வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

featured image

திடுக்கிட வைக்கும் திருட்டு நூல் விற்பனை!

திருட்டுக்களில் பல வகை உண்டு.
பணத் திருடர்கள், பக்காத் திருடர்கள், முக்கிய புள்ளி விவரங்களைத் திருடி பிற நாட்டுக்கு விற்பது, இந்தியாவின் கடவுளர், கடவுளச்சிகளின் சிலை திருட்டு என இப்படி பல உண்டு என்றாலும், இன்றைய ஆங்கில ஏடு ‘ஹிந்து’வில் வந்துள்ள விசித்திர திருட்டும், அதை விளம்பரப்படுத்தியே விற்று காசாக்கிடும் புதிய முறையும் முற்றிலும் வியக்கத்தக்கதாக உள்ளது.
உதக மண்டலத்தில் உள்ள ஒரு நூலகத்தில் சில முக்கிய கிடைக்க முடியாத புத்தகங்கள் (Rare Books) என்ற வரிசையில் இருந்த ஒரு புத்தகம் – “The Pirates of Malabar and an Englishwoman in India” என்ற கர்னல் ஜான் பிடுலஃப் (Colonel John Biddulph) என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்னே எழுதிய ஒரு பழைய அரிய ஆங்கில நூலை, பெங்களூருவில் வசிக்கும் கதித்ரா தேப் நாத் (Katitra Debnath) என்ற நபர் திருடிக் கொண்டு சென்று, அங்கே இணையதளத்தில் ஒரு விளம்பரம் – “இந்த அரிய நூல் விற்பனைக்கு கிடைக்கும்” என்று விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
உதக மண்டலத்தில் புத்தகக் காட்சி நடத்தி முடித்தபின், அங்கே வைக்கப்பட்ட நூல்களின் இருப்பு (Lacking Stock) குறித்து கணக்கெடுப்பைப் பார்க்கும் போதுதான் இந்த 200 ஆண்டு பழைமை வாய்ந்த அரிய நூல் காணாமற் போய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்! இதுபற்றி காவல் துறையில் உடனடியாக புகாரும் கொடுத்து விட்டார்கள்.
இதை நமது ‘சைபர் கிரைம்’ காவல்துறையின ருடன் இணைந்து, அந்த விளம்பரத்தைக் கொடுத்த பெங்களூரு முகவரியாளரைக் கண்டுபிடித்து, கைது செய்து வழக்கும் போட்டுள்ளனர். சிறையிலும் அடைத்துள்ளார்கள்.
இந்த நபருக்கு திருட்டுத் தொழில் – இப்படி அரிய புத்தகங்களைத் திருடித் திருடி தனது வாழ்க்கையை நடத்தி, வரும் பணம் சேர்க்கும் தொழில் – புத்தகத் திருடராக ஆகியுள்ளார்.
நல்ல வாய்ப்பு – இம்மாதிரி விளம்பரம் கொடுத்த போதே கண்டறிந்து – குற்றவாளியைக் கண்டுபிடித்து வழக்குப் போட்டு விட்டனர் காவல்துறையினர்!
இதை யாராவது நம்மைப் போன்ற புத்தகக் காதலர்கள் – என்ன விலையானாலும் கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும் என்று விரும்பும் புத்தகப் பிரியர்கள் வாங்கியிருந்தால், அவர்களும் அல்லவா திருட்டுச் சொத்தை வாங்கிய குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு வழக்கில் சிக்கி இழுத்தடிக்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்கும்.
அரிய புத்தகங்களை முக்கிய நூலகங்களிலும், ஆய்வகங்களிலும் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது இதன் மூலம் புத்தக வாசிப்பாளர்களும், நூலகர்களும் அறிய வேண்டிய – கற்க வேண்டிய பாடம்!
இன்றும் சில நூலகங்களில் படிப்பவர்கள் ஒரு நூதன திருட்டை நடத்தி வருவதாக – பல ஆண்டுகளுக்குமுன் பெரியார் திடலில் பெரியார் – பகுத்தறிவு நூலகம் ஆய்வகத்திலே கண்டறிந்த அனுபவமும் எங்களுக்கு உண்டு!
படிப்பவர் ஜன்னல் வழியே வெளியே பக்கு வமாக எறிந்து விட்டு, பிறகு வெளியில் போகும்போது யாரும் அறியாமல் அதனை மறைத்து எடுத்துப் பழைய புத்தக வியாபாரிகளிடம் விற்பது என்ற ஒரு பழக்கம். ஜன்னல்களில் பிறகு, வலைக்கம்பி அடித்தோம்.
U.K. Oxford நகரில் இதுபோன்ற அரிய பழைய புத்தக விற்பனைக் கடை தனியே உள்ளது. விலை கொள்ளை விலை. பூட்டி வைத்து, பேரம் படிந்த பிறகே, விற்பனை பில் கொடுத்து முடித்தபிறகே புத்தகத்தை அவர்கள் எடுப்பார்கள்.
அந்த அனுபவத்தை நானே பெற்று, பணம் தந்து ஒரு அரிய நூல் வாங்கி வந்தேன் (மறைந்த நண்பர் சேகரன் அங்கே குடியிருப்புள்ளவர்).
என்னே விசித்திர வியாபாரம்!

No comments:

Post a Comment