இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் அமைப்புக்கும் (அய்எஸ்சிஏ), அதற்கு நிதியளிக்கும் இந்திய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளால் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள அறிவியல் மாநாடு நடக்காமல் போகும் நிலை உள்ளதாம். இவர்களுக்குள் நடக்கும் மோதல்களால் இந்த ஆண்டு மாநாடு நடத்த அனுமதி கொடுத்த ‘லவ்லி’ தொழில் நுட்ப பல்கலைக் கழகம் அந்த அனுமதியை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் மோனிகா குலாட்டி இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத் தலைவர் அரவிந்த் சக்சேனாவிற்கு அனுப்பிய கடிதத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் மாநாடு நடத்த கொடுத்த அனுமதியை திரும்பப் பெறுகிறோம் எனக் கூறியுள்ளார்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகம் நடத்த முன்வந்த போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த நெருக்கடியால் ஜலந்தரில் உள்ள ‘லவ்லி’ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மாநாட்டை நடத்த இடம் தர முன்வந்தது.
இந்த நிலையில். கடைசி நிமிடத்தில் முடிவைத் திரும்பப்பெறுவதால், ஜனவரியில் நாங்கள் மாநாட்டை நடத்த முடியாது என்று இயக்குநர் அரவிந்த சக்சேனா தெரிவித்துள்ளார்.
மோடி ஆட்சிக்கு வந்தது முதலே இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்பு போலி அறிவியல் கருத்துகளை அறிவியல் ஆய்வாக திரித்துக் கூறும் அமைப்பாக மாறிவிட்டது.
2019 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்ததால், பல அறிவியல் ஆய்வாளர்கள் மாநாட்டைப் புறக்கணித்தனர்.
பிஜேபி ஆட்சியின் பத்தாண்டுகளில் கடந்த 9 ஆண்டுகளாக அறிவியல் காங்கிரஸ் மாநாடு பல்வேறு சர்ச்சைகளோடு முடிவடைந்துள்ளது
இந்த அறிவியல் மாநாடு தரமான எதிர்காலத்திற்குத் தேவையான அறிவியலை ஊக்குவிப்பதன் நோக்கத்தை இழந்துவிட்டதாகவும், சமீபகாலமாக, போலி அறிவியலை ஊக்குவிக்கும் மேடைப் பேச்சுக்காகவும், புராணக் கதைகளை அறிவியல் கருத்தாகக் கூறும் மேடையாகவும் மாறிவிட்ட தாகவும் பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தினர்.
2019 ஆம் ஆண்டு நடந்த அறிவியல் மாநாட்டில் ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாக பிறந்தவர்கள் கவுரவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் இருந்ததாகவும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் உளறிக் கொட்டினார்.
“ராமர் அஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூகத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும்” என்றும் அவர் கூறி உள்ளார்.
சிவன் யானை தலையை வெட்டி முண்டத்திற்கு வைத்து விநாயகரை உயிர்ப்பித்த பிளாஸ்டிக் சர்ஜரி அந்தக் கால கட்டத்திலேயே பாரத நாட்டில் இருந்தது என்று பிரதமர் மோடி பேசியதுண்டே!
2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் பிறந்த நோபல் பரிசு பெற்ற வெங்கிட ராமகிருஷ்ணன் – இந்திய அறிவியல் காங்கிரஸ் சில முக்கிய நபர்கள் ஆட்டுவிக்கும் “சர்க்கஸ்” என்று விவரித்தார்.
இனி இத்தகைய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினார். பிரதமர் மோடி அவரைச் சந்திக்க விரும்பியும் அவர் மறுத்து விட்டார்.
60,000 அறிவியல் ஆய்வாளர்களை உறுப்பினராக கொண்ட அறிவியல் காங்கிரஸ் அமைப்பு தொழில் நுட்ப நிறுவனத்துறையுடன் இணைக்கப்பட்ட ஒரு “தன்னாட்சி அமைப்பு” ஆகும்,
கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் நிதிச்சுமையில் தள்ளாடி வரும் இந்த அமைப்பு இதற்குக் கொடுத்த நிதியில் 90 விழுக்காடு ஊதியத்திற்காகவே செலவாகி விடுகிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தது. ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்திற்குப் பாரம்பரியத்தின்படி, அதன் தொடக்க நிகழ்வில் நாட்டின் பிரதமரே ஒருங்கிணைப் பாளராக இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வைத் துவங்கி வைப்பார்.
விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடத்தில் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51A-h) கூறுகிறது. ஆனால் ஓர் அறிவியல் மாநாட்டை நடத்தக் கூட முடியாத பரிதாப அவல நிலை என்பது வெட்கக் கேடே!
மோடி இந்திய அறிவியல் காங்கிரசின் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாத காரணத்தால் இதன் உறுப்பினர்களும், இதர பொறுப்பாளர்களும் செயலிழந்து கை பிசைந்து நிற்கின்றனர்.
மோடிக்கு நல்லதோர் ஆலோசகர் தேவை என்று பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர். ராவ் கூறியது நினைத்துப் பார்க்கத்தக்கது.
விஞ்ஞான மனப்பான்மை வளர்வது மோடி பிரதமராக இருக்கும் ஹிந்துத்துவா சக்திகளுக்கு எதிரானதும், ஆபத் தானதும் ஆயிற்றே!
No comments:
Post a Comment