வி.சி.வில்வம்
“வியப்பு” என்பதைத் தவிர, வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆம்! “பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி” என்கிற தலைப்பில், 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை மகளிர் சார்பில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்! அட்டையைத் திறந்ததும் “மலர் மணம்” பகுதியில் அடுக்கடுக்கான கட்டுரைக் குவியல்கள்!
எவ்வளவு கடுமையான உழைப்பைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்! மலர் வருகிறது என்பது தெரியும், இப்படி ஒரு மலர் வருமென்று தெரியவில்லை! 44 தமிழ்க் கட்டுரைகளும், 8 ஆங்கில கட்டுரைகளுமாக அசத்தலாக, அரவணைத்துத் தந்திருக்கிறார்கள்!
பறந்து வந்த கட்டுரைகள்
திமுக துணைப் பொதுச் செயலாளர் தொடங்கி, தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், அரசியல் கட்சி களின் போராளிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆய்வாளர்கள், முனைவர்கள், பேராசிரியர்கள், மருத் துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்குரை ஞர்கள் என கல்வியாளர்கள் கூட்டத்தையே கலந்துக் கட்டி அடிக்கச் செய்திருக்கிறார்கள்! தமிழ்நாடு, மும்பை, அசாம், அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து என உலகம் முழுவதிலும் இருந்து கட்டுரைகள் பறந்து வந்திருக்கின்றன!
“பிறப்பதற்கே பெண்கள் போராடித்தான் இந்த மண்ணிற்கு வர வேண்டியிருந்தது”, என ஆசிரியர் குறிப்பிடும் சூழல் இந்த நாட்டில் இருந்தது!
அப்படியான சூழலில் இன்றைக்கு இத்தனை மகளிர் சேர்ந்து ஒரு அழகான மலரை, மலரச் செய்திருக்கிறார்கள்! உண்மையான பெண்ணுரிமைக் கருத்துகளை உலகினில் யாருமே தந்திடாத நிலையில், தமிழ்நாட்டுக்குத் தந்தவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள். அய்யய்யோ… அவர் பெயர் இராமசாமி இல்லை, அவர்தான் எங்களின் “பெரியார்” என மேடைப் போட்டு முழங்கியவர்கள் நம் மகளிர்! பெரியாரை “தந்தை” என அழைக்கிறார்கள், எங்கள் “தாயும்” அவர்தான் என இன்றைக்கு இளைய மகளிர் புதுமொழி எழுதிவிட்டார்கள்!
ஆமாம்! நமக்கெல்லாம் அவர் தத்துவத் தலைவர். ஆனால் மகளிருக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்வுக் குவியல்! சுதந்திர உணர்ச்சி யையும், குறிப்பாக நிம்மதியையும் தேடித் தந்தவர்! அவ்வகையில் மலரை ஒவ்வொன்றாக நுகரத் தொடங்குகிற போது, தனித்துவ மணம் தாள்களில் வீசுகிறது!
ஆசிரியரின் பங்களிப்புகள் மகத்தானவை
“பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளே கலங்கரை விளக்காக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரியத்தின் அடிநாதம் மனிதநேயம் தான்! அதை உணர்ந்து பெரியாரின் கொள்கைகளை, சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் ஆசிரியரின் பங்களிப்புகள் மகத்தானவை”, என மனந்திறந்து வாழ்த்துகளைப் பதிவு செய்திருக் கிறார் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர், கனிமொழி எம்.பி., அவர்கள்!
“எங்கள் திருமணத்தை நடத்தி வைத்ததே ஆசிரியர் தான்” என்கிறார் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி அவர்கள்! “தமிழர் தலைவரும் நானும்” என்கிற அற்புதமான தலைப்பில் தம் நினைவுகளைப் பகிர்ந்திருக் கிறார். இது பலருக்கும் புதிய செய்தியாகவும் இருக்கக்கூடும்!
அடுத்தாண்டு வரப் போகும் நாடா ளுமன்றத் தேர்தல் முடிவுகளை இந்தி யாவே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்மையார் சோனியா காந்தி அவர்கள் எழு திய கடிதம் பரபரப்பாகப் பேசப்பட்டது! “மக்களைப் பிரித்தாளும் பிஜேபியின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைகள் அடித் தளமாக உள்ளது! பெரியாரின் தொலைநோக்கும், கொள் கையும் நம்மை வழி நடத்தட்டும்! தங்கள் வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெறட்டும்!”, எனச் சிறப்பான வரிகளால் வாழ்த்தியிருக்கிறார் அந்த அம்மையார்!
தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களோ, தம் ஒரு பக்க வாழ்த்துக் கட்டுரைக்கு, “அய்யாவின் அய்யா” எனத் தலைப்புக் கொடுத்திருக்கிறார். எவ்வளவு ஆழமான, அசத்தலான தலைப்பு! எல்லாவற்றையும் தலைப்பு ஒன்றிலேயே முடித்து விட்டார்! “எப்போதும் இயல்பாகவும், பகட்டுகள் இன்றியும் பேசும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி அவர்கள், “ஆசிரியரின் எளிமை, பேச்சுச் தெளிமை, பிறரைப் பாராட்டும் பாங்கு” எனத் தம் அனுபவங்களை அழகாக வடித்துள்ளார்!
இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம்! அனைத்துக் கட்டுரைகளையும் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் நிறைவு செய்திருக் கிறார்கள். படிப்பதற்கும் ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறார்கள். “தந்தைக்கு மகன் ஆற்றும் சாலச் சிறந்த பணி ஆசிரியர் பணி”, எனச் சுருக்கென்று தைக்கிறார் மேனாள் ஒன்றிய சமூகநீதி இணைய மைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள்!
“தமிழ்நாட்டில் திராவிட இயக்கக் கட்சிகள் அமைவதற்கும், அதற்கேற்றார் போல் தேர்தல் அணிகள் அமைவதற்கும் ஆசிரியர் தான் உறவு பாலமாக இருக்கிறார். பெரியாரின் நம்பிக்கையை மெய்யாக்கி வரும் ஆசிரியர் நீடூடி வாழ்க”, என உளமாறப் பதிக்கிறார் எழுத்தாளர் ஓவியா அவர்கள்.
இறக்கும் வரை போராளியாக
வாழ்வது எப்படி?
அண்மையில் மறைந்த பார்வதி அம்மா குறித்து யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அவர்களின் கட்டுரையையும் இந்த மலரில் “நினைவாக” இணைத்திருக்கிறார்கள். இறக்கும் வரையில் ஒருவர் எப்படி போராளியாக இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக் கொள்ளலாம்
“தந்தை பெரியாரின் அரும்பெரும் பணியைத் துணிவோடு தோள் சுமக்கும் மாவீரர் ஆசிரியர் கி.வீரமணி”, எனத் தமிழ் சைவப் பேரவைத் தலைவர் ம.கலையரசி அவர்கள் கனலாய் ஒரு கருத்தைப் பதிந்திருக்கிறார்!
பெண்கள் அதிகளவு காவல்துறைப் பணிக்கு வர வேண்டும் என விரும்பினார் பெரியார்! தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குநராகப் பணிபுரியும் வி.வனிதா, அய்.பி.எஸ் அவர்களின் செய்தி இம்மலரில் இடம் பெற்றுள்ளது! “பெரியாரின் கையைப் பிடித்துதான் துணிச்சலாகச் செயல்படு கிறேன்”, என்கிற அவரின் வார்த்தை மலருக்கு கூடுதல் வாசம் வீசுகிறது!
“பெண் ஏன் அடிமையானாள்? எனும் நூலைக் கடந்த 27 ஆண்டுகளாக எனது மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தி, ஒரு விவாதத்தையும் முன்னெடுத்து வந்தேன். அதற்கான ஊக்கத்தை ஆசிரிய ரிடம் இருந்து தான் பெற்றேன்”, என்கிற ஆச்சரியமான செய் தியைப் பகிர்ந்துள்ளார் முனைவர் அரங்க மல்லிகா. இவர் எத்தி ராஜ் மகளிர் கல்லூரி யில், தமிழ்த்துறைத் தலைவராகப் பணி யாற்றியவர்.
“தந்தை பெரியாரின் தொண்டினால், ஆசிரியர் அய்யாவின் உழைப்பால் வெளிவந்த பல்லாயிரக் கணக்கான மருத்துவர்களில் நானும் ஒருவர். தலைவரின் குருதிக் குடும்ப உறவு, கல்விக் குடும்ப உறவு, கொள்கைக் குடும்ப உறவு” என வகை, வகையாய் பிரித்துச் சிந்தனைகளை மெருகேற் றுகிறார் டாக்டர் ச.மீனாம்பாள் அவர்கள்.
“வரலாறு தனக்கான தலைவனைத் தேடிக் கண்டறியும் என்று சொல்வார்கள். அப்படித்தான் தந்தை பெரியார் எனும் மாபெரும் தலைவனின் சிந்தனைகளை, போராட்ட வழிமுறைகளைத் தொடர வலிமையானதொரு தோழனாக, ஆசிரியர் அவர் களைக் கண்டடைந்தது”, எனத் தம் சரளமான தமிழ் நடையில் குறிப்பிடுகிறார் கவிஞர் சல்மா அவர்கள்.
“என் போன்ற பெண்கள் எல்லாம் இன்று பொது வாழ்க்கையில் எத்தகைய விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் தந்தை பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கைகளை இறுகப்பற்றிக் கொண்டு தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் அதற்குப் பெரியார் பணி ஒன்றே பெரிதென வாழும் ஆசிரியர் அவர்களே காரணம் என நான் சும்மா சொல்லிவிடவில்லை; அனுபவித்ததை எழுதுகிறேன்”, என்கிறார் குடந்தை தமிழினி அவர்கள். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநிலச் செயலாளராக இருக்கிறார்!
இனப் பகையை ஒட வைக்கும் ஆசிரியரின் ஆதாரப் பூர்வ உரை
“எதிரிகளை வீழ்த்தும் சான்றுகளோடு தான் மேடையில் நிற்பார். எதிரிகள் கேட்கும் ஒற்றைக் கேள்விக்கு, ஓராயிரம் ஆதாரங்களை அள்ளி வீசுவார். பேச்சைக் கேட்ட ‘பகை’ பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடியதை நான் பார்த்திருக்கிறேன்”, எனச் சுருக்கென்று சூடு வைக்கிறார் பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்கள்!
“திராவிடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்”, என மேனாள் மூத்த அறிவியல் அறிஞரும், திட்ட மேலாளருமான முனைவர் கோமதி அவர்கள் முன்பே பதிவு செய்த கருத்தை, இங்கு சுட்டிக்காட்டி இருப்பது பொருத்தமானது!
“கல்லார்க்கும், கற்றவருக்கும் களிப்புத் தரும் உரைக்குச் சொந்தக்காரர் ஆசிரியர். ஒவ்வொரு தமிழனின் இனமானத்தைக் காக்கும் வகையில் சிந்தனையைச் சிலிர்க்க வைத்து, குருதிப்புனலில் கொள்கைத் தணல் குறையாத, அறிவார்ந்த சமூகமாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து, பெரியாரின் கொள்கைக் கருத்தியலை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்” என்கிறார் தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பின், உதவி செயற் பொறியாளர் கோ.லீலா அவர்கள்.
“கண்களால் பார்ப்பது மட்டுமே அழகு என்றிருந்த காலத்தில், மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்றார் பெரியார் . இப்படிப்பட்ட மாற்று சிந்தனை களை வியந்து பார்த்தவர்களில் நானும் உண்டு. அதேநேரம் இன்றைய இளம் தலைமுறையையும் ஈர்ப்பவராக ஆசிரியர் இருக்கிறார்”, என சிங்கப்பூரில் இருந்து பதிவிட்டுள்ளார் லீலா சங்கர் அவர்கள்!
“ஆசியாவிலேயே பெண்களுக்கு என்று முதன் முதலில் தொடங்கப்பட்ட பெரியார் மணியம்மைப் பொறியியல் கல்லூரியில், கணினிப் பிரிவில் அனுமதிக் கப்பட்ட முதல் மாணவி நான். இன்று சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராகப் பணிபுரி கிறேன். இதற்கெல்லாம் ஆசிரியர் அவர்கள் தான் காரணம். அவர்களின் அன்பும், ஊக்குவிப்பும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தோழர்களுக்கு உண்டு” என்கிறார் கி.குடியரசி அவர்கள்.
“வாழ்வியல் சிந்தனைகளை எழுதிக் கொண்டி ருப்பவர். வாழ்க்கையில் பலரின் சிந்தனைகளைத் தூண்டும் வகையில், தம் வாழ்க்கையையே பாடமாக்கி வாழ்ந்து வருபவர்”, என்கிற அழகிய வரிகளில் தம் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள்.
“இரண்டாம் சமூக நீதிப் போராட்டம் என்று சொல்லப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட பணி இமாலய பணியாகும்! ஸநாதனத்திற்கு எதிராக சமூகநீதியைப் பாதுகாக்கும் போரில் தலைமை தாங்கும் ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”, என ஊடகவியலாளர் கவிதா சொர்ணவள்ளி தம் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
ஆக ஒவ்வொரு தோழரும், வெவ்வேறு கோணங்களில் மலருக்கு வாசம் சேர்த்திருக்கிறார்கள். தவிர திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கும் மகளிர் தோழர்களும் அற்புதமான கருத்தாக்கங்களைத் தூவிச் சென்றுள்ளனர்!
170 பக்கங்களிலும் மகளிர் தம் தனித்தமையைச் சிறகடித்து பறக்கவிட்டிருக்கிறார்கள். ஆசிரியருக்கும், கவிஞருக்கும் மட்டும் சிறிது இட ஒதுக்கீடு கொடுத் திருக்கிறார்கள். அதற்கு நம் மகிழ்ச்சியும், பாராட்டு களும்!
மின்சாரத்தைப் பாய்ச்சும்
சவுக்கடி கவிதை
இரண்டு பக்கங்களில் விரிந்திருக்கிற கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் கவிதையில், “பெரியாருக்குப் பிறகு பிழைக்குமா இந்த இயக்கம் என்ற பித்துக் குளிகளுக்கு இதுதான் சவுக்கடி”, என வழமையான மின்சாரத்தைப் பாய்ச்சி இருக்கிறார்.
ஆசிரியரிடம் கேள்வி கேட்டு பதிலளித்த பகுதியும் சிறப்பாக வந்திருக்கிறது! “மாணவிகளை” மட்டும் கேள்வி கேட்க வைத்ததும் சிறப்புதான்!
அதேபோல இன்னொன்றும் சொல்ல வேண்டும்! வழக்கமாக நமது மலர்கள் அனைத்துமே நேர்த்தியாக வடிவமைக்கப்படும் ஒன்றாகும்! இதில் கூடுதலாகப் பக்கத்திற்குப் பக்கம், காணக் கிடைக்காத படங்கள் எல்லாம் பரவிக் கிடக்கின்றன. நல்ல படங்களோடு வாசிக்கிற கட்டுரைகளில், அந்த மனிதரும் நம்முடனே பயணத்தில் வருவார்!
அதேபோன்று இடையிடையே பதியப்பட்ட பெட்டிச் செய்திகளும், துணுக்குகளும், வரலாற்று நிகழ்வுகளும் மிகச் சிறப்பானவை!
இறுதியாக நாம் அதிகம் கேள்விப்பட்டிராத, எதுவும் பேசிடாத, நம்மால் எழுதப்படாத ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் வீ.மோகனா அம்மை யாரின் நேர்காணல், இந்த மலரின் வெற்றிக்குப் பெரும் காரணமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்! அவர்கள் இதற்கெல்லாம் ஒப்புக் கொள் ளவே மாட்டார்கள் என்றாலும், அந்த விசயத்திலும் மகளிரணித் தோழர்கள் முயன்று சிறப்பித்து விட்டார்கள்!
பகுத்தறிவு தோட்டத்தில் இந்த அரிய பெரிய வாசனை மலரை உருவாக்க உழைத்திட்ட ஒவ்வொரு மகளிரணித் தோழர்களுக்கும் பாராட்டுகள்!
No comments:
Post a Comment