தூத்துக்குடியில் அமைந்துள்ள பெரியார் மய்யம் கட்டடத்தில் 25.12.2023 திங்கள்கிழமை இரவு ஏழு மணிக்கு அத்துமீறி உள்புகுந்த இரண்டு நபர்கள் ‘நாங்கள் பி.ஜே.பி.காரர்கள்” என்றும், “இங்கு தி.க. கொடி பறக்கக் கூடாது, மய்யத்தில் தட்டி விளம்பரம் வைக்கக் கூடாது’ என்றும் கூச்சலிட்டு, கழகக் கொடியைப் பிடுங்கி எறிந்தும், தட்டியைக் கிழித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் மய்யம் பாதுகாவலர் போஸ் அவர்களையும் “கொன்று விடுவேன்” என்று மிரட்டி விட்டு, தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத் தலைவரையும் இழிவாகப் பேசி விட்டுச் சென்றனர்.
அதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து, புகாரும் வழங்கப்பட்டது. இரவு இரண்டு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காலையில், காவலர்கள் சென்றுவிட்ட நிலையில், நேற்று (26.12.2023) காலை பெரியார் மய்யத்தின் முன் கூடிய 15 பேர் கொண்ட கும்பல் பெரியார் மய்யத்துக்குள் புகுந்து திராவிடர் கழகத் தொழிலாளரணி செயலாளர் முத்தையாபுரம் செல்வராஜ், பெரியார் மய்யப் பாதுகாவலர் போஸ் ஆகியோரைத் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வெட்டுப்பட்ட இருவரும் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், காப்பாளர்கள். சு.காசி, மா.பால்இராசேந்திரன், மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார், திராவிடர் விடுதலைக் கழக பால்பிரபாகரன், பால்பாண்டி, தந்தைபெரியார் திராவிடர் கழக பிரசாத், கட்டபொம்மு, தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ், தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன், மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யம் தாஜ்,மே.17 இயக்கம் அர.இராகவன், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித் ஆகியோர் பெரியார் மய்யத்திற்கு வருகை தந்து ஆதரவளித்தார்கள். அனைவருடனும் சென்று மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் எவரும் கைது செய்யப் படவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செல்வராசு, போஸ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment