* தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் பங்கேற்று
வைக்கம் போராட்ட மலரையும், நூலையும் வெளியிட்டது வரலாற்றுக் கல்வெட்டாகும்!
* ரூ.8 கோடி 14 லட்சம் செலவில் புதிதாக வைக்கத்தில் நினைவுச் சின்னம் கட்டமைப்பது பாராட்டுக்குரியது!
நமது அரசமைப்புச் சட்ட விழுமியங்கள்மீது நடத்தப்படும்
தாக்குதல்களை முறியடிக்க வைக்கம் மாபெரும் உந்து சக்தியே!
இந்திய வரலாற்றில் தந்தை பெரியார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மனித உரிமைப் போராட்டத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை பெரியார் திடல், பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதலமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து, வைக்கம் நூற்றாண்டு விழா மலரையும் (தமிழரசு), பழ.அதியமான் எழுதிய ‘‘பெரியாரும் – வைக்கம் போராட்டமும்” எனும் நூலையும் வெளியிட்டமைக்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நன்றி தெரிவித்தும், பாராட்டியும், முதலமைச்சர்களின் எழுத்து வடிவ உரைகளில் செறிந்து காணப்பட்ட கருத்துரைகளை வரவேற்றும், நன்றி தெரிவித்தும் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
28.12.2023 வியாழன் காலை சென்னையில் மிகப் பெரிய அளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் மிகச் சிறப்புடன் கேரள முதலமைச்சர் மாண்புமிகு திரு.பினராயி விஜயன் அவர்களை அழைத்து நடத்திடவும், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று விழாப் பேருரை நிகழ்த்தி, இரண்டு நூல்களை (வைக்கம் போராட்டம்பற்றிய நூற்றாண்டு விழா மலர் (‘தமிழரசு’ இதழ் வெளியீடாகவும்), பழ.அதிய மான் எழுதிய ‘‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்!” என்ற நூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வெளியீடு) இரண்டு முதலமைச்சர்களும் வெளியிடவும், சிறப்புரை நிகழ்த்தும் வாய்ப்பை எனக்கு அளித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எல்லையற்ற மகிழ்ச்சியைத்
தருவதாக அமைந்தது!
கேரள முதலமைச்சர் அவர்களும் சென்னைக்கு வந்து விழாவில் கலந்துகொள்ள ஆயத்தமான நிலை யில், அன்று காலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்கள் மறைவுச் செய்தி வந்த காரணத்தால், விழாவை குறிப்பிட்ட முறையில், அரங்கில் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டவுடன், நமது முதலமைச்சர் அவர்கள் தெளிவான ஒரு முடிவுக்கு வந்து, விழாவை குறிப்பிட்ட படி விளம்பரப்படுத்தப்பட்ட பெருவிழாவாக நடத்தாமல், விழா நிகழ்ச்சியை சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலே எளிய முறையில் – இரு நூல்களை, இரு முதலமைச்சர்களும், நானும் கலந்துகொண்டு, அமைச்சர்கள் முன்னிலையில் வெளி யீட்டு விழாவினை நடத்த திடீரென முடிவு செய்து, சில மணிநேரத்திற்குள் ஏற்பாடுகள் முடிந்து, முற்பகல் 11 மணிக்குள் நிகழ்ச்சி வரலாற்றில் நிரந்தரமாகப் பொறிக்கப் படும் சிறப்பு நிகழ்ச்சியாக, தந்தை பெரியார் விரும்பும் ஆடம்பரம் தவிர்த்த மிக எளிய – ஆனால், அரிய சிறப்புடன் கூடிய நிகழ்ச்சியாக நடந்து முடிந்து, உல கெங்கும் உள்ள பெரியார் தொண்டர்களுக்கும், பெரியார் பற்றாளர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவ தாக அமைந்தது!
விரைந்து முடிவெடுக்கும் ஆளுமைத் திறனுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டா லின் அவர்களது விரைந்து முடிவெடுக்கும் அறிவு, ஆற்றலுக்கு – ஆளுமைத் திறனுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு – பாராட்டி, நன்றி கூறுகிறோம்!
அதுபோலவே, கேரள முதலமைச்சர் அவர்களும், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு முதல் முறையாக வருகை தந்து, நிகழ்வில் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு, விடைபெற்றுச் சென் றதும் முத்திரை பதித்து, வரலாற்றில் நிலைத்து நிற்கின்ற நிகழ்வுகளாகும்!
அவருக்கும் அனைத்து பெரியார் தொண்டர்கள், மனித உரிமையாளர்கள் மற்றும் ஜாதி ஒழிப்பாளர்கள் சார்பில், நமது பாராட்டு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கால கல்வெட்டு போன்ற
கருத்தாழ மிக்க தகவல் தொகுப்பு!
கருத்தாழமும், சமூகப் போராட்ட வரலாறும், பெரியார் அவர்கள் பெரும் பங்காற்றிய மூத்த, முன் னோடி மனித உரிமைப் போராட்டமாக – இந்திய சமூகநீதிப் போர் வரலாற்றில் அமைந்த வைக்கம்பற்றி, பல அரிய ஆய்வுரைகள் என்ற தகுதி நிரம்பிய உரைகளாகத் தயாரித்ததை – இரு முதலமைச்சர்களும் ஆற்றிடத் தயாராக இருந்ததை ஏடுகளுக்குத் தந்து, நாடறியச் செய்து – ‘‘சரியான, சரித்திர ஆவணங்களாக” அவற்றைப் பதிவு செய்யும் வாய்ப்பினை இவ்விழா வானது தந்தது மிகவும் மகிழத்தக்கது.
நாளைய வரலாற்று ஆய்வாளர்களுக்கு இவ்வுரை கள் முக்கிய கால கல்வெட்டு போன்ற கருத்தாழமிக்க தகவல் தொகுப்பு ஆகும்!
நமது முதலமைச்சர் அவர்கள் உரையில், தந்தை பெரியாரின் போராட்டங்கள் எப்படி வெற்றிக் கனி பறிப்பன என்பதை ‘‘அன்று பெரியாரை வைக்கத்தில் கைது செய்தது திருவிதாங்கூர் அரசு; இன்று அதே கேரள அரசும் – தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு (வெற்றி) விழாவைக் கொண்டாடுகின்றன” என்று பதிவு செய்தார்.
தந்தை பெரியாரின் பெரும்பங்கினைப்
பாராட்டி நினைவு கூர்ந்தார்கள்!
சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் நாள், கேரள அரசே முன்னெடுத்து, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிகச் சிறப்பான முறையில் வைக்கம் நூற் றாண்டு விழாவை நடத்தி, தந்தை பெரியாரின் பெரும்பங்கினைப் பாராட்டி நினைவு கூர்ந்தார்கள்!
வைக்கம் நூற்றாண்டு இரு அரசுகளுக்கிடையே (அண்மையில் அரசு விழா என்ற முறையிலும்) நல்லுறவுப் பாலமாக இருந்தது.
கடந்த 31.1.1994 அன்று, அன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் வைக்கத்தில் தந்தை பெரியாருக்குச் சிலை அமைத்து, பக்கத்தில் ஒரு படிப்பகம் – நூலகம் அமைத்தும், அதில் ஒரு பகுதி இடம் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் சொந்த இடமாக இருந்த நிலையில், அவ ரும் அதனை அரசுக்கு இப்பணிக்காக நன்கொடை யாகவே வழங்கினார். அதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்து, எனது தலைமையில், அன்றைய அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர் களால் பெரியார் நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, ரூ.8 கோடியே 14 லட்சத்தை நிதியாக ஒதுக்கியது!
சுமார் 30 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தப் பகுதி யில், கட்டடங்களும், சிலை அமைக்கப்பட்ட இடமும் பழுது அடைந்த நிலையில், இன்றைய நமது முதல மைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நூற்றாண்டும் வருகிற நிலையையொட்டியும், உடனடியாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கத் தில் பெரியார் நினைவிடம் சீரமைப்புக்கென தமிழ்நாடு அரசு, ரூ.8 கோடியே 14 லட்சத்தை நிதியாக ஒதுக்கி, புதுப்பிக்கப்பட்டு, மாபெரும் நினைவகம் அமைக்கப் பட்டு வருகிறது!
தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் ஆகியோரின் மேற் பார்வையில் அது கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அப்பணிகள் முடிவடையும். அதனைத் திறந்து வைப்பதற்கு நானும் கேரளம் செல்லவிருக்கிறேன் என்று இந்த உரையில் சிறப்பாக அறிவித்துள்ளார்கள்.
ஆக்கப்பூர்வமான, காலத்தை வெல்லும் சிறப்பு ஏற்பாடுகளாக அவை அமைவது உறுதி.
கேரள முதலமைச்சர் அவர்களது உரை (நிகழ்த்தப் படாமல் – பரப்பப்பட்ட உரை) மிகவும் சிறப்பானது. சமூகப் போராட்டங்களும், அரசியலும் ஒன்றானால், எப்படி நல்ல விடியலைத் தரும்; வினையாற்றல்கள் சமூக சமத்துவ, சம வாய்ப்பு விளைச்சல்களை எப்படித் தரும் என்பதை மிகவும் கருத்துச் செறிவுடன் விளக்கியுள்ளார்கள்.
‘‘இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மறு மலர்ச்சி இயக்கங்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்ற அரசியல் அமைப்புகளே இன்று தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியார், அண்ணா தலைமையில் இருந்த திராவிட இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வர்களால் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடைந்துள்ளது. இந்தப் பெருமைக்குரிய மரபை தமிழ்நாட்டில் திமுக அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
நமது மறுமலர்ச்சி இயக்கங்களின் உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்ற விழுமியங்களை உள் வாங்கி, நவீன கேரளாவை உருவாக்க இடதுஜனநாயக முன்னணி அரசு முயற்சிக்கிறது.
வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் இந்த இரண்டு அரசியல் அமைப்பு களும், அவர்கள் தலைமையிலான அரசுகளும் ஒன்று கூடுவது மிகவும் பொருத்தமானது.”
வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு நமக்கு அமைந்துள்ளது!
மற்றொரு முக்கியமான இன்றைய ஆபத்தான அரசியல் போக்கையும் கேரள முதலமைச்சர் சுட்டிக் காட்டி, அவற்றை முறியடிக்கவும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு நமக்கு அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளதும் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்!
‘‘நமது அரசமைப்புச் சட்டம் மற்றும் அது நிலைநாட்டும் மதிப்புகள், நமது புகழ்பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உருவான விழுமியங்கள் மீது கடுமையான தாக்குதல் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வைக்கம் சத்தியாகிரகத்தின் மதச் சார்பற்ற தன்மைபற்றி குறிப்பிட்டிருந்தேன். இது நமது சுதந்திரப் போராட்டத்தின் மிகவும் போற்றுதலுக்குரிய மதிப்புகளில் ஒன்றாகும். இது நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். எவ்வாறாயினும், நமது மதச்சார்பற்ற அரசியல் ஒரு மதவாத அரசால் மாற்றி யமைக்கப்படுகிறது. நமது அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிரு தியால் மாற்றப்பட முயற்சிகள் நடக்கின்றன. நமது கூட்டாட்சி அமைப்பு ஒற்றையாட்சி அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது.மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சுதந்திரமான, இந்தி யாவின் அடிப்படைக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற மோசமான அனைத்து முயற்சிகள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், அவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும்” என்று கூறி, வைக்கம் போராட்ட வெற்றி விழா, நமது சமத்துவ அறப்போராட்டங்கள் கூர்மை மழுங்காமல் இருக்க, சாணை தீட்ட உதவும் ஒரு புத்தாக்கப் பாசறை விழா என்பதை நன்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
வைக்கம் போராட்டம், 100 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் சென்று, தமிழ்நாட்டுப் பெண் மணிகளைக்கூடப் போராட்டக் களத்தில் அன்னை நாகம்மையார் தலைமையில், போராளிகளாகக் களங் காணச் செய்ததும், வைக்கம் தெருக்களைத் திறந்து வெற்றி கண்டது மட்டுமல்ல – கூடுதலான ஒரு செய்தி!
மற்ற பல போராட்டங்கள் வினையாற்றி வெற்றி கண்டவையாக இருக்கலாம் – வரலாற்றில்!
பல போராட்டங்களுக்கு வைக்கம் போராட்டம் ஒரு செயலூக்கியாக அமைந்தது!
ஆனால், வைக்கம் போராட்டத்தின் தனித்தன்மை என்பது அது வினையாற்றி வெற்றிக் கனியைப் பறித்தது மட்டுமல்ல, பல்வேறு மனித உரிமைப் போராட்டங் களையும் விதைத்து விளைச்சலைத் தந்த செயலூக்கி யான காரணப் போராட்டமாகும்!
1. 1927 இல் ‘மகத்’ என்ற இடத்தில் உள்ள குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கப் போராடத் துணிந்ததற்கு வைக்கம் போராட்டம் ஒரு தூண்டு வினையாக அமைந்தது என்பதை டாக்டர் அம்பேத்கர், தாம் நடத்திய ‘மூக்நாயக்’ ஏட்டில் தலையங்கமாகப் பாராட்டி எழுதியதே ஒரு சான்றாகலாம்!
2. ‘வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்களை’ வெட்கப்பட வைத்து, போராட்டக் களத் திற்கு அழைத்து மனித சமத்துவப் போராட்டத்தை நடத்திடும் நெஞ்சுரத்தை மகளிருக்குத் தந்ததற்கு அன்னை நாகம்மையார் தலைமையில், பெண்கள் வைக்கத்தில் நடத்திய அறப்போராட்டம் – அதுவும் 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு திருப்பம் அல்லவா!
(இப்படிப் பல! மற்றொரு சமயத்தில் அவற்றை விரிவாக ஆய்வு செய்வோம்!)
அறிஞர் அண்ணாவின் தொலைநோக்கு!
பெரியாரின் பெருந்தொண்டு, அறிஞர் அண்ணா சொன்னதுபோல், ‘‘பல நூற்றாண்டை ஒரு சிறு குளிகைக்குள் அடைத்தது போன்றது” – (‘‘Putting Centuries into Capsules”).
அதனையே விரிவாக்கி 28.12.2023 இல் வைக்கம் நூற்றாண்டு சிறப்பு விழாவினை, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடத்தினார் கொள்கைப் பூர்வ லட்சிய வழி நின்று ஆட்சி நடத்தும் நமது முதலமைச்சர் – ‘கேப்சூல்’ போல!
தந்தை பெரியார் நினைவிடத்தில், இரு மாநில முதல மைச்சர்களும் மலர்வளையம் வைத்து, மலர்தூவினர்.
இவ்விழா கொள்கை வெற்றிக்கு அச்சாரமாக, வரலாற்று மகுடத்தின் வைரக் கற்களாக ஜொலித்தது.
புரட்டு பலூனை குத்திய சிறிய குண்டூசிகளாக அமைந்தன
தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க வில்லை என்று புளுகும் புரட்டர்களின் பொய் பலூனை இந்த எளிய நிகழ்ச்சி – அவ்விழாவில் ஆற்றிடவிருந்த ஆழமான உரைகள் – புரட்டு பலூனை குத்திய சிறிய குண்டூசிகளாக அமைந்தன என்பதே மறுக்க முடியாத உண்மை! உண்மை!! உண்மை!!!
அளவற்ற மகிழ்ச்சியோடு, நன்றி! நன்றி!! நன்றி!!! என்று கூறுகிறோம், கூவுகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.12.2023
No comments:
Post a Comment