கரூர் மாவட்டம், புலியூர் அருகே இருக்கிறது கவுண்டம்பாளையம். இந்தக் கிராமத்தில் உள்ள செல்வநகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 16), கரூர் வெண்ணை மலை பகுதியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயப்பிரகாஷூக்குச் சிறு வயதிலிருந்தே அறிவியலில் அதீத ஈடுபாடு இருந்திருக்கிறது. இதனால் கோள்கள், செயற்கைக்கோள்கள் என்று பல விஷயங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தில் ஆர்வமாகத் தேடிப் படித்துள்ளார். அதன் அடிப்படையில், அது பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு புதிதாகச் சிறு சேட்டிலைட் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
அவர் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியின் முதல்வர் உள்ளிட்டோர் ஆதரவில் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது ஒரு பெரிய தொழிற்சாலை வெளியிடும் மாசைக் கண்டறிய வேண்டும் என்றால், இஸ்ரோவை அணுகி, அதற்கான பெரும் தொகையினைச் செலுத்திப் பல நாள்கள் காத்திருந்து அதற்கான முடிவுகளைப் பெற வேண்டிய சூழ்நிலையே நடைமுறையில் உள்ளது. இதனைப் பற்றி அறிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ், இதனை எளிமையாக்க அவரே சேட்டிலைட் ஒன்றை உருவாக்கி யுள்ளார்.
இதுபற்றி, மாணவர் ஜெயப்பிரகாஷிடம் கூறியது:
“தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகளால் வளி மண்டலம், காற்றுமண்டலம் அனைத்தும் பாதிப்படைகின்றன. அதனால், தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகளின் அளவைக் கண்டறிந்து, அதைத் தடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதற்காகத்தான் நான் இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளேன். நான் உருவாக்கிய இந்தச் செயற்கைக்கோள், இன்னர் ஆர்பிட்டல் சேட்டிலைட் வகையானது. இதில் சென்சார்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த சேட்டிலைட் ஒரு பெரிய தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலிருந்து ஹீலியம் பலூன் மூலம் கடல் மட்டத்திலிருந்து 50 கிலோமீட்டர் தூரம் மேலே செல்லும். அங்கு அழுத்தம் காரணமாக ஹீலியம் பலூன் வெடிக்கும்.
அப்போது, அதிலிருந்து பாராசூட் மூலம் இந்த மினி சேட்டிலைட் தரைக்கு வந்து விழும். அதிலிருக்கும் ஜி.பி.எஸ் கருவியின் உதவியுடன் விழுந்த இடத்தைக் கண்டறிந்து விடலாம். மேலும் அதில் உள்ள SD Card இல் வானில் சேட்டிலைட் பயணம் செய்த இடத்திலிருந்த வெப்பநிலை, அழுத்தம், உயரம், எரிவாயு, தேதி, நேரம் ஆகியவைப் பதிவாகி இருக்கும். அதனைக் கண்டறிந்து அப்பகுதியில் மாசு எந்தளவிற்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். மிகக் குறைவாக 1,000 ரூபாய் செலவில் இதை உருவாக்கி யுள்ளேன்.
இந்தச் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி ஒரு சாமானியன் கூட தங்கள் பகுதியில் உள்ள தொழிற் சாலைகளின் மாசு உற்பத்தியைக் கண்டறிய முடியும். இதனைப் பரிசோதிக்க ஹீலியம் பலூன் பறக்க விடுவதற்காக அருகில் உள்ள விமான நிலையத்தில் அனுமதி பெற்று இதனை இயக்கலாம். அதற்கு முதல் கட்டமாக ரூ. 30,000 வரை செலவாகும். மாதா மாதம் இச்சோதனை நடத்தி தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகளைக் கண்டறிய முடியும். இந்தச் செயற்கைக்கோளை வடிவமைக்க எனது பள்ளி ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். இந்தச் செயற்கைக்கோளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சாரை சந்தித்து, அவரிடம் காண்பித்தேன்.
எனது முயற்சியை வெகுவாகப் பாராட்டிய அவர், புதிதாக மினி சேட்டிலைட்டுகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் பல அறிவியல் ரீதியான திட்டங்கள் உள்ளன. அதேபோல், உயர்கல்வியையும் இது சம்பந்தமாகவே படிக்க நினைக்கிறேன். அதனால் எனது உயர்கல்விக்கு அரசு உதவ வேண்டும். எனது கண்டு பிடிப்புகள் அனைத்தையும் நாட்டிற்காக அர்ப்பணிப்பேன். அறிவியல் துறையில் பல உயரங்களைத் தொட வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. அதை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறுவேன்” என்கிறார் உறுதியாக!
No comments:
Post a Comment