ஜாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய சரித்திரத் தலைவன் தன் தலையினை சாய்த்து விட்டார். அவர் கடந்த காலத்தில் காட்டிய சாகசங்கள் சாகா வரம் பெற்றவை. அவை என்றும் மறைக்க முடியாதவை ஆகும். அவரது மறைவுக்குப் பிறகு இறுதி மரியாதை செலுத்தியவர்களின் வரிசைகளை எண்ணிப் பார்த்தால் அவை நன்றாகத் தெரியும். இதனை இந்தத் தலைமுறையினர் புரிந்துகொள்வது அவசியமாகும்.
இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெருந்தலைவர்கள் அவரது சீரியப் பணிக்கு அவரது மறைவின்போது எடுத்துக் காட்டிய சான்றுகள் நமது மனக்கண்முன் நிற்க வேண்டும். இத்தகைய பெருமைக்குரிய பெருந்தலைவராக புரட்சி வீரராக விளங்கிய பெரியார் நாட்டிலே ஒரு புதிய திருப்புமுனையினை ‘குடிஅரசு’ப் பத்திரிகை மூலம் பரப்பினார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அந்தப் பத்திரிகையில் தான் “நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற கட்டுரை வெளிவந்தது என்பதும், அந்தக் கட்டுரையை எழுதிய காலஞ்சென்ற ப.ஜீவானந்தம் அவர்களுக்கும், பெரியார் ஈ.வெ.ரா.வுக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைத்தது என்பதும்அவரது அரசியல் குறிப்பில் குறிப்பிடத்தக்கதாகும்.
பாரதி கூறியது போல் ‘சூத்திரர்களுக்கு ஒரு நீதி’ என்ற கொடுமையினை முழுமூச்சாக எதிர்த்துப் போராடி வெற்றி பல கண்ட வீரர் அவர்தான் என்றால் அது மிகையாகாது. அவர் நடத்திய போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஒரு புதிய திருப்பு முனையை உருவாக்கியது. அவர் எந்தப் போராட்டத்திலும் அஞ்சியதே கிடையாது என்பது அவரது அரசியல் நிறைவுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. தலைவர் காமராஜ் அவர்களின் ஆட்சியை “பச்சைத் தமிழர்” ஆட்சி என்று கூறியவர் பெரியார். தனது கடைசி காலத்திலும் ஜாதிக் கொடுமைகளை எதிர்ப்பதன் மூலமே சமுதாய சீர்திருத்தமும், சமதர்ம சமுதாயமும் அமைக்க முடியும் என உறுதியாக எண்ணினார். செயல்பட்டார்.
அவரது அரசியல் கருத்துகள் எப்படி இருந்தாலும் நெஞ்சுறுதி மிக்க அஞ்சாத அவரது பணி போற்றத்தக்கது. மறக்க முடியாதது!
பழைமையின் பெயரால் பழிவாங்கப்பட்டு வந்த பாமர மக்களுக்கு சமுதாய சீர்திருத்தம் வேண்டும் என்று சரித்திரம் படைக்க நினைத்தவர்களுக்கு அவரது இழப்பு பேரிழப்பாகும். தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக் கண்டத்திலும் சரி, ஜாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் அவர் வகித்த பாத்திரத்தை இனி எந்தத் தலைவனும் வகிக்க முடியாது. அது எந்தத் தலைவனுக்கும் கிடைக்கவும் செய்யது என்பதோடு நாம் ஒரு சரித்திரத் தலைவனை இழந்து நிற்கிறோம். இது ஈடு செய்ய முடியாதது.
– விழிமுனை
(‘நவசக்தி’ – 26.12.1973 – பக்கம் 2 )
No comments:
Post a Comment