– வெற்றிச்செல்வன்
தந்தை பெரியாரின் வழியில் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த அன்னை மணியம்மையார் 1978ஆம் ஆண்டில் மறைந்தபோது, ஆசிரியர் அவர்கள் பின்வருமாறு எழுதினார். “கருஞ்சட்டைக் கடமை வீரர்களான நாம், இராணுவக் கட்டுப்பாடு காக்கும் லட்சிய வீரர்களாம் நாம், நமது பயணத்தில் எத்தகைய சோதனைகளும், சூறாவளிகளும் ஏற்படினும், தொய்வின்றி, துணிவுடன் தொடருவோம்” (விடுதலை, 20.03.1978).
நாற்பத்து அய்ந்து ஆண்டுகள் கடந்து விட்டன. தனது வார்த்தைகளில் இருந்து கடுகளவும் விலகாது கழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் நமது ஆசிரியர்.
முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின்னர், 40 ஆண்டுகள் கழித்து, தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாதைக்குப் பேராபத்து வந்தபோது, அதைத் தந்தை பெரியாரின் வழியில் போராடித் தடுத்து நிறுத்தினார் ஆசிரியர். தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு பிரச்சினையில், ஆசிரியரின் போராட்டமும், வழிகாட்டலுமே அந்த ஆபத்தை விலகச் செய்தது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் அன்று, இந்தியாவிற்கே தேவைப்பட்ட வழிகாட்டல். இதைச் சுட்டிக் காட்டியவரும் ஓர் இந்தியத் தலைவர்!
திராவிடர் கழகத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது, சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை ஆசிரியர் முன்மொழிந்தபோது, வழிமொழிந்தவர் விழாவில் கலந்து கொண்ட மேனாள் இந்தியத் தலைமை அமைச்சரான வி.பி.சிங். மண்டல் பரிந்துரையின்படி இட ஒதுக்கீடு ஆணையைத் தனது தலைமையில் அமைந்த தேசிய முன்னணி அரசு பிறப்பித்தபொழுது, அவரது அரசுக்கு ஏற்பட்ட பல்வேறு தொல்லைகளையும், எதிர்ப்புகளையும் நினைவுகூர்ந்த வி.பி. சிங், அந்த நேரத்தில் திராவிடர் கழகமும், ஆசிரியரும் பேராதரவு நல்கியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். இதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக ஆசிரியர் இருந்ததைச் சுட்டிக் காட்டியதோடு, சமூகநீதிக்காக நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கான அமைப்பையும், இயக்கத்தையும் தலைமையேற்று நடத்த திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் முன்வர வேண்டும் என்றும் வி.பி.சிங் கேட்டுக் கொண்டார் (விடுதலை, 03.10.1994).
சமூகநீதி உரிமை காத்ததற்காக இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் வி.பி.சிங், இந்தியாவிற்கு வழிகாட்டித் தலைமையேற்க முன்மொழிந்தது ஆசிரியர் அவர்களையே! நவம்பர் 27 அன்று, சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங் அவர்களின் சிலையைத் திராவிட மாடல்வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது இவ்விடத்தில் நினைவுகூர்வதற்குப் பொருத்தமான செய்தி.
இந்த நிலைமை இன்றும் மாறவில்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, வடவர் புலம்பெயர்வு என்று தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த எந்தப் பிரச்சினையாக இருக்கட்டும், திடல் காட்டும் திசை என்ன என்பதை எதிர்பார்த்து இருக்கும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டு இருப்பதே அவரது கொள்கைப் பாதை கடந்து வந்திருக்கும் பெருவழிக்குச் சான்று! அண்மையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ‘மனுதர்மக் கல்வி’ திட்டத்தின் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நாட்டில் அதற்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டது “வருமுன் காக்கும்” அவரது சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.
தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களின் இந்தக் கொள்கை வழிகாட்டல் இன்றுபோல் என்றும் தொடர வேண்டும் என்பதுதான் தமிழர்களின், தமிழர் உரிமையைக் கோருபவர்களின் பெருவிருப்பம்.
No comments:
Post a Comment