சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தை - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தம் வசதிக்கேற்ப சட்டம் செய்வதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தை - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தம் வசதிக்கேற்ப சட்டம் செய்வதா?

featured image

இருமுனைகளிலும் எதிர்க்கட்சிகள் சட்டப் போராட்டம் – மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் செய்யவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம்பற்றி – உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தன் வசதிக்கேற்ப சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் கண்டித்தும், எதிர்க் கட்சிகள் இதனை எதிர்த்து சட்டப் போராட்டம், மக்களிடத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஜனநாயகத்தின் முக்கிய தேவை சுதந்திரமாக இயங் கும் தேர்தல் ஆணையம் ஆகும். காரணம், தலைமைத் தேர்தல் ஆணையரும், அதன் உறுப்பினர்களும் எவ்வித தலையீடுகளுக்கும் இடந்தராமல், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கண்ணோட்டத்திற்கும் இடந்தராமல், அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்டு ஓர்ந்து கண் ணோடாது தேர்ந்து செயல்படும் நீதியின் துலாக்கோல் மாதிரி செயல்படவேண்டியது மிக முக்கியம்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவேண்டும்!
அதற்காக நியமனங்கள் செய்யப்படும்போது, பெரிதும் ஓய்வு பெற்றவர்கள், பல மாநிலங்களில் ஆண்ட, ஆளும் கட்சிகளுக்குத் தலையாட்டிகளாகவும், ‘‘ஆமாம் சாமி” போடுபவர்களாகவுமே இருக்கும் வண்ணம் அவர்களது நியமனத்திற்கென விதிமுறை களை சரியாக வகுக்காமலேயே, பல பதவி நீடிப்புகளை மாநில அரசுகளில் பெற்று, பிறகு அதைத் தாண்டி இங்கே உறுப்பினர், தலைவர் என்ற பதவிகளில் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒரு சார்பு நிலைபற்றிய வழக் குகள் உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது, தற்போதைய பா.ஜ.க. அரசு, அதன் நியமன முறை சட்டத் திட்டத்தை மாற்றிடவேண்டும் என்ற கருத்துபட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போதுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, அதற்குள்ள ‘புல்டோசர் மெஜாரிட்டி’ பலத்தின் காரணமாக, நேற்று (12.12.2023) நிறைவேற்றிய சட்டத் திருத்தம், தேர்தல் ஆணைய நியமனங்களில் பிரதமரும், ஒன்றிய அமைச் சக உறுப்பினரும் தேர்வுக் குழுவில் இடம்பெற்றால், மூவரில் இருவர் ஆளும் கட்சியினரே, அதன் சுதந் திரத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதால், மசோ தாவை செலக்ட் கமிட்டிக்கு விடச் சொல்லி, எதிர்க் கட்சிகள் கேட்டுக்கொண்டதும் புறக்கணிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறிய வழிகாட்டும் சரியான வழிமுறைகளையும் கவனத்தில் கொள்ளாது, தேர்தல் ஆணைய நியமனங்களில் நியமன சுதந்திரம் பாது காப்பற்ற நிலையில்தான் உள்ளது!

அவசரக்கோலமான புதிய சட்டம் நிறைவேற்றம்!
இந்த மசோதா ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், அவசரமாக நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலை (Assent) ஓரிரு நாள்களில் விரைந்து பெற்று சட்டமாகி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்படவிருக்கிறது!
வருகிற பொதுத் தேர்தலை மனதில் வைத்தே இந்த ‘‘அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கும்” அவலம் அரங்கேறிவிட்டது! புரியவேண்டும் மக்களுக்கு!
இதனை நாடாளுமன்றத்தில் எதிர்த்த எதிர்க்கட்சி யினர் அனைவரும், ஜனநாயகம் உண்மையாகவே தழைக்கவேண்டும் என்று விரும்பும் அரசமைப்புச் சட்ட நம்பிக்கையாளர்களும் உடனடியாக அடுத்து செய்ய வேண்டிய அவசரப் பணிகள் இரண்டு.
ஒன்று, மக்கள் மத்தியில் இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை மறைமுகமாகப் பறித்து, ஆளுங்கட்சிக்கு வசதியாக தேர்தலில் தலையாட்டும் தம்பிரான்கள் மடமாக்கிவிடும், ஒரு சார்பு நிலையை விளக்கி அடைமழைபோல பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டும்.

எதிர்க்கட்சிகள் என்ன செய்யவேண்டும்?
இரண்டாவது, இச்சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே, உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி – தீர்ப்புப்படி அமை யாமல் அதனைப் புறந்தள்ளியே உள்ள ஒரு சட்டம் என்ற அடிப்படையில் இச்சட்டத்தினை எதிர்த்து வழக்குகள் போட்டு, சட்டப் போராட்டத்தை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் தனிச் சுதந்திரத்தைக் காப் பாற்றி, அதை ஒரு தன்னிச்சையாக, சுதந்திரமாக இயங்கும் அமைப்பாக அதனை செயல்பட வைக்கும் வகையில், அதன் சுதந்திரத்தைப் பாதுகாக்க அவசரத் தீர்வு காணும் ஏற்பாடுகளை இப்போதே செய்யத் தொடங்குங்கள்!
இதில் அலட்சியமோ, கவனச் சிதறலோ கூடாது! அவசியம், அவசரம்!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.12.2023

No comments:

Post a Comment