இந்திய நாட்டின் சாக்ரடீசாகவும், அரிஸ்டாட்டிலாகவும் மதிக்கப்பட்டு வந்த மாபெரும் தலைவர்.
சமுதாயப் புரட்சிக்காக சகலத்தையும் அர்ப்பணித்த புரட்சித் தலைவர்.
தந்தையென்றும், அய்யா என்றும் தன்னியக்கத் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஆசான்.
பெரியார் அவர்கள் காலமாகி விட்டார்.
இந்திய நாட்டின் எதிர்கால அறிவு வளர்ச்சிக்கு இயற்கை ஏற்படுத்திய குந்தகமே இந்த துயரச் சம்பவம்.
மூடப்பழக்க வழக்கங்களின் மூல பலத்தை முறிப்பதற்காகப் பேசிய முதுபெரும் தலைவரின் வாய் மூடிவிட்டது.
பகுத்தறிவுச் சுடர் வீசிக் கொண்டிருந்த அவரது கண்கள், இமைகளைப் போர்த்திக் கொண்டன.
தள்ளாத வயதிலும் தம் பணியைத் தள்ளாத வகையில் தலையங்கம் எழுதிய தந்தையின் கைகள் ஓய்ந்துவிட்டன.
அவர் கால்கள் படாத இடமில்லை என்று சொல்லுமளவுக்கு நாடு நகரமெங்கும், பட்டிதொட்டி யெங்கும் நடந்து சென்ற நாயகனின் கால்கள் அசையும் சக்தியை இழந்துவிட்டன.
பதவிகளுக்காக பாதை மாறாமல்,
எதிர்ப்புக்குப் பயந்து லட்சியத்தைக் கை கழுவாமல்,
இறுதிவரை வாழ்ந்த லட்சியத் தீபம் – அறிவுச் சுடர் அணைந்துவிட்டது.
பொது வாழ்வுக்கு உதாரணமாக வாழ்ந்த அந்தப் பொதுச்சொத்து, இயற்கையால் பறிக்கப்பட்டு விட்டது.
இருளில் தவித்து இதயம் நோகத் தேம்புகின்ற லட்சோப லட்சம் மக்களோடு,
“அலை ஓசையும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை – ஆற்றாமையை அர்ப்பணித்துக் கொள்கிறது.
– அலை ஓசை (24.12.1973)
No comments:
Post a Comment