கொட்டிவாக்கத்தில் தேங்கிய மழைநீரை கடலுக்குள் திருப்பி அனுப்ப புதிய கால்வாய் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

கொட்டிவாக்கத்தில் தேங்கிய மழைநீரை கடலுக்குள் திருப்பி அனுப்ப புதிய கால்வாய் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சாதனை

சென்னை, டிச.9 – மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன.
சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகர், திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள குடி யிருப்புகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. சில பகுதிகளில் மழைநீர் இடுப்பளவு சூழ்ந்துள்ளதால், அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். கடந்த 3 நாட்களாக மக்கள் தவிப்படைந்து இருக்கும் நிலையில், மற்ற இடங்களை போல இந்த பகுதிகளில் வெள்ளநீர் வடிய வாய்ப்பு இல்லை என்பதால், அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி செயற்பொறியாளர்கள் புதிய முயற்சியை கையாண்டனர்.

அதன்படி மாநகராட்சி செயற்பொறியாளர் புருஷோத்தமன், உதவி செயற்பொறியாளர்கள் அசோக் குமார், திவிசூர கணபதி உள்ளடங்கிய குழுவினர், தேங்கியுள்ள வெள்ளநீரை சற்று தொலைவில் உள்ள கடலுக்குள் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

இதற்காக அருகேயுள்ள சமூக ஆர்வலர்களின் உதவியுடன் தற்காலிகமாக ஒரு கால்வாயை வெட்டினர். கால்வாய் வெட்டியதும், தேங்கியிருந்த வெள்ளநீர் சீறிப் பாய்ந்து கடலுக்குள் சென்றது. நீரின் அளவும் குறைய தொடங்கியது.

மக்கள் மனதிலும் நம்பிக்கை வரத் தொடங்கியது. அந்தவகையில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளநீர் கால்வாய் வழியே கடலுக்குள் சென்று கலந்தது.
மாநகராட்சி செயற்பொறியாளர்களின் மாற்று யோசனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வர தொடங்கியிருக்கிறது. அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கைக்கு, அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment