ஸநாதனத்தை வேரறுக்கும் வெற்றிவீரர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

ஸநாதனத்தை வேரறுக்கும் வெற்றிவீரர்

புலவர் பா.வீரமணி

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர்கள் சிலரைப் போன்று ஒரு துறையில் மட்டும் வல்லவர் அல்லர்; அவர் பல்துறை ஆற்றலாளர். பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், இதழாசிரியர், இயக்கத் தலைவர், சமுதாயச் செயற்பாட்டாளர், கொள்கைப் பரப்புரையாளர், திட்ட வல்லுநர், வழி காட்டும் ஆசான். இவை அனைத்திலும் அவர் தனித்திறம் கொண்ட தகைமையாளர். அதனால்தான் அவர் ஆசிரியர். அவர் விடுதலை இதழுக்கு மட்டும் ஆசிரியர் அல்லர். மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசிரியர். என்றென்றும் ஆசிரியர்; அதனாலன்றோ ஆசிரியர் என்னும் சிறப்புப் பெயர், மாண்பமைப் பெயர் அவரிடம் மட்டுமே சென்று ஒன்றிவிட்டது! ஆசிரியர் என்னும் பெயர் அவரிடம் ஒன்றிவிட்டதால், அப்பெயருக்கு மேலும் கூடுதலாகப் பெருமை ஏற்பட்டு விட்டது. பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருப்பினும், ஆசிரியர் என்னும் சொல், நம் ஆசிரியரிடத்தில்தான் தஞ்சம் அடைந்துள்ளது. அச்சொல், தம் சொல்லின் வல்லமை அறிந்து, வல்லமையுடைய ஒருவரிடம் குடி அமர்ந்துவிட்டது போலும்!

ஆசிரியர் என்னும் அருஞ்சொல் நம் ஆசிரியரி டத்தில் தஞ்சம் அடைந்ததற்குக் காரணம் என்ன? போதிக்கும் ஆசிரியர், கல்லாமையை நீக்கி அறிவை வளர்க்கிறார். கல்லாமை என்னும் குற்றத்தைப் போக்கு வதைப் போல், நாட்டிலுள்ள குற்றத்தைப் போக்குபவரே சிறந்த ஆசிரியர்; நம் ஆசிரியர் மக்களுக்குப் பகுத்தறி வையும், சமுதாய நீதியையும் போதிப்பதோடு நாட்டில் அவ்வப்போது ஏற்படும் தீங்குகளையும், ஆபத்து களையும், அடையாளம் கண்டு அவற்றை ஒழிக்கும் பணியில் அயராது சோராது களமாடுகிறார் என்பதுதான். அதனால்தான் அச்சொல் அவரிடம் தஞ்சம் புகுந்து விட்டது.

அவரது தனிச் சிறப்பு

இதுதான் மிக  முக்கியமானது. மக்களுக்கு எவ்வளவு கல்வியைப் போதித்தாலும், அரசாட்சியில், கல்வித் துறையில் கேடுகள் சூழுமாயின் வெறும் கல்விப் போதனையாகி விடும். அப்படி வந்த கேடுகள்தான் 'நீட்' தேர்வும், 'விஸ்வகர்மா' யோஜனாவும் இவை இரண்டிலும் ஆசிரியர் காட்டிய முனைப்பும் முயற்சியும், உழைப்பும், கொள்கைப் பரப்புரையும் என்றென்றும் நன்றி கூரத்தக்கது. இவை இண்டிலும் ஆசிரியர் ஊர் ஊராக, பட்டி தொட்டியாகச் சுழன்று அடிக்கும் சூறாவளி போல சுழன்று சுழன்று மக்களிடையில் பரப்புரை செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆசிரியர் பல மாதங்களாக ஊர் ஊராகச் சுற்றி பரப்புரை செய்ததை நாம் அறிவோம். அவருடைய வலுவான பரப்புரையால் தான் ஊர்களும் தெருக்களும் தத்தம் பெயர்களைப் புதுப்பித்துக் கொண்டன. கடந்த தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெற்று, அரசு அமைத்ததற்கு ஆசிரியரின் பங்களிப்பு மகத்தானது. இந்தக் கடும் உழைப்பைத்தான் நீட் தேர்வை எதிர்ப்பதிலும் காட் டினார். கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச்சு மாதம் வரை 29 நாள்களில் 58 கூட்டங்களில் இரவு பகலாகப் பரப்புரை செய்துள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் எந்தத் தலைவரும் இத்துணைக் கடும் பிழைப்பைச் செலுத்தினார் அல்லர். இது சாதாரணமானது அன்று. அவருடைய கடும் உழைப்பைக் கொண்ட பரப் புரைகளில் இதுவும் ஒரு மைல்கல். இந்தக் கடும் உழைப்பை ஆசிரியர் தொண்ணூறு வயதை நெருங்கும் காலத்தில் செய்துள்ளார். இதுதான் மிக முக்கியமானது. இந்தக் கடும் பணியை ஒருவர் இளம் வயதில் அல்லது நடு வயதில் செய்வது வேறு; முதுமையில் செய்வது என்பது வேறு; அதுவும் தொண்ணூறு வயதில் செய்வது என்பது எண்ணிப் பார்க்க முடியாதது. தந்தை பெரியார் மூத்திரப்பையுடன், உடல் நன்றாக இயங்காத நிலை யிலும், மக்களுக்காக ஊர் ஊராகச் சுற்றித் தொண்டு செய்தார். அதுவும் தொண் ணூறு வயதைக் கடந்த போதும் செய்துகொண்டே இருந்தார். அவரால் அடையாளம் காட்டப் பெற்றுத் தலைவராக்கப்பட்டவர்தான் நம் ஆசிரியர். அதனால் தான் நம் ஆசிரியரின் தொண்டு புரிகிறது; விளக்க முறுகிறது எனலாம்.

"துன்பமுற வரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை"

என்றார் வள்ளுவர் பெருந்தகை. இந்தக் குறட் பாவின் இலக்கணம்தான் நம் ஆசிரியர். இப்பணி மேலும் தொடர்கிறது.

ஆசிரியரின் தொய்வில்லாத அரும்பெரும் பணி யின் நீட்சிதான் 'விஷ்வ கர்மா' திட்டத்திற்கு எதிராக அவர் நிகழ்த்தி வரும் போராட்டமும்,  சுதந்திர நாளில் கொடியேற்றும் போது பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டமும் ஸநாதனத்தின் வெளிப்பாடேயாகும். ஸநாதனம், ஜாதி ஏற்றத் தாழ்வையையும் வருணப் பாகுபாட்டையும், மூடநம்பிக்கையையும், பொருளாதார ஏற்றத் தாழ்வையும் காலந்தோறும் நிலைநிறுத்த முயல்வது. மாற்றத்தை முன்னேற்றத்தை விரும்பாதது; அவற்றிற்கு முற்றிலும் பகையானது -  சுருங்கக் கூற வேண்டுமாயின் ஸநாதனம், தீண்டாமையை நிலை நிறுத்துவது; பால்ய விவாகம், பலதார மணம், விதவை புறக்கணிப்பு, பெண்ணடிமைத்தனம், உடன்கட்டை யேறும் நிலை போன்றவற்றிக்குப் பேராதரவு அளித்து அவற்றைக் காலந்தோறும் காக்க முயல்வது, மனிதப் பிறவியில் பார்ப்பனனே உயர்ந்தவன் என்றும், அவனே வாழப் பிறந்தவன் என்றும் பறை சாற்றுவது. இவற்றைத்தான் ஸநாதன தர்மம் என்று அவர்கள் கூச்சமின்றி, சிறிதும் நாணமின்றி கூறி வருகின்றனர். இந்திய அசியல் சட்டம், மக்கள் அனை வரும் சமம் என்று வரையறுக்கும் போது, ஸநாதனிகள் இன்றும் அதனை மறுத்து வகிறார்கள். இந்தச் ஸநாதனத்தைதான் ஒன்றிய அரசின் அமைச்சர்களும், பா.ஜ.க. தலைவர் களும், ஆளுநர் ரவியும் கூச்சமின்றி ஏற்றிப் போற்றி வருகிறார்கள்.

ஸநாதன சிந்தனை எப்படியெல்லாம் நாட்டில் பேயாட்டம் போட்டுள்ளது என்பதற்குப் பழைய வரலாற்றைச் சற்றுத் திரும்பி நோக்கினால் புலப்படும். கணவன் இறந்த பின்னர் மனைவி உடன்கட்டை ஏற்றப்படும் நிலையைத் தடை செய்ய ராஜாராம் மோகன்ராய் தீவிர கிளர்ச்சி செய்தபோது ஸநாதனிகள் அவருக்கு எதிராகப் போராட்டத்தை நிகழ்த்தினர். பெண் மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த மனப் பாங்கை அந்த எதிர்ப்பின் மூலம் உணரலாம். இதில் வியப்பு என்னவென்றால் நன்கு கற்றவர்களே அதற்கு ஆதரவாக இருந்ததுதான். 1932இல் காந்தியார் தீண் டாமை ஒழிப்பு இயக்கம் தொடங்கியபோது, காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த மதன் மோகன் மாளவியா, பல தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு காந்தியாருக்கு எதி£க களம் இறங்கியுள்ளார். 1939இல் மதுரை மீனாட்சி யம்மன்கோயிலில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள் ஸநாதனிகள். தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதைக் காஞ்சி சங்கராச்சாரியார் கடுமையாக எதிர்த்துள்ளார். அந்த எதிர்ப்பின் கண்டனத்தை ஒருமுறை அவர் காந்தி யாரிடத்தில் நேரிலேயே தெரிவித்துள்ளார். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தால், ஸநாதனி களுக்கு மனிதத்தின் மீது கொண்டுள்ள இழிவான எண் ணத்தை இரக்கமற்ற உணர்வை எளிதில் உணரலாம். ஜாதிக்கொரு நீதியைப் பேசுவதும் பார்ப்பானை உயர்த்திப் பேசுவதும் தான் ஸநாதனம். இந்தச் ஸநாதனத்தைத் தான் பாரதியார்

"சூத்திரர்க் கொருநீதி தண்ட

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின் - அது

சாத்திரமன்று சதியென்று கண்டோம்"

என்றார். இந்தச் சதிவலைதான், கொள்கைதான் ஸநாதனம். இந்தச் ஸநாதனவாதிகள் எப்படிப்பட்ட வர்கள்? அதனையும் பாரதியார் கூறியுள்ளார்.

உடன் பிறந்தார்களைப் போலே - இவ்

உலகில் மனித உடல்

திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்

தின்று பிழைத்திட லாமோ?

என்று மனிதத்தை நோக்கிக் கேள்வி எழுப்பினார். சக மக்களைச் சமமாக மதிக்காதாரை மனித உண்ணிகள் என்கிறார். அதாவது cannibals என்கிறார். மனித முன் னேற்றத்தைத் தடுப்பவனும், மனிதனைத் தின்பவனும் ஒரு வகையானவனே என்கிறார். ஏறக்குறைய ஸநாதன வாதிகளும் அப்படிப்பட்டவர்களேயாவர்.

ஸநாதனவாதிகள் தம் ஜாதியையோ வரு ணத்தையோ மட்டுமே மதிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் பிறருடைய வளர்ச்சியில், முன்னேற்றத்தில் சிறிதும் பொறுப்போ அக்கறையோ இல்லாதவர்கள். மூதறிஞர் இராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது 1952இல் குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். அத்திட்டத்தின்படி, பள்ளியில் படிப்போர் காலையில் பள்ளிப் படிப்பையும் பிற்பகலில் தம் குடும்பத் தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். 

பண்டைய குருகுலக் கல்வியையும், ஒரு வகுப்பா ருக்கே கல்வி என்னும் திட்டத்தைக் கட்டுடைத்து - மெக்காலே கல்வியை எல்லோருக்கும் உரிமையாக்கினார்.

 அத்திட்டத்திற்கு வேட்டு வைத்துப் பார்ப்பனரைத் தவிர்த்து, மற்ற அனைத்துச் சமூகத் தாரையும் இராஜாஜி பின்னுக்குத் தள்ள முயன்றார். இதுதான் ஒரு தேசியத் தலைவர், மூதறிஞர் செய்த அரும்பணி. அர்த்தசாஸ்திரம், மனுதர்மம், பகவத் கீதை ஆகியவற்றின் கொள்கைச் சாரமே ஸநாதனம். அந்தக் கொள்கையின் பின்னோ டினார் ராஜாஜி. அந்நாளில், இந்தக் கொடும் திட்டத்தை எதிர்த்துப் போராடி வெற்றி வாகை சூடியவர்தான் தந்தை பெரியார்.

  "படிச்சவன் சூதும் பாவமும் செய்தால்

போவான் போவான் அய்யோவென்று போவான்"

என்று வெகுண்டு பாடினார் பாரதியார். ராஜாஜி செய்த சூதால் அவருடைய அமைச்சரவையும், எதிர் காலமும் சரிந்தன.

ஸநாதனம் என்றால் நிலையானது என்று பொருள் கூறுகின்றனர். இச்சொல் பகவத் கீதையில் ஆன்மா நிலையானது என்ற தொடரில் (அத்தியாயம் 15 - சுலோகம் 7) வருகிறது. அதாவது ஸநாதனம் என்றால் நிலையானது என்று பொருள். ஏற்றத் தாழ்வையும், சமூக அநீதியையும் கொள்கையாக்கி, சிறிதும் ஈவிரக்கமின்றி, நியாயமின்றி, கூச்சமின்றி ஸநாதனம் என்று பெயர் வைத்துள்ளார். அனைத்து ஏற்றத் தாழ்வுகளும் நிலை யானவை என்று கூறுவதன் மூலம் மற்ற மக்களைக் காலந்தோறும் ஊமைகளாக அடக்கி வைப்பதில் அவர்களுக்கு இருக்கும் அதிகார ஆணவத்தையே  இது காட்டுகிறது. 

எதுவும் நிலையானது இல்லை என்கிறது அறிவியல். "மாற்றம் ஒன்றைத் தவிர நிலையானது ஒன்றுமில்லை" என்றார் ஹொக்ளிட்டிஸ்" ஒவ்வொரு பொருளும் விநாடிதோறும் மாறுகிறது" என்றார் புத்தர். இவர்களைப் போன்றே மார்க்சும் "அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன" என்றார். "மாற்றம் என்பது இயற்கையின் அடிப்படை விதி" என்றார் ஓர் ஆங்கிலக் கவிஞர். இதுதான் முழு உண்மை; அறிவியல் உண்மை. இந்த உண்மையை உணர மறுக்கின்றார்கள் ஸநாதனவாதிகள். தங்களின் மேலாதிக்கம்  ஒழிந்து விடுமோ என்ற அச்சமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால்தான் பொய்யை மெய்யாக்க முயல்கிறார்கள் போலும்! பகவத் கீதையும் அதன் சமயமான வைதிகமும் ஆன்மா நிலையானது என்கின்றன. இதுவும் இமாலயப் பொய். உலகின் தலைசிறந்த அறிவியலாளாரான அய்ன்ஸ்டின், "ஆன்மா என்பதும் மறுபிறப்பு என்பதும் அறிவியலுக்குப் புறம்பானவை" என்றார். ஆனால், பெரும் அறிவு ஜீவிகளாகிய ஸநாதனிகள் ஆன்மாவும், ஸநாதனமும் நிலையானவை என்று இன்றைய அறிவியல் உலகிலும் ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்களை உயர்த்திக் காக்கவும், பிறரைத் தொடர்ந்து தாழ்த்தவும் அப்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுகாறும் கூறியவற்றால், ஸநாதனம் எத்துணைத் தீங்கானது, பெருங்கொடுமையானது என்பதை உணரலாம். அந்த ஸநாதனத்தின் ஒரு நச்சுக் கோட்பாடே 'விஸ்வகர்மா' யோஜனா.

விஸ்வகர்மாவின் உண்மை நிலையை உள்ளவாறு நம் ஆசிரியர் உணர்ந்ததால்தான், 'நீட்' தேர்வை எதிர்த்துச் சூறாவளி பரப்புரை செய்ததுபோல அவர் விஸ்வகர்மா யோஜனாவையும் எதிர்த்துக் களமாடி உள்ளார். அத் திட்டத்தை எதிர்த்து 25.10.2023 முதல் 15.11.2023 வரை அதாவது 16 நாட்கள் முக்கிய மாவட்டங் களில் மக்களை நாடி, அளவளாவி தம் நாவன்மையால் தெளிவு மிகு பரப்புரை செய்துள்ளார். இந்தப் பரப்புரை யிலும் ஆசிரியரே முதல் மனிதராக இருந்துள்ளார். எங்கெல்லாம் தீங்கு ஏற்படுகிறதோ எங்கெல்லாம் சமூக அநீதி நிகழ்கிறதோ அங்கெல்லாம் நின்று போராடும் வீரர்தான் நம் ஆசிரியர். தந்தை பெரியார் தாம் வாழும் காலத்தில் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டுத் தலைவர் களுக்கும் வழிகாட்டியாக, பாதுகாவலாக எவ்வாறு இருந்தாரோ  அவ்வாறுதான் நம் ஆசிரியரும் உள்ளார். தந்தை பெரியாரின் தலைமைச் சீடர் அன்றோ அவர்! அதனால் தான் நம் சமுதாயத்திற்காக நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

"உண்ணுவதும் உறங்குவதும் தவிர்த்து - கூடி

உழைப்பதுவே யாம் மகிழும் இன்பம்"

என்றார் அறிவியல் அறிஞர் கவிஞர் குலோத் துங்கன். இக்கவிதைக்கு ஏற்ப விளங்குபவர்தான் நம் ஆசிரியர். அகவை தொண்ணூறைக் கடந்தும் தொண் டாற்றும் நம் ஆசிரியரை சங்க இலக்கிய மொழியால் "தொல்லாணை நல்லாசிரியர்" நீடு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

"முதுமையில் தளர்தல், மற்றும்

மூப்பினில் வலிமை குன்றல்

பொதுவென்னும் மண்ணில் - நீயோ

பொழுதொரு புதுமை பெற்று

இளமையோ டொளிர்வாய்; எங்கள்

இன்மையும் இருளும் போக்கும்

வளமெலாம் தாங்கி நிற்பாய்"

- கவிஞர் குலோத்துங்கன்


No comments:

Post a Comment