தமிழர் தலைவர் தரணிக்குத் தேவை - பேராசிரியர் அருணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

தமிழர் தலைவர் தரணிக்குத் தேவை - பேராசிரியர் அருணன்

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் பரப்புரை பயணம் என்பதை அறிந்ததும் நான் கலங்கினேன். 90 வயதில் இத்தகைய பயணமா எனத் திகைத்தேன். எனக்கு வயது 72தான். ஆனாலும் பயணம் என்றால் மிரட்சியாக இருக்கிறது; உடல் ஒத்துழைக்க மறுத்து மனம் சோர்ந்து போகிறது. அய்யா எப்படி புறப்படுகிறார் இப்படி என்று ஆச்சரியமாக இருந்தது.

அந்தப் பயணத்தின் நிறைவு விழா மதுரையில் நடந்த பொழுது போயிருந்தேன். அவரது முகத்தில் அப்படியொரு மலர்ச்சி; சோர்வே தெரியவில்லை. அந்தத் திட்டம் சர்க்கரை தடவப்பட்ட விஷ உருண்டை, மநுவாத சதி, குலத்தொழில் புகுத்தல் என்பதைப் புட்டுபுட்டு வைத்தார். ஒரு மணி நேரம் நவரச பாவத்தோடு பேசினார்.

அப்போதுதான் புரிந்தது, இப்படிப் பயணித்து மக்களைச் சந்தித்து பிராமணிய வாதிகளின் தந்திரங்களை மக்களுக்கு விளக்குவதில்தான் அவர்உடலும் உள்ளமும் புத்துயிர்ப்பு பெறுகிறது என்பது.

அன்று பெரியார் இப்படித்தான் தனது தளர்ந்த வயதிலும் தளராது பயணித்து மக்களுக்கும் தனக்கும் உத்வேகம் தந்தார். அவரின் அணுக்கத் தொண்டராம் அய்யா அவர்களும் அது விடயத்திலும் அவரின் தக்க வாரிசாகத் திகழ்கிறார்.

18 கைத்தொழில் செய்வோருக்கு சகாய வட்டியில் கடன் என்றதும் எவரும் நல்லதுதானே நடக்கட்டும் என்பர். ஆனால் அந்தத் திட்டத்தை கவனமாகப் படித்து அதனுள்ளே ஒளிந்திருக்கும் அபாயத்தை தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதலில் கண்டறிந்து சொன்னவர் அய்யாதான். உடனே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தொழில் அவரின் குடும்பத் தொழிலாக, பரம்பரைத் தொழிலாக இருக்க வேண்டும். அதை அப்போதும் அவர் செய்து கொண்டிருக்க வேண்டும், அவரின் வயது 18ஆக இருக்க வேண்டும் என அதில் இருப்பதைச் சுட்டியவர் அவர்தான்.

இதன் பொருள் அய்டிஅய்-யில் ஒரு தொழில் படித்திருந்து அதைச் செய்ய முனைந்தால் கடன் கிடைக்காது; அது அவரின் குடும்பத் தொழிலாக, குலத் தொழிலாக இருக்க வேண்டும். இதன் நோக்கம் வருணாசிரமத்தை இன்றைக்கும் நிலைநிறுத்துவது என்பது வெளிப்படை. இதை அம்பலப்படுத்தியவர் அய்யா. அவரால் ஏன் இதைச் செய்ய முடிந்தது என்றால் அவர் பெரியாரின் பெருந்தொண்டர் என்பதால், அவர் தந்த அந்த சமூகநீதிப் பார்வையால்.

இன்றைக்கு மட்டுமல்ல அவர் தனது பொது வாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்தே பெரியாரியக் கண்ணாடி அணிந்திருந்தார், அதன் வழியாகக் கண்டு எதனின் உள்ளுறையையும் அவரால் சொல்ல முடிந்தது. இந்திரா அம்மையார் கொண்டுவந்த அவசரநிலை ஆட்சி நாட்டுக்கு நல்லது அல்ல, அது பிற்போக்குச் சக்திகளையே வளர்த்தெடுக்கும் என்றார். இதனால் அவர் கைது செய்யப்பட்டுக் கொடுஞ் சிறையில் வாடினார். இது விஷ யத்தில் அவர் திமுக, மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களோடு இணைந்து நின்றார். அவர்களின் தியாகம் வீண் போகவில்லை; அந்தக் காட்டாட்சி ஒழிந்தது. ஆனால், தாங்களும் அதை எதிர்ப்பதாகச் சொன்ன ஜனசங்கம் அதைச் சாக்கிட்டு வளர்ந்திருந்தது. அய்யாவின் எச்சரிக்கை உண்மையானது.

இடஒதுக்கீடு 50%க்கு மேல் போகக் கூடாது என்று கூறப்பட்டு, தமிழ்நாட்டிலிருந்த 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அப்போது மாநிலத்தில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அம்மையார் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முன்வந்தார். அவர் பிராமண குலத்தில் பிறந்தவராயிற்றே என நினைத்து ஒதுங்கவில்லை அய்யா. எக்குலத்தில் பிறந்திருந்தாலும் பிற குலத்தவருக்கான உரிமையை மீட்க முன்வந்தால் அவருடன் ஒத்துழைப்போம் என்று கிளம் பினார்.

இவரின் தக்க ஆலோசனையால்தான் அது மீட்டெடுக் கப் பட்டது. அய்யா அவர்கள் பிராமணியத்தின் எதிரியே தவிர, சகல பிராமணர்களின் எதிரி அல்ல என்பது அப்படியாகவும் நிரூபணமானது.

பெரியார் இறந்து 50 ஆண்டுகளாகியும் இன்றும் சங்கி களின்  மனதில் சிம்மசொப்பனமாய் இருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் அவர் சிலையை அகற்றுவோம் என்கிறார் பாஜக தலைவர். இதற்காகவே அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிட மாட்டார்கள் மக்கள். பெரியாரின் நாத்திகம் சமூகநீதிக்காக எழுந்தது, சங்கிகளின் ஆத்திகம் சமூக அநீதிக்காக எழுந்தது என்பதைத் தமிழ் நாட்டின் சாமான்ய  பக்தர்கள்   அறிவார்கள். அதனால்தான் அவரின் இயக்கத்திலிருந்து பிறந்த திமுகவிற்கு அல்லது அதிலிருந்து பிறந்த அதிமுகவிற்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

இந்த நடப்பியலை "நாத்திகமா? ஆத்திகமா?" எனக் கேட்டு மாற்றி விடலாம் என்று கனவு காண்கிறது பாஜக. "கடல் வற்றிக் கருவாடு சாப்பிடலாம் என்று காத்திருந்த கொக்கு குடல் வற்றிச் செத்தது" எனும் கதையாகப் போகிறது என்று அதன் கூட்டணியில் இதுகாறும் இருந்த அதிமுகவே சொல்லிவிட்டது.

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறோம், பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது எனும் தைரியத்தில் தமிழ்நாட்டையும் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு ஏதேதோ செய்து வருகிறது பாஜக.  அதற்காக ஆளுநரைக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர் திமுக அரசுக்கு நிர்வாக ரீதியாகப் பெருந் தொல்லைகளைத் தருவ தோடு கருத்தியல் ரீதி யாகவும் கலகக் கொடி உயர்த்துகிறார். திராவிட இயக்கத்தைத் தாக்குகிறார், மாமேதை மார்க்சை விமர்சிக்கிறார், மொழி வாரி மாநிலமே கூடாது என்கிறார், அனைத் திற்கும் மேலே ஸநாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கிறார்.

"ஸநாதன தர்மம் அழிவற்றது" என்கிறார், "எது அழிவற்றது?" என்று கேட் டால் "ஸநாதன தர்மம்" என் கிறார்! செந்திலின் வாழைப் பழ ஜோக்காக உள்ளது. ஸநாதனத்தில் ஜாதியம், பெண் ணடிமைத்தனம், சமஸ்கிருத ஆதிக்கம் உண்டா இல் லையா என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். முடிவில், பூணூல் அணி விக்கும் விழாவிற்குத் தலைமை தாங்கி தனது ஸநாதனம் பூணூலிசமே என்பதை ஒருவழியாக உறுதி செய்து விட்டார்.

இந்த உண்மையை மறைக்கத்தான் பாஜகவினர் படாதபாடு படுகின்றனர். அதற்காக "ஸநாதன தர்மம் என்பது இந்து மதமே" என்று ஒரே போடாகப் போடு கிறார்கள். அரசியல்சாசனத்தில் "இந்துமத நிறுவனங்கள், இந்துக்கள்" என்றுதான் உள்ளதே தவிர, ஸநாதன தர்மம் என்று இல்லை. இவர்களாக அந்தப் பெயரும் உண்டு என்று சொல்லிக் கொண்டு தங்களைக் காக்க ஆள் சேர்க்கிறார்கள்.

இந்து மதம் என்பது கடவுள் நம்பிக்கையுடனான வழிபாட்டு முறைமை. அதிலும் பல கடவுள்கள், பலவகை வழிபாட்டு முறைகள். ஆடு-கோழி வெட்டிப் படையல் செய்து சாப்பிட்டு வணங்கும் முறையும் இந்து மதமே. அதை ஸநாதனம் ஏற்கிறதா? அது ஏற்காவிட்டாலும் இதுவும் இந்து மதமே. அப்படி ஜாதியம், பெண்ணடிமைத்தனம், சமஸ்கிருத ஆதிக்கம் எனும் ஸநாதனம் நீங்கினாலும் இந்து மதம் இருக்கும். இப்படித்தான் அந்தக் காலத்தில் பஞ்சமரை கோயிலில் அனுமதித்தால், தேவதாசி முறையை ஒழித்தால் இந்து மதம் அழியும் என்றார்கள். அவை ஒழிந்தன; ஆனால், இந்து மதம் அழியவில்லை. அதிலிருந்தே ஸநாதனம் வேறு, இந்து மதம் வேறு என்பது துலக்கமானது.

அனைத்து ஜாதியினரும், ஆண்-பெண் இருபாலரும் உரிய பயிற்சி பெற்றால் அர்ச்சகர் ஆகவேண்டும், சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழ் வழிபாட்டு மொழியாக வேண்டும் என்றால் "இந்து மதத்திற்கு ஆபத்து", "அரசே ஆலயத்தைவிட்டு வெளியேறு" என்று இப்போது கிளம்பு கிறார்கள்! சொல்லுகிறவர்கள் ஸநாதனிகள்; அவர்கள்தாம் அடித்தட்டு இந்துக்களுக்கு, அனைத்து இந்துப் பெண் களுக்கு எதிராக இருக்கிறார்கள். ஆலயங்கள் தனியார் கைகளுக்குச் சென்றால் அவற்றின் சொத்துக்களுக்கு ஆபத்து என்பதைப் பற்றிக் கவலைப்படதவர்கள் அவர்கள். இந்த உண்மைகளைச் சொல்ல, அவற்றுக்காகப் போர்க்களங்களை அமைக்க இன்றைக்கு தமிழர் தலைவர் தரணிக்குத் தேவை. அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.


No comments:

Post a Comment