தூத்துக்குடி. டிச. 23 தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் யாரும் செல்ல முடியாத இடங்களுக்கும் பெரியார் தொண்டறம் தோழர்கள் முதலில் சென்று மக்களின் பசி தீர்த்து வருகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட பேரிடரால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. தமிழ்நாடு அரசு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்று மீட்புப்பணிகளையும், நிவாரணப்பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. 21.12.2023 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களையும் பார்வையிட்டு மீட்புப்பணிகளையும், நிவாரணப்பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். அரசு தவிர தன்னார்வலர்கள் பலர் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரியார் தொண்டறம் அமைப்பு சார்பில், சென்னையில் நிவாரணப்பணிகள் செய்தது போன்றே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கழகக் காப்பாளர் காசி அவர்களின் ஒருங்கிணைப்பில் நெல்லை கார்த்திகேயன், முத்து கணேசன், வழக்குரைஞர் வீரன், மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றது.
“Einstein Support Team”என்ற வாட்ஸ் ஆப் மூலம் ஆலடி எழில்வாணன் ஒருங்கிணைப்பில் ஒரு குழு செயல்பட்டு வருவது போல், பகுத்தறிவாளர் கழகத் தோழர் முத்து கணேசன், ”வெள்ள நிவாரணம் – தூத்துக்குடி” எனும் பெயரில் ஒரு வாட்ஸ் ஆப் குழுவைத் தொடங்கி, அதன் மூலம் ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர். 19 ஆம் தேதி ஆழ்வார் தோப்பு கிராமத்தில் பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்ற நிலையில், பெரியார் தொண்டறம் தோழர்கள் தண்ணீரைக் கடந்து சென்று அங்கிருக்கும் மக்களுக்கு உணவளித்தனர். மக்கள் தோழர்களுக்கு நன்றி தெரி வித்து, வேறு யாரும் வரவில்லை. நீங்கள் தான் முதலில் வந்திருக்கிறீர்கள் என்று கைகூப்பியிருக்கின்றனர். இடுப்பளவு தண்ணீரில் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளதால், தோழர்கள் சளைக்காமல் ஒரு பெரிய டிராக்டரை அமர்த்திக்கொண்டு, அதில் தூத்துக்குடி மாவட்டம் டேவிஸ் புரம், மாதா நகர், தேவர் காலனி, அம்பேத்கர் நகர், பெரியார் சமத்துவபுரம், சோரிஸ்புரம், கோமாஸ்புரம் ஆகிய பகுதிகளில் கொடுத்துள்ளனர். தாளமுத்து நகரில் உள்ள திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் ஆரம்பப்பள்ளியில் 240 பேர் தங்கி இருப்பதாக தகவல் வந்து, அவர்களுக்கும் உணவு கொண்டு போய் சேர்க்கப்பட்டது.
”வெள்ள நிவாரணம் – தூத்துக்குடி” எனும் வாட்ஸ் ஆப் குழுவை ஒருங்கிணைத்து வரும் முத்து கணேசன் கூறும் போது, “இடுப்புக்கு மேல் தண்ணீர் தேங்கியிருக்கும் பாரதி நகர், அம்பேத்கர் நகருக்கு நிவாரணப்பணிகள் செய்துவிட்டு திரும்பும் போது, நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றோர் 40 க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியில் வர விரும்பினர். அவர்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு, தூத்துக்குடி முதன்மைச் சாலையில் அவர்கள் இறங்க விரும்பிய இடத்தில் இறக்கிவிட்டனர். அதுபோல, தாளமுத்து நகரில் நிவாரணப்பணிகள் முடிந்து திரும்பும்போதும் பாரதி நகருக்கு இரண்டாம் முறை சென்று உணவு வழங்கியுள்ளனர். டிராக்டர் மட்டுமல்ல, தேவைப்படுகின்ற இடங்களில் இருசக்கர வாகனம், மகிழுந்து போன்ற வாகனங்களையும் பயன்படுத்தி தொண்டு செய்து வருகின்றனர்.
உணவுத் தேவைகள் தவிர மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் அதிகம் தேவைப்படுவதால் அதிலும் பெரியார் தொண்டறம் தோழர்கள் கவனம் செலுத்தினர். இதற்காக தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் காசி அவர்களின் முயற்சியில் திருச்சியிலிருந்து 1000 பால் பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டு, நேற்று (22.12.2023) வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment