சோனியா காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

சோனியா காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

featured image

தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் சோனியா காந்தி!
காவிக் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு காங்கிரசும் – சோனியா வழிகாட்டுதலும் தேவை!

சென்னை, டிச.10 காவிக் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு இன்றைய நிலையில் அகில இந்தியாவில் இருக்கக் கூடிய காங்கிரசும், சோனியா காந்தி போன்ற தலைவர்களும் தேவை என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களின் 77 ஆவது பிறந்த நாளை யொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (9.12.2023) நடைபெற்ற 77 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய திருமதி. சோனியா காந்தி அம்மையாரின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்கின்ற தேசியத் திருவிழா என்று சொல்லக்கூடிய இந்தப் பெருவிழா விற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் நலத்துறையின் தலைவராக, துடிப்புமிகுந்த ஓர் இளைஞராக, எதிர் காலத்தின் நம்பிக்கைக்குரிய ஒரு நட்சத்திரமாக இன் றைக்கு இளைஞர்கள் மத்தியில் திகழ்ந்து கொண் டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மானமிகு எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களே, மற்றவர்கள் எல்லாம் பெயருக்குப் பின்னால் எம்.பி., என்று போடுவார்கள். இவருக்கு என்றைக்குமே பெயருக்கு முன் இருக்கும் எம்.பி. என்பதை நீக்கவே முடியாது. காரணம், அவர் பிறந்த உடனேயே கிடைத்தது அது!

வரவேற்புரையாற்றிய அருமைச்சகோதரர் சிரஞ்சீவி அவர்களே, இங்கே தொடக்கவுரையாற்றி, எங்களைப் போன்றவர்களுடைய கொள்கை உறவுகளை எப்பொழு தும் தொடர்ந்து, புதுப்பித்துக் கொண்டே நெருக்கமாக இருக்கக்கூடியவரும், நம்முடைய காங்கிரஸ் கட்சியைப்பற்றியானாலும் சரி, திராவிட இயக்கங்கள்பற்றி யானாலும் சரி, அல்லது தமிழ்நாட்டினுடைய, இந்தியா வினுடைய வரலாற்றைப்பற்றியானாலும் சரி, தம்முள்ள டக்கி அவற்றுக்கு ஓர் ஆவணம் போல் இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் கோபண்ணா அவர்களே,
இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சென் றிருக்கக்கூடிய எங்கள் அருமைக் கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்க வந்திருக்கின்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறையின் தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ராஜேஷ் லிலோத்தியா அவர்களே, அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அருமைப் பெரியோர் களே, தோழர்களே, நண்பர்களே, இளைஞர்களே, தாய் மார்களே, ஊடகச் செய்தியாளர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஓரிரு நாள்களாக எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் வெளியே செல்லவேண்டாம் என்று சொன்னபோதிலும், எந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றாலும், செல்லாவிட்டாலும், நம்முடைய சோனியா காந்தி அம்மையார் அவர்களுடைய 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, குறிப்பாக இளைஞரணி பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய அருமைத் தோழர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாடு செய் திருக்கின்ற நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லித்தான் நான் இங்கே வந்தேன்.

உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
பல கூட்டங்களில் நான் நீண்ட நேரம் பேசி, தொண்டையில் புண் ஏற்பட்டு இருக்கின்றது என்றாலும், நான் அதிகம் பேசுவதைவிட, இங்கே பார்க்கின்ற காட்சி மகிழ்ச்சியாக இருக்கிறது.
மீண்டும் ஒரு புதிய எழுச்சி, அனைத்திந்திய அளவிலும் ஏற்பட்டு இருக்கிறது.
திருமதி சோனியா காந்தி அவர்கள் ஓர் எடுத்துக் காட்டான தலைவர்! இன்றைக்கு அவருடைய பிறந்த நாள் விழாவில் பங்கேற்பது என்பது, ஏதோ ஒரு சடங் கிற்காகவோ, சம்பிரதாயத்திற்காகவோ நான் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். எதையும் ஆதாரத்தோடு சொல் பவர்கள்தான் திராவிடர் கழகத்துக்காரர்கள் – உங்களுக்கும் தெரியாததல்ல.
இந்தியாவிலேயே, ஏன், உலக அளவிலேயும் சொல் லலாம் – இந்தியாவில் தனித்தன்மையான ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அவர் இன்றைய பிறந்த நாள் விழாவிற்குரிய நாயகியாக இருக்கக்கூடிய சோனியா காந்தி அம்மையார்தான்.
பல தலைவர்கள் இருக்கலாம்; யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுடைய தியாகங் கள், அவர்களுடைய தன்னலமறுப்பு எல்லாம் இருக்க லாம்.
சோனியா காந்தியின் தியாகம் ஒப்பற்றது!

ஆனால், சோனியா காந்தி அவர்களுடைய தியாகம் என்பது ஒப்பற்றது. நேரு அவர்களுடைய குடும்பத்தின் தியாகம் என்பது அளப்பரியது என்பதற்கு மேலானது.
பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் இல்லாவிட்டால், இன்றைய நவீன இந்தியா கிடையாது. பண்டித ஜவகர் லால் நேரு அவர்களின் தலைமை என்பது மிகச் சிறப்பானதாகும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைய பிறந்த நாள் விழாவிற்குரிய சோனியா காந்தி அம்மையார் எப்படிப்பட்டவர் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய கடிதம்!

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதியன்று எனக்கு 91 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்காக அவர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ‘‘டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளான (டிச.2) நன்னாளில் எமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கி றோம். நல்ல உடல்நலத்துடனும், வருங்காலத்தில் நீண்ட நாள்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையில் மதிப் பிற்கும், போற்றுதலுக்கும் உரிய டாக்டர் கி.வீரமணி அவர்கள் ஓர் உந்து சக்தியாகவும், நல்ல சமூக அரசியல் தாக்கங்களை ஏற்படுத்திடுபவராகவும் விளங்கி வருகிறார். அவருடைய தலைமையில் திராவிடர் கழகம், சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கை வழிமுறைகளை தமிழ்நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களி டையே ஆழமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நல்ல வாய்ப்பின்பொழுது திராவிடர் கழகத்தின் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக் கும் எமது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள் கிறோம். அவர்களது போற்றத்தகு முயற்சிகள் வெற்றி பெற விரும்பி வாழ்த்துகிறோம்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ராஜீவ் காந்தி அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படு கிறார். இந்திரா காந்தி அம்மையார் தலைவராக இருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அப்பொழுது சரக்கு நுழைவு (‘அக்ட்டிராய்’) வரியைக் கொண்டு வந்தார்கள். அந்த வரியை வியாபாரிகள் எதிர்த்தார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்த வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்பரசு அவர்கள் அந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ராஜீவ் காந்தி வந்தார்

சென்னை பெரியார் திடலுக்கு அதற்கு அன்றைய பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களை அழைத்தால், அதன்மூலமாக தங்களுக்கு மிகப்பெரிய விடியல் கிடைக்கும் என்று தமிழ்நாட்டு வியாபாரிகள் நினைத்து, அவரை அழைத்து இங்கே மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஆனால், அந்த மாநாட்டினை நடத்துவதற்கு அன் றைய தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி அவர்கள் மாநாட்டில் பங்கேற்ப தற்காக அவரிடம் ஒப்புதலை வாங்கியிருந்தார்கள். அதுதான் அவர்களது முதல் பொது நிகழ்ச்சி பொதுச் செயலாளர் பொறுப்பேற்றவுடன்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்பரசு அவர்கள் என்னிடம் வந்து கேட்டார்.
நான் சொன்னேன், ‘‘உங்கள் மாநாட்டினை நடத்து வதற்கு – அரங்கத்தைத் தருவதற்கு எல்லோரும் பயப் படுகிறார்கள். பெரியார் திடலில் உள்ள எங்கள் அரங்கத்தைத் தாராளமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தேன்.

பெரியார் திடலில்தான் முதன்முதலில் அந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்தோம். அன்றையி லிருந்து அவருக்கு மிக்க மகிழ்ச்சி!

2004 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கம்!

2004 ஆம் ஆண்டில், அய்க்கிய முற்போக்குக் கூட் டணியை (யு.பி.ஏ.) கலைஞர் அவர்களும், மற்றவர்களும், எல்லோரும் இணைந்து உருவாக்கினார்கள்.
அந்தக் கூட்டணி மிகப்பெரிய அளவிற்கு வெற்றியைப் பெற்ற நேரத்தில், எல்லோரும் ஒருமனதாக திருமதி. சோனியா காந்தி அம்மையார்தான் பிரதமராக வரவேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஏனென்றால், அவர்களுடைய குடும்பம் இந்த நாட்டிற்காகத் தியாகம் செய்த குடும்பமாகும்.
திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்பதுதான் தத்துவம்.

பிரதமர் பதவியை உதறிய ஒப்பற்ற தலைவர் சோனியா காந்தி!

சோனியா காந்தி அவர்கள் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தினார்கள். ஆனால், சோனியா காந்தி அவர்கள் என்ன சொன்னார் என்றால், ‘‘நான் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன்; பிரதமராக நான் விரும்பவில்லை. மாறாக, டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக பதவியேற்கட்டும்” என்று சொல்லி, மன்மோகன்சிங் அவர்களைப் பிரதமராக்கினார்.

ஒரு பஞ்சாயத்துப் போர்டு தலைவர் பதவியை, மறுபடியும் தரவில்லை என்றால், புதிதாகக் கட்சியைத் தொடங்கு கின்ற மனநிலை உள்ள மனிதர்கள் நிறைந்த நம்முடைய நாட்டில், பிரதமர் பதவி தேடி வந்த நேரத்தில், அதற்கு அந்த அம்மையார் ஆசைப்பட வில்லை. அவர் தன்னுடைய வாழ்விணையரை இழந் திருக்கிறார். மாமியாரை இழந்திருக்கிறார்; பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்தவர் அவர்.

பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள், அதனால், திராவிடர் கழகத்துக்காரர்கள் பாராட்டு கிறார்கள் என்று நீங்கள் யாரும் நினைக்கவேண்டாம்.
சோனியா காந்திக்கு நான் எழுதிய கடிதமும் – அவர் எழுதிய பதில் கடிதமும்!

திராவிடர் கழகத் தலைவர் என்ற முறையில், அன்றைக்கு 2004 இல் சோனியா காந்தி அம்மையாருக்குப் பாராட்டு தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதினோம்.
‘‘நாங்கள் அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் நிற்காத இயக்கத்தினர் ஆவோம். எங்களுக்குப் பதவியின் பெருமையைப்பற்றி கவலையில்லை. ஆனால், உங் களைப் போன்றவர்கள் வழிகாட்டவேண்டும். இந்தியா விற்கே தலைமை தாங்கக் கூடிய அளவிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் பிரதமர் பதவியை ஏற்க மறுத்திருக் கிறீர்கள்” என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தோம்.

அதற்குப் பதில் கடிதம் எழுதியிருந்தார் சோனியா காந்தி அம்மையார் அவர்கள்.
4.6.2004 நாளிட்ட அந்தக் கடிதத்தில்,

‘‘Dear Shri Veeramani,
I was touched to receive your kind letter.
The election result is a tribute to the strength and vibrancy of our democracy, and to the wisdom and maturity of our electorate, which has so decisively rejected the politics of divisiveness, and reaffirmed its faith in our pluralistic culture and our cherished traditions of tolerance and secularism.
I assume my responsibilities as President of the Congress Party, overwhelmed and humbled by the love and support I have received, deeply conscious of the enormous trust reposed in me, and determined to do my utmost to meet the needs and aspirations of each and every section of Indian society.
I count on everyone of you to be our guide, our critic and our conscience-keeper, so that we always remain responsive to your views and your problems, and we work together to build the India of our dreams.”

என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘அன்பார்ந்த திரு.வீரமணி அவர்களுக்கு,
உங்களது அன்பார்ந்த கடிதம் கிடைக்கப் பெற்று, நான் நெகிழ்கிறேன்.
நம்முடைய மக்களாட்சியின் வலிமைக்கும், துடிப்பிற்கும் புகழாரம் சேர்ப்பது நாட்டில் நடை பெறும் தேர்தல் முடிவுகளே ஆகும். தேர்தல் முறைகளின் அறிவார்ந்த தன்மையையும், முதிர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்ற வகையில், இப்பொழுது நடைபெற்ற தேர்தல், பிரித்தாளும் அரசியலை தீர்மானத்துடன் புறந்தள்ளியும், பன்மைத் தன்மை வாய்ந்த பண்பாடு, போற்று தலுக்குரிய சகிப்புத்தன்மைமிக்க மரபுகளை, மதச்சார்பின்மை ஆகியவற்றை மீண்டும் நிரூ பிக்கும் வகையில் காங்கிரஸ் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்றபொழுது நாட்டு மக்கள் காட்டிய அன்பினையும், ஆதரவையும் கண்டு மகிழ்ச்சி கலந்த பெருமை அடைந்தேன். என்மீது மக்கள் வைத்த பெரும் நம்பிக்கையினை உள்ளார்ந்து உணர்ந்தேன். நாட்டின் ஒவ்வொரு பகுதி மக்களின் தேவையினையும், எதிர்ப்பார்ப்பினை யும் பெரிதும் நிறைவேற்றிட உறுதி கொண்டேன்.
சோனியா காந்தி எழுதிய கடிதம் என்பது ஒரு தலைவருக்கு உரிய பாங்கை வெளிப்படுத்தும்!

உங்கள் ஒவ்வொருவரையும் எனக்கு வழி காட்டுபவராகவும், எனது செயல்களுக்கு அறி வுரை சொல்லக்கூடியவராகவும், எனது மனசாட்சியின் உறுதுணையாக இருப்பதாகவும் கருதுகிறேன். உங்களுடைய எண்ணங்கள் நிறை வேறிட, இன்னல்களைக் களைந்திட எப் பொழுதும் ஆக்க ரீதியாக செயலாற்றும் நிலை யில் எப்பொழுதும் இருப்பேன். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையில் கட்டி எழுப்பிடும் நமது கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்!”
இவ்வாறு அக்கடிதத்தில் திருமதி. சோனியா காந்தி குறிப்பிட்டிருந்தார்.

அக்கடிதத்தின் கடைசி பாராவில் இருக்கின்ற வரிகள் மிகமிக முக்கியமானவை.
ஒரு தலைவருக்கு உரிய தகுதி என்ன?

அகில இந்திய இயக்கத்தை நடத்துகின்ற தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அந்தக் கடிதத்தின் கடைசிபத்தி பாராதான் மிக முக்கியமானது.
இவை வரலாற்றில் இடம்பெறக்கூடிய வைர வரிகள்.

ஓர் இயக்கத்தின் தலைவராக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது; ஆசை என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய தகுதிதான்.
ஆனால், அந்தக் கடிதத்தின் கடைசி பாராவை படிக்கிறேன் பாருங்கள்.

‘‘I count on everyone of you to be our guide, our critic and our conscience-keeper, so that we always remain responsive to your views and your problems, and we work together to build the India of our dreams.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘உங்கள் ஒவ்வொருவரையும் எனக்கு வழிகாட்டுபவராகவும், எனது செயல்களுக்கு அறிவுரை சொல்லக்கூடியவராகவும், எனது மனசாட்சியின் உறுதுணையாக இருப்பதாகவும் கருதுகிறேன். உங்களுடைய எண்ணங்கள் நிறை வேறிட, இன்னல்களைக் களைந்திட ஆக்க ரீதியாக செயலாற்றும் நிலை யில் எப்பொழுதும் இருப்பேன். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையில் கட்டி எழுப்பிடும் நமது கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்!’’
இதுதான் ஒரு தலைவருக்கான தகுதி. ‘‘நீங்கள் என்னை பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை” என்கிறார்.

‘‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”

எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக்காட்டவேண்டும். ஆளுங் கட்சி தவறு செய்தால், அதனைச் சுட்டிக்காட்டவேண்டும். எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்கும் ‘ஆமாம்’ போட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. தவறை சுட்டிக்காட்டவேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டும்.
அதேநேரத்தில், எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும்.
இன்றைக்கும் அந்தப் பொறுப்பில் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இருக்கிறார்.

உட்கட்சிப் பிரச்சினைகள் இருந்தாலும் – காங்கிரஸ் அளவுக்கு இந்தியாவில் வேறு கட்சி கிடையாது!

காங்கிரஸ் கட்சியில் அதிகமாக உட்கட்சி சண்டை, கருத்து மோதல்கள் எல்லாம் இருக்கிறதே என்று சிலர் நினைக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி அளவிற்கு நிகராக இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் கிடையாது.

தேவையான அளவிற்கும், காரணம் சில நேரங்களில் மக்களுக்குத் தேவையான அளவிற்கு அதிகமாகவும் ஜனநாயகம் இருக்கிறது காங்கிரஸ் கட்சியில்!
அப்படிப்பட்ட ஒரு நல்ல ஜனநாயகவாதி – கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடியவர்.
எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டிற்கும், அவருக் கும் இருக்கின்ற உறவு என்பது அளவிடற்கரியது. தந்தை பெரியார் திடலுக்கு வருவதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். ராகுல் காந்தியும் அழகாக நாடாளு மன்றத்தில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்,

‘‘மோடி ஜி அவர்களே, நாட்டில் நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம்; ஆனால், தமிழ்நாட்டின் பக்கம் நூறாண்டு காலமானாலும் போய் காலூன்ற முடியாது” என்று ஆணி அடித்தது போன்று சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அப்படி ஓர் உறுதியைக் காட்டவேண்டும் என்பதற்காக இப்பொழுது ‘இந்தியா’ கூட்டணி உருவாகியிருக்கிறது.
காவிக் கிருமிகள் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்!

இப்பொழுது ‘இந்தியா’ என்று நாம் அழுத்திச் சொல் லுகிறோம். அவர்கள் ‘இந்தியா’ என்று சொல்வதற்கே பயப்படுகிறார்கள்.
எனவேதான், சோனியா காந்தி அம்மையாரின் பிறந்த நாளில், கேக் வெட்டுகிறோம்; அவர்களைப் பாராட்டுகிறோம் என்பதைவிட மிக முக்கியமானது – மக்கள் நலத் திட்ட உதவிகள் செய்வது என்பது இன்றி யமையாததாகும்.

மக்கள் நலத் திட்ட உதவி என்பது மக்களுக்கானது. அதைவிட மக்கள் நலத் திட்டம் என்றால், காவிக் கிருமிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கிருமிகள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது.

‘‘காவிக் கிருமிகள்” உள்ளே வராமல் பார்த்துக் கொள்வதற்கு, சோனியா காந்தி அம்மையாரின் பிறந்த நாளன்று, நம்முடைய சகோதரர் ரஞ்சன்குமார் போன்ற வர்கள், ராஜேஷ் லிலோத்தியா போன்றவர்கள் நல்ல வகையில் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங்களின் மூத்த சகோதரன் என்ற முறையில், அத்துணைப் பேரையும் வாழ்த்தி, வாய்ப்பளித்த உங் களுக்கு நன்றி கூறி, பல்லாண்டு காலம் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் – நூறாண்டு வாழவேண்டும்.
நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு காவி இல்லாத ஓர் ஆட்சி இந்தியாவில் அமையும்.

உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.

No comments:

Post a Comment