நீரிழிவு நோய் - ஒரு ‘‘சந்திப்பு நோய்'' - உடல் உறுப்புகள் பலவற்றிலும் ஊடுருவும் - பாதிக்கச் செய்யும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

நீரிழிவு நோய் - ஒரு ‘‘சந்திப்பு நோய்'' - உடல் உறுப்புகள் பலவற்றிலும் ஊடுருவும் - பாதிக்கச் செய்யும்!

featured image

அந்நோய்பற்றி விழிப்புணர்வூட்டவே தலைசிறந்த நீரிழிவு நோய் மருத்துவர் டாக்டர் நல்லபெருமாள் இங்கு அழைக்கப்பட்டுள்ளார்!
பெரியார் மருத்துவக் குழுமத்தின் இந்த ஏற்பாடு பாராட்டத்தக்கது!
பெரியார் மெடிக்கல் மிஷன் வழங்கும் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, டிச.13 ‘சந்திப்பு நோய்’ என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் குறித்து தலைசிறந்த நீரிழிவு நோய் மருத்துவர் ஆற்றவிருக்கும் உரையும், விளக்கமும் பயன்பெறத்தக்கது. அவர் உரைக்குப் பின் உங்கள் அய்யப்பாடுகளை கேள்விகளாகக் கேட்கலாம்; தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் மெடிக்கல் மிஷன் வழங்கும் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்
‘‘பெரியார் மெடிக்கல் மிஷன்” சார்பில் நேற்று (12.12.2023) மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:

தலைசிறந்த மருத்துவர்களை அழைத்து ஆலோசனை – அறிவுரை!
ஒவ்வொரு நாளும் மழை வருமோ அல்லது காற் றடிக்குமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில், கடந்த 5 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த மருத்துவ ஆலோசனைக் கூட்டம் இன்று (12.12.2023) மாற்றப்பட்டது. மருத்துவ அறிவுரைகள் குறிப்புகள்பற்றி தலைசிறந்த மருத்துவர்களை அழைத்து, இங்கே நமக்கு அறி வுறுத்தவேண்டும் என்பதற்காக, நம்முடைய வாசகர்கள், பெரியார் நூலக வாசகர் வட்டத்தினர் மட்டுமல்ல, நம் முடைய தோழர்கள், பொதுமக்கள் பயன்படவேண்டும் என்பதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
தன்னுடைய மிக முக்கியமான நேரத்தை நமக்காக ஒதுக்கி, இக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்ட பிறகும்கூட, இன்றைக்குத் தேதி கொடுத்து வந்திருக்கக் கூடிய பெருமைக்கும், பாராட்டுதலுக்கும், சிறப்புக்கும் உரிய தலைசிறந்த நீரிழிவு நோய் மருத்துவர் அய்யா நல்லபெருமாள் அவர்களே,
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பெரியார் மருத்துவக் குழுமத்தினுடைய செயலாளர் அன்பிற்குரிய அருமைத் தோழர் டாக்டர் எஸ்.மீனாம்பாள் அவர்களே,
தொடக்கவுரை ஆற்றிய – நன்றியுரை கூறவிருக்கக் கூடிய தேனி, அரசினர் செவிலியர் கல்லூரியின் மேனாள் முதல்வர் தோழர் வி.கே.ஆர்.பெரியார்செல்வி அவர்களே,
கழகத்தினுடைய துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, பகுத்தறிவாளர் கழகத் தோழர்களே, மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குஞைர் வீரமர்த்தினி அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய மருத்துவர்கள், மருத்துவரல்லாதவர்கள் மற்றும் பயனாளிகள் ஆகிய அருமைத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘யாம் பெற்ற இன்பம்,
இச்சமூகம் பெறவேண்டும் – மற்றவர்களும் பெறவேண்டும்!”
இது ஒரு நல்ல வாய்ப்பு! நம்முடைய டாக்டர் நல்லபெருமாள் அவர்கள் நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய ஓர் அற்புதமான மருத்துவர். அதை நான் உணர்ந்து, ஒவ்வொரு நாளும் அனுபவித்து, ‘‘யாம் பெற்ற இன்பம், இச்சமூகம் பெறவேண்டும் – மற்ற வர்களும் பெறவேண்டும்” என்பதற்காகத்தான் டாக்டர் அவர்களை வேண்டி, அவர்களும் மனமுவந்து அவருடைய நேரத்தை ஒதுக்கித் தந்துள்ளார்.
டாக்டர் நல்லபெருமாள் அவர்கள் ஓர் உயரிய மாமனிதர் – அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்பது ஒருபக்கத்தில் இருந்தாலும், மிக எளிமையானவர் – அவரை சந்திக்கும்பொழுதெல்லாம் உற்சாகத்தோடு இருப்பார்.

நீரிழிவு நோய் இருப்பதையே
மறைக்கின்றனர் சிலர்!
பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருக்கிறது என்பதை மறைக்கவேண்டிய அவசி யமே இல்லை. எந்த நோயையும் மறைப்பதினால், எந்தப் பலனும் கிடையாது. நம்முடைய மக்கள் பலர் அந்தத் தவறை செய்கிறார்கள். நோயை மறைத்துக் கொள் கிறார்கள். யாரிடம் தெரிவிக்கவேண்டுமோ அவர் களிடமேகூட மறைக்கிறார்கள். டாக்டர்களிடமும் தெளிவாகச் சொல்வதில்லை.
எல்லோரும் சொல்வார்கள், ‘‘நம்முடைய டாக்டர் நல்லபெருமாள் அவர்கள், நம்முடைய கட்சிக்காரர்” என்று பெருமைப்படக்கூடிய நம்முடைய தோழர் என்பார்கள்.
எனக்கும் மருத்துவர் அவர். என் நண்பர்கள் பலரை, அவரிடம்தான் அனுப்புவேன்.

டாக்டர் நல்லபெருமாள் அவர்களின் தனித்தன்மை!
ஒரு குறுகிய நேரமாக இருந்தாலும், அந்த நேரத் திற்குள் தன்னுடைய அனுபவத்தை மிக அழகாக, வரைந்து காட்டுவதைப்போல், படம் பிடித்துக் காட்டுவார் – அதுதான் அவருடைய தனித்தன்மையாகும்.
மற்றவர்களைப் பார்த்தீர்களேயானால், பொறுமை இல்லாமல், மிக அவசர அவசரமாக எடுத்துச் சொல்வார்கள்.
நம்முடைய டாக்டர் நல்லபெருமாள் அவர்களிடம் சென்றால், முதலில் நம்மை வரவேற்பார்.

மருத்துவம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது!
இப்பொழுது மருத்துவத் துறை மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அறிவியலும் – தொழில்நுட் பமும் கலந்ததினால், மருத்துவம் இன்றைக்கு வளர்ந் திருக்கிறது.
முன்பெல்லாம் இ.சி.ஜி. என்ற ஒன்று கிடையாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாடி பிடித்துதான் சொல்வார்கள். பிறகுதான் மருத்துவக் கருவிகள் வந்தன. சரி, இந்தக் கருவிதான் கண்டுபிடிக்கப்பட்டதே என்று அத்தோடு அறிவியல் நின்றுவிடவில்லை. அதற்குப் பிறகு இ.இ.ஜி. மெடிசன் என்று ஒன்று வந்திருக்கிறது, அதில் கொஞ்சம் தெளிவாகத் தெரியும் என்றனர்.
அதற்குப் பிறகு மேலும் மேலும் மருத்துவக் கண்டுபிடிப்புகள் வளர்ந்தன. இந்தக் கண்டுபிடிப்புகள் இ.சி.ஜி.யைவிட, இவை மிகச் சிறப்பாக இருக்கும், இந்தப் பரிசோதனையை செய்துகொள்ளுங்கள் என்றனர்.

இதயம் எப்படி வேலை செய்கிறது
என்பதையும் பார்க்கலாம்!
அதற்குப் பிறகு, இன்னும் மிகத் துல்லியமாகக் கண்டு பிடித்துச் சொல்லவேண்டும் என்றால், ‘ஆஞ்சியோகிராம்’ செய்யலாம் என்றனர்.
ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்துகொள்பவர், பெரிய திரையில் அவருடைய இதயம் எப்படி வேலை செய்கிறது என்பதையும் நேரில் பார்க்கலாம். ஏனென் றால், முழு மயக்க மருந்து கொடுப்பதில்லை; பாதி யளவிற்குத்தான் கொடுப்பார்கள்.

நீரிழிவு நோய்தான்
நம்மோடு கடைசிவரை இருப்பது!
ஆக, இப்படி மருத்துவயியல் வளர்ந்துகொண்டே போகிறது. அந்த வளர்ச்சியை நோக்கி, டாக்டருடைய கருத்தும் விரிவடைந்து வளருகிறது. சர்க்கரை நோய் என்று சொல்லக்கூடிய – கிராமப்புறங்களில் தித்திப்பு நோய் என்று சொல்வார்கள். இந்த நோய்க்கு ஒரு தனி சிறப்பு உண்டு. மற்ற நோய் வந்தால், அதிலிருந்து மீண்டு வரலாம். ஆனால், நீரிழிவு நோய் வந்தால், அதனுடைய விளைவுகள் என்ன? அந்நோய் தடுப்புப்பற்றி டாக்டர் நல்லபெருமாள் அவர்கள் விளக்கிச் சொல்வார். நான் ஒரு ஃபேஷண்ட் என்ற முறையில் சொல்கிறேன், இந்த நீரிழிவு நோய்தான் நம்மோடு கடைசிவரை இருப்பது. இந்த நோய் வந்தால், நம்மைவிட்டுப் போகாது என்பதுதான் இன்றைய நிலை!
கவிஞர் கண்ணதாசன் திரைப்படமொன்றில் ஒரு பாடலை எழுதியிருப்பார். ‘‘வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?” என்று எழுதியிருப்பார்.
அந்த ‘‘யாரோ” என்ற கேள்விக்கு, ‘‘கடைசிவரை டயாபடிக்ஸ்” என்பதுதான் பதில். இந்த நோயைக் கட்டுப் படுத்தி வைக்கலாம். கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு
முற்றுப்புள்ளி என்பது கிடையாது!
இந்த நோய் தீர வழியில்லையா? என்று கேட்டால், செத்து போன செல்கள் – அதை எப்படி மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். ஒருவேளை எதிர் காலத்தில் இதற்கான கண்டுபிடிப்புகள் வந்தால், நிச்சயமாக வாய்ப்பு இருக்கும். ஏனென்றால், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி என்பது கிடையாது; எப்பொழுதுமே அதற்கு செமிக்கோலன்தான். அது வளர்ந்துகொண்டே தான் இருக்கும்.
ஆகவே, அப்படிப்பட்ட நீரிழிவு நோய் வரா மல் காப்பது எப்படி? வந்தாலும், நம்மைக் காப் பாற்றிக் கொள்வது எப்படி? தடுப்பு முறைகளைப் பற்றி நம்முடைய டாக்டர் அவர்கள் நமக்கு விளக்கிச் சொல்வார்.
ஆகவேதான், இக்கூட்டம் என்பது ஒரு வகுப்பு போன்றதாகும். ஒவ்வொருவரும் இதைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.

நீரிழிவுநோய்க்கு உலகத்திற்கே
தலைமை தாங்குவது இந்தியா!
நம்முடைய நாடுதான், ‘‘டயாபடிக்ஸ் காட் பாதர் ஆஃப் வேர்ல்டு” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, உலகத்திற்கே தலைமை தாங்குகின்ற அளவிற்கு இருக்கிறது.
சில ஆண்டுகளுக்குமுன்பு டாக்டர் மோகன் போன்றவர்களை அழைத்து இதுபோன்ற கூட்டங்களை நடத்தி இருக்கின்றோம்.
நீரிழிவு நோய் என்பது –
‘‘சந்திப்பு நோய்’’
நீரிழிவு நோய் என்பது ஏன் மிகவும் ஆபத்தான நோய்? சாதாரண நோயல்ல – அந்நோயை அலட்சியப் படுத்தக்கூடாது ஏன்? என்று நினைக்கின்ற நேரத்தில், இதற்கு ஒரு பெயர் வைத்தார்கள் – ‘‘சந்திப்பு நோய்” – ‘‘Junction Disease” என்பதாகும். அது எங்கே போகும் என்று சொல்ல முடியாத அளவிற்கு, உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
கணையத்தைத் தாக்கும்; இதயத்தைப் பாதிக்கும், சிறுநீரகத்தைப் பாதிக்கும்; கண்களைத் தாக்கும்; பக்கவாதம் ஏற்படும் – கடைசியில் உயிர் போகக்கூடிய நிலை ஏற்படும்.இப்படி எல்லாவற்றிற்கும் அடித்தளம் நீரிழிவு நோய்தான்.
ஆகவே, அந்நோயை எப்படி கட்டுப்படுத்துவது? மருந்தின்மூலம் கட்டுப்படுத்துவதா? ஊசியின்மூலம் கட்டுப்படுத்துவதா? என்பதுபற்றி அடுத்து நீரிழிவு டாக்டர் அவர்கள் சொல்வார்.
டாக்டர் அவர்களுடைய அணுகுமுறை என்பது மிகத் தெளிவாக இருக்கும். பழைய அணுகுமுறையாக இருக்காது. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். அவருடைய கருத்துகள் மக்களிடம் சென்று அவர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காகத்தான் அவரை அழைத்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

பரிசோதனை முடிவுகள்குறித்து மூன்று, நான்கு அளவுகோலை வைத்திருக்கிறார்கள்!
நீரிழிவு நோய்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள். மூன்று மாதங்களில் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க் கரையின் அளவு எவ்வளவு என்று பார்க்கச் சொல் வார்கள். அந்தப் பரிசோதனையின் முடிவுகள்குறித்து, மூன்று, நான்கு அளவுகோலை வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய டாக்டர் நல்லபெருமாள் அவர்கள் ஒரு புதுமையான கருத்தைச் சொன்னார். அது என்ன வென்றால், 25 வயதிலோ, 30 வயதிலோ ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தது என்றால், அவருக்கு ஓர் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதே அளவுகோலை 80 வயதில் இருப்பவருக்கு எப்படி ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியும்? ஏனென்றால், உடல் உறுப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு இருக்கும்.

நோயாளிகள் நலம்பெறவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்
பல பேர் மருந்து கம்பெனிகளின் நலத்தைப் பார்க்கிறார்கள். மருந்து கம்பெனிகள் வளமாக இருக்கவேண்டும்; நோயாளிகள் நலம்பெறவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
புதிய புதிய கருத்துகளை நம்முடைய டாக்டர் அவர்கள் சொல்வார்கள். உங்களுடைய சந்தேகங்களை நீங்கள் கேள்விகள் கேட்டு, அதற்கு விளக்கம் பெறலாம்.
தன்னுடைய நேரத்தை ஒதுக்கி, இங்கே வந்திருக் கக்கூடிய டாக்டர் நல்லபெருமாள் அவர்களுக்கு அனைவரின் சார்பிலும் மீண்டுமொரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மக்களுக்கு, எளிமையாக விளங்கும்படியாக ஒரு புத்தகத்தை எழுதவேண்டும்!
அவருடைய அணுகுமுறை எப்பொழுதும் புதிய முறையில் இருக்கும். அவருடைய உரையினைப் பதிவு செய்து வெளியிடுவோம். இந்த உரையை அடிப் படையாக வைத்து, டாக்டர் அவர்கள் விரிவாக, தமிழ் மக்களுக்கு, எளிமையாக விளங்கும்படியாக ஒரு புத்த கத்தை எழுதிக் கொடுக்கலாம். அந்த நூலை வெளியிடு வதற்கும், பரப்புவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

ஆலோசனைகளைக் கேட்டுப் பயன்பெறுங்கள்!
அந்த வேண்டுகோளை மட்டும் டாக்டர் அவர் களிடம் வைத்து, அவரை வருக, வருக என வரவேற்று, உங்களையும் வரவேற்று, நிச்சயமாக இந்த நோய் வராமல் தடுப்பது எப்படி? என்பது முக்கியம். வந்த பிறகு, அந்நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள் வது எப்படி? என்பது மிகவும் முக்கியம்.
டாக்டரின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை யாற்றினார்.

No comments:

Post a Comment