காந்தி உயிரைக் காப்பாற்றியதற்குக் கூலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

காந்தி உயிரைக் காப்பாற்றியதற்குக் கூலி!

featured image

ஒடுக்கப்பட்டவர்களை எந்நாளும் ஹிந்துக்கள் அடிமைப்படுத்தி வைப்ப தற்கு அனுகூலமாகவே புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், ‘‘ஹரிஜனங் களை ஒத்தி வைக்கக் கூடாது. அவர்களும் எந்நாளும் ஹிந்துக்களில் ஒரு பகுதி யாகவே இருக்க வேண்டும்’’ என வெளிப்படையாக காங்கிரஸ்காரர் ஒருபகட்டுக் காரணமும் சொல்லிக் கொண்டார்கள். வகுப்புத் தீர்ப்பில் ஒடுக் கப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி வழங்கப்பட்டதே இந்தப் புரளிகளுக் கெல்லாம் காரணம். பொதுத் தொகுதியை ஒடுக்கப்பட்டவர் களில் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில சுயநலக்காரரே ஆதரித்தனர். பெரும்பாலார் தனித்தொகுதியையே ஆதரித்தனர். ஒடுக்கப்பட்ட வர்களுக்குத் தனித் தொகுதி வழங்கினால் நான் பட்டினி கிடந்து சாவேன் எனக் கூறி, காந்தியார் பட்டினி கிடந்ததினால், தனித் தொகுதியை ஆதரிப் போரும் பொதுத் தொகுதியை ஆதரித்து புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். புனா ஒப்பந்தப் படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு மாகாணச் சட்டசபை களில் சில அதிகப்படியான ஸ்தானங்கள் கிடைத்தது உண்மையே. ஆனால், அந்த ஸ்தாபனங்களினால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான நன்மை கள் ஏற்பட வேண்டுமானால், ஒடுக்கப்பட்டவர்களின் அபிமானம் பெற்றவர்களே அந்த ஸ்தானங்களைக் கைப்பற்ற வேண்டும். ஆனால், காங்கிரஸ் பற்று டைய ஒடுக்கப்பட்ட தலைவர்கள் ஒடுக்கப்பட்ட வர்களின் பூரண ஆதரவைப் பெற்றவர்கள் அல்ல. சமூகத்தைக் காட்டிக் கொடுத்தாவது தமது நலத்தை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற கீழ்த்தர மான மனப்பான்மையுடையவர்களே காங்கிரஸ் பற்றுடையவர்களாக இருக்கிறார்கள், பொதுத் தொகுதியில் ஜாதி ஹிந்துக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு தமது சமூகக்துக்கு எத்தகைய துரோகமும் செய்ய அவர்கள் தயாராகவே இருப்பார்கள்.

இந்தப் பீதி, புனா ஒப்பந்தத்தில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும், பொதுத் தொகுதி அபிமானியுமான ராவ்பகதூர் எம்.சி. ராஜாவுக்கே இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவரது முயற்சியினால் பல திறப்பட்ட அபிப்பிராயமுடைய ஒடுக்கப்பட்டவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அய்க்கிய கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அது எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது. தனியாக நின்று தேர்தலில் போட்டி போட்டு வெற்றி பெற்று சமூகத்துக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று அந்தக் கட்சி முடிவு செய்திருக்கிறது. எனவே, சமீபத்தில் நடைபெறப் போகும் ஒடுக்கப்பட்டோர் ஆரம்பத் தேர்தலில் அக்கட்சி அபேட்சகர்களை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. இது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. இந்த ஆரம்பத் தேர்தலிலும் காங்கிரஸ் அபேட்ச கர்களை நிறுத்தப் போவதாக அவர் கூறினார். ஒடுக் கப்பட்ட அய்க்கிய கட்சியார் அதை எதிர்த்தனர். காந்தி, படேல் முதலிய பெரிய தலைவர்களிடமும் முறையிட்டனர். எனினும் பலன் ஏற்படவில்லை. திரு.சத்தியமூர்த்தி முயற்சியே வெற்றி பெற்று விட்டது. காந்தியாரும் கூட இந்தத் தகராறில் தலையிட முடியாதென்று கை மலர்த்தி விட்டார். இதனால் மனம் புண்பட்ட ராவ் பகதூர் எம்.சி. ராஜா காங்கிரஸ் போக்கைக் கண்டித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் காரர் புனா ஒப்பந்தத்துக்கு முரணாக நடப்பதை அவர் அவ்வறிக்கையில் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

ஆனால், நாம் இதைப் பார்த்து ஆச்சரியப்பட வில்லை. எந்தக் காரியத்தில்தான் காங்கிரஸ்காரர் ஒழுங்காகவும் யோக்கியப் பொறுப்பாகவும் நடந்து கொள்கிறார்கள்? ஒன்றைச் சொல்வதும், ஒன்றைச் செய்வதும் அவர்களுடைய வாடிக்கையாகிவிட்டது. வாக்குறுதிகளை மீறுவதும் அவர்களுடைய பிறவிக் குணம் ஆகிவிட்டது. அவர்களிடம் குற்றம் காண முயல்வது மணற் சோற்றில் கல் பொறுக்கும் பைத்தி யக்கார வேலை. காங்கிரஸ்காரின் பித்தலாட்டங் களை யெல்லாம் பகிரங்கமாகக் கண்ட பிறகும் பொது ஜனங்கள் அவர்களை ஆதரிப்பதுதான் ஆச் சரியமாக இருக்கிறது. ராவ் பகதூர் எம்.சி. ராஜாவின் அறிக்கையைப் பார்த்த பிறகாவது ஒடுக்கப்பட்ட வர்களுக்கும், ஏனையோருக்கும் புத்தி வருமா? காந்தியார் உயிரைக் காப்பாற்றுவதற்காக புனா ஒப்பந்தத்தை ஆதரித்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ்காரர் காட்டும் நன்றி இது தானா?

இந்நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கடமை என்ன? புனா ஒப்பந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, தனித் தொகுதி பெறத் தொடர்ச்சியாகக் கிளர்ச்சி செய்து வெற்றியடைந்து, காங்கிரஸ்காரரின் ஜாதித் திமிரை அடக்க வேண்டியதே ஒடுக்கப்பட் டோர் கடமை.

– ‘விடுதலை’ – 12.11.1936

No comments:

Post a Comment