நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் பாடம் கற்கவேண்டும்! ஜனநாயகம், மதச்சார்பின்மையைக் காப்பாற்ற தங்களைப் பின்னுக்குத் தள்ளி ஒன்றுபட்ட சக்தியாக எழவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் பாடம் கற்கவேண்டும்! ஜனநாயகம், மதச்சார்பின்மையைக் காப்பாற்ற தங்களைப் பின்னுக்குத் தள்ளி ஒன்றுபட்ட சக்தியாக எழவேண்டும்!

தேர்தலில் வெற்றி பெற - ‘இந்தியா' கூட்டணியின் 

ஒற்றுமையே முக்கியமான ஒரே யுக்தி- சக்தி!

5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாடம் கற்கும் வகையில் ‘இந்தியா' கூட்டணியில் உள்ளோர், வீழ்த் தப்படவேண்டிய எதிரிகளை மட்டுமே முன்னிறுத்தி, ஒன்றுபட்ட சக்தியுடன் உழைத்து வெற்றியை ஈட்ட முன்வரவேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு:

டிசம்பர் 6 - என்பது இந்திய வரலாற்றில் மிகுந்த துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்திய துன்ப நாளாகும்!

உலகப் புரட்சியாளர் வரிசையில் வைத்து எண்ணப் படவேண்டிய, ‘பாபா சாகேப்' டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது மறைவு நாளாகும்!

உயர்ஜாதி ஊடகங்கள் தங்களது 

தந்திர அஸ்திரத்தை வீசுகின்றன!

அண்ணல் அம்பேத்கர் ஓர் ஒப்பற்ற சிந்தனையாளர். தனக்கென வாழாத தகைசால் மனிதநேயர். இன்றும் அவரை ஒரு குறுகிய ஜாதி வட்ட சிமிழுக்குள் அடைத்து வைக்க உயர்ஜாதி ஊடகங்கள் தங்களது தந்திர அஸ்திரத்தை வீசுவதில் ஓய்வதில்லை.

அவர் மனித குலத்தின் சமத்துவத்திற்காக தனது அறிவு, ஆற்றல், ஆளுமை இவற்றை சமூகத்திற்குத் தந்த தன்னல மறுப்பாளர். அதனால்தான் அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாக ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

‘‘நான் ஒருபோதும் என்னையும், எம் மக்களையும் இழிஜாதியாக்கி, கல்விக் கண்ணைக் குத்தி, என்றென்றும் மீண்டு எழ முடியாத படிக்கட்டு ஜாதி பேதத்தை உரு வாக்கி நிலை நிறுத்தும் மதமான ‘ஹிந்து' மதத்தினனாக சாகமாட்டேன்; அதிலிருந்து வெளியேறி, சமத்துவம், சகோதரத்துவத்தை போதிக்கும் பவுத்த நெறியில் இணைவேன்'' என்று கூறி, அதை மறையும் முன் செய்து காட்டியவர்.

தந்தை பெரியார்தம் அறிவுரைப்படி...

‘‘அப்படி ஒரு முடிவை எடுத்து செயல்படும்போது நீங்கள் தனியே போகக்கூடாது; கணிசமான மக்களோடு அதைத் தழுவுதலே சாலச் சிறந்தது'' என்று யோசனை கூறிய தந்தை பெரியார்தம் அறிவுரைப்படி, 5 லட்சம் மக்களுடன் நாகபுரியில் ‘தீட்சா' பூமியில், ஒரு சமத்துவ சமூக ஒளியை ஏற்ற இதோ எனது செயல் என்று செய்துகாட்டிய செயற்கரிய செய்த செம்மல்!

புரிந்துகொள்ள வேண்டிய 

பாடங்கள் பல உண்டு!

தனது சம்பாத்தியத்தை எல்லாம் புத்தகச் சாலை களுக்கே செலவிட்டு, தனது மிகப்பெரிய ஆய்வுக் களஞ்சியமான ‘‘Buddha and Dhamma''  - ‘‘புத்தமும் தம்மமும்'' என்ற அவரது தலைசிறந்த நூலை வெளியிட நிதி வசதியற்றதால், பிரதமர் நேருவுக்கு கடிதம் அனுப்பி, 50 ஆயிரம் ரூபாய் கடன் உதவி கேட்ட நேரத்தில், அதை அவர் குடியரசுத் தலைவர் ‘தத்துவவாதி' என்று வர் ணிக்கப்பட்ட டாக்டர் என்.இராதாகிருஷ்ணன் அவர் களுக்கு அனுப்ப, அதற்கு அவர் இசைவு தரவில்லை என்பதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் பல உண்டு.

புத்தரை, ‘‘விஷ்ணுவின் 9 ஆவது அவதாரம்'' என்று வர்ணித்ததை மறுக்காது ஏற்றுக்கொண்டதைப்போல, தனது நூலில் குறிப்பிட்ட டாக்டர் இராதாகிருஷ்ணய்யர் எப்படி உதவிட இதற்குப் பரிந்துரைப்பார்?

‘வறுமையிலும் செம்மை' என்பதற்கான இலக்கணப் பொதுவாழ்விற்குச் சொந்தக்காரர்!

எவ்வளவு நேர்மையான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இறுதியில் ஒரு 50 ஆயிரம் ரூபாயை புத்தகம் அச்சிட, முதலீடு செய்ய இயலாத ‘ஏழை' வறுமையாளர், ‘வறுமையிலும் செம்மை' என்பதற்கான இலக்கணப் பொதுவாழ்விற்கு உரிய தூய்மைப் பொதுத் தொண்டறச் செம்மல் அண்ணல் அம்பேத்கர் என்பது புரிகிறதல்லவா?

அத்தகையவரின் நினைவு நாளில்தான் ஆர்.எஸ்.எஸ்., அதன் முக்கிய மற்றைய  பிரிவுகளான விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் முதலியன ஆர்.எஸ்.எஸ். கண் ஜாடையுடன் சுமார் 450 ஆண்டுகளாக மத வழி பாட்டுக் கூடமாக இஸ்லாமிய சகோதரர்களால் பயன் படுத்தப்பட்டு வந்த பாபர் மசூதியை இடித்து, இந்திய வரலாற்றில் மதவெறி நஞ்சைத் தூவியதோடு, அதன் விளைவாக இந்தியாவின் பற்பல மாநிலங்களில் மதக் கலவரங்கள் வெடித்து, உயிர்க்கொலைகளும், ரத்த ஆறுகளும் ஓடிய கோரத்தாண்டவமும் அரங்கேறியது.

அமைதிப் பூங்காவாக இருந்தது 

பெரியார் மண்ணான தமிழ்நாடு!

தமிழ்நாடு என்ற திராவிட பூமி -பெரியார் மண்தான் அந்த ‘அமளி துமளி'களுக்கு இடந்தராது அமைதிப் பூங்காவாக - தேவைப்பட்ட மாநிலங்களுக்குத் தமிழ் நாட்டின் காவல்துறையை அனுப்பி, மற்ற மக்களின் உயிர் காக்கவும் ஒத்துழைத்தது வரலாறு. ஊடகக் கட்டுரைகள் இதற்குத் தக்க சான்று பகரும்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் பகுதியை சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நடை முறைப்படுத்தியதற்கு எதிராக, அவரது ஆட்சியை 11 மாதங்களில் கவிழ்த்ததோடு, அந்த மண்டலுக்கு எதிராக நாங்கள் இதோ கமண்டலைத் தூக்குகிறோம் என்று பாபர் மசூதி இடிப்பினை நடத்தியவர்கள்தான் காவிக் கட்சியினர். 

மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க 

பலவித உத்திகளை முன்வைக்கிறது 

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல்!

இன்று அதுதான் அவர்களுக்கு இராமன் கோவில் இலக்கைக் காட்டி, இன்றும் மதவெறி ஊட்டி, பல்வகை தந்திரங்கள், வியூகங்களை வகுத்து, பக்திப் போதை மாத்திரைகளால் வடபுலத்து மக்களை வளைத்து - வாக்கு வங்கியைத் தமதாக்கி ஆட்சியைப் பிடித்து, அதன்மூலம் பார்ப்பன முதலாளிகளின் பண பலம், அதிகாரபலம், பத்திரிகை பலம், வன்முறை பலம் எல்லா வற்றையும் சமயத்திற்கேற்ப பயன்படுத்தி, இதே உத்தியை வெவ்வேறு வியூகங்களாக மாற்றி, பல உரு மாற்றத்தோடு மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க பலவித உருமாற்றங்களை முன்வைக்கிறது.

இதை எதிர்க்கட்சியான ‘இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அனைவரும் உணர்ந்து, புரிந்து, யாரும் தங்களை முன்னிலைப்படுத்தாது - யார் வரக்கூடாது என்பதே இக்காலகட்டத்தில் முக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறிய கூர்மையான திட்டத்தை - நடைபெற்று முடிந்த அய்ந்து மாநில தேர்தலில் பெற்ற பாடத்தின்மூலம் உணர்ந்து, மதவெறி இந்தியாவாக ஆகவிடாமல், மனிதநேய மக் களாட்சி இந்தியாவாக மீண்டும் மலர ஒன்றுபட்டு, ஓரணி யில் நின்று, வென்று காட்டிட, இந்த டிசம்பர் 6 பாடங்கள் அத்துணை எதிர்க்கட்சிகளுக்கும் வழிகாட்டும்!

இப்போது புரிந்துகொள்ளாவிட்டால், எப்போதும் இனி மீள முடியாது!

புதிய வரலாறு படைக்க 

ஒன்று திரண்டு வருக!

ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப் பாற்ற ‘தங்களை பின்னுக்குத் தள்ளி, லட்சியம், கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமையை முன்னே நிறுத்தி', திராவிட ஃபார்முலாவை முன்மாதிரி யாகக் கொண்டு பொது வெற்றிக்கான வியூகத்தை வகுத்து, புதிய வரலாறு படைக்க ஒன்று திரண்டு வருக!

அதைத்தான் டிசம்பர் 6 - நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலின் முடிவுக்குப் பின்னர் ‘பளிச்'சென்று புரிய வைக்கிறது.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.12.2023


No comments:

Post a Comment