும் நிலைக்கு இதுவே சரியான உதாரணம் ஆகும்!
வெகுமக்களை ஓட்டு வாங்கும்போது ஏமாற்றினால் போதும் என்ற நினைப்பு.
கேள்வி 7: தேவையில்லாத ஸநாதனப் பேச்சுதான் தோல்விக்குக் காரணம் என்று வடக்கே உள்ள சில மாநில காங்கிரஸ் தலைவர்களே புலம்புகிறார்களே?
– வ.மணியரசன், நாகை
பதில் 7: அரசியல் அரைவேக்காடுகளின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துங்கள். தி.மு.க. ஆதரித்துப் பிரச்சாரம் செய்த தெலங்கானாவில் ஆட்சி வந்தது எப்படி?
ஸநாதனம் அங்கு என்னவாயிற்று? தி.மு.க.வுக்கு எதிரான பிரதமர் மோடியின் பேச்சு எடுபட்டதா? அங்கே தானே பேசினார் அவர்? ஹிந்து கோயில்களின் சொத்துகள் – தி.மு.க. பற்றி?
கேள்வி 8: மத்திய இந்தியாவில் அதிக மழையால், விளைச்சல் பாதிப்பால் உணவுப்பொருள் விலை ஏற்றம், சென்னை புயல், மழை, வெள்ளம், டில்லி காற்று மாசு, வட கிழக்கு இந்தியாவில் கடுமையான வறட்சி போன்ற புவிவெப்பமயமாதல் விளைவுகள் என இந்த ஆண்டை கடுமையாக பாதித்துவிட்டனவே – வரும் ஆண்டிலாவது இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா உலகம்?
– ப.அருள்ராஜ், வேளச்சேரி
பதில் 8: தேசிய நதிகள் இணைப்புத் திட்டம் இதுவரை செயல்பட்டதா? அதன் விளைவே இப்படிப்பட்ட முரண்பட்ட இரு வேறு துன்பக் காட்சிகள்!
பெரு நகரங்களை அழகுடையதாக்குகிறோம் என்றும், மற்ற மற்ற டாம்பீகங்களுக்குமே, உலக வங்கிக் கடன்கள் இது போன்ற திட்டங்களில் செலவாகிறது. மக்களை நிரந்தரமாகக் காப்பாற்றி விட்டு பிறகு அவைகளைப் பற்றி யோசிக்கும் பொதுநல மனப்பாங்கு ஆட்சியாளர்களுக்கு இல்லையே!
கேள்வி 9: கோடைகாலத்தில் மும்பை, மழைக்காலத்தில் நாக்பூர் என மராட்டிய மாநில அரசின் தலைமைச் செயலகம் இரண்டு நகரங்களில் செயல்படுவது போல் தமிழ்நாட்டிலும் செயல்பட்டால் ஒட்டுமொத்த அதிகாரவர்க்கமும் ஒரே இடத்தில் குவிவது தடுக்கப்படுமே?
– வே.வேலுச்சாமி, திருத்தணி
பதில் 9: முன்பு வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் ஊட்டி – உதகமண்டலம் சில மாதங்கள் தலைநகராக செயல்படும் தேவை. தலைநகர் ஒரு நகரில் இருந்தாலும், சில அலுவலகங்களைப் பரவலாக வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பிரித்து, மின், அஞ்சல், இணைய வசதி, கணினி வளர்ச்சி, வீடியோ கான்பரன்சிங் என வசதிகள் உள்ளபோது அவைகள் மூலம் எங்கே இருந்தும் தகவல்களைப் பெற்று, ஆணைகளையும் இடலாம்; ஒரு நகரத்தில் இருந்தே பல ஆளுமை – அலுவலகங்கள் பல பகுதிகளில் – முக்கிய கூட்டங்களைத் திருச்சி, மதுரை, கோவை, சேலம் போன்ற ஊர்களில் நடத்தலாம். சென்னையை மய்யப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

No comments:

Post a Comment