“எங்க ஊருக்குள்ள இதுவரைக்கும் யாருமே வந்ததில்லை; நீங்கதான் முதலில் வந்திருக்கீங்க”
எண்ணூர் அத்திப்பட்டு மக்கள் “பெரியார் தொண்டறம் அணி” தோழர்களிடம் நெகிழ்ச்சி!
எண்ணூர், டிச.10 அத்திப்பட்டு, அத்திப் பட்டு பள்ளம் பகுதிகளில் பெரியார் தொண்டறம் அணி சார்பில் நேற்று (9.12.2023) நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த 50 ஆண்டு காலம் காணாத பெருமழை பொழிந்த காரணத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச் சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், முதல மைச்சரே முன்னுதாரணமாக களத்தில் நின்று வழிகாட்டியதால் சென்னைப் பெருநகரம் விரை வில் மீண்டு விட்டது. புறநகர்களிலும் அரசு மற்றும் தன்னார்வலர்களின் தளராத ஒத்து ழைப்போடு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. ஆனாலும் இந்த மீட்புப் பணிகளின் கரங்கள் எட்டாத இடங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் எண்ணூர் மாவு பாஷா என்னும் தோழர், பெரியார் தொண்டறம் அணிக்கு, “எண்ணூர் அத்திப்பட்டு கிராமம் புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரையிலும் அந்த மக்களுக்கு எந்த நிவாரண மும் கிடைக்கவில்லை. நீங்கள் வர முடியுமா?” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், பெரியார் தொண்டறம் அணி அங்கு சென்றிருந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் எண்ணூரை அடுத்துள்ள அத்திப்பட்டில், மஸ்ஜிதே மதினா அஹ்லே சுன்னத் ஜமாத் மசூதி க்கு முன்பு 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு சூடான உணவு, தண்ணீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. கைக்குழந்தை உள்ளவர் களுக்கு கூடுதலாக பால் பாக்கெட் வழங்கப் பட்டது. நேற்றுதான் அந்த கிராமத்திற்கு மின் சாரம் வழங்கப்பட்டிருந்தது. அதுவரையிலும் எண்ணூர் ரயில் நிலையத்திலும், சத்திரத்திலும், தெரிந்தவர்களின் வீடுகளிலும் தங்கியிருந்த மக்கள் ஒவ்வொருவராக திரும்பிக் கொண்டிருந் தனர். அவர்களில் சிலர், “ஊருக்குள்ள மக்கள் நிறைய இருக்காங்க. இதுவரைக்கும் அங்க யாருமே போனதில்லை. நீங்க வருவீங்களா?” என்று விரக்தியுடன் கேட்டனர். மறுமொழி பேசாமல் உடனே தோழர்கள், ”வண்டியை ஊருக்குள்ள திருப்புங்க” என்று தயாராகி விட்டனர். ஆனால், பிள்ளையார் கோயில் சாலை என்றழைக்கப்பட்ட அந்த கிராமத்தை முதன்மைச்சாலையுடன் இணைக்கும் சாலையும் தண்ணீரில் மூழ்கியிருந்தது. நான்கு சக்கர வண்டியின் ஓட்டுநர், தண்ணீரில் இறங்கி நடந்து பார்த்துவிட்டு, ஓரிடத்தில் இருந்த பள்ளத்தை உறுதி செய்த பிறகு, ”வண்டி உள்ளே வராதுங்க” என்று அறுதியிட்டுக் கூறிவிட்டார். சளைக்க வில்லை பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள், கைவசம் இருந்த ஒரு இருசக்கர வாகனத்துடன் அங்கேயே இருந்த உள்ளூர் காரர்கள் சிலரின் உதவியில் இன்னும் சில இருசக்கர வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு உணவுப் பொருட்களுடன் ஊருக்குள் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், போதாமை காரணமாக உணவுப் பொருட்களை தோளில் சுமந்தவாறும் தண்ணீரில் இறங்கி விட்டனர். மற்றவர்களையும் போல இவர்களும் ஊருக்குள் வராமல் போய்விடுவார்களோ என்று அஞ்சிய அம்மக்களுக்கு தோழர்களின் முன்னெ டுப்புகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்துவிட, உற்சாகத்துடன் வழி காட்டிச் சென்றனர்.
அத்திப்பட்டு என்பது சாலையோரம் உள்ள பகுதி. உள்ளே இருப்பது அத்திப்பட்டு பள்ளம். பெயர்க்காரணம் பொருத்தமாகத்தான் இருந்தது. முதன்மைச் சாலை, கிளைச்சாலைகள், குறுக்குச் சாலைகள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் நீக்கமற தேங்கியிருந்தது. சாலையின் இருபுறமும் அடர்ந்த முட்செடிப் புதர்கள், வீட்டு வாசலைத் தாண்டினால் தண்ணீரில்தான் காலை வைக்க வேண்டும். புழல், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்து விட்டால் முதலில் இந்த ஊருக்குத்தான் வரும். இன்னமும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருந்தது. முற்றிலும் வடிந்த பின்னும் தேங்கி யிருக்கும் தண்ணீரை மோட்டார் கொண்டுதான் வெளியேற்ற வேண்டும். அல்லது தானாக வற்ற வேண்டும். இப்படிப்பட்ட சூழல்தான் அங்கு நிலவுகிறது. அப்படிப்பட்ட பகுதியில் பிள்ளையார் கோயில் தெரு, பகவத்சிங் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக தேடிச்சென்று, 250 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. வீடு தேடி வந்த நிவாரணப் பொருட்களை வியப்புடன் பெற்றுக் கொண்டனர். அதிலொரு பெண், “நீங்கதான் ஊருக்குள்ள முதன் முதலில் வந்திருக்கீங்க. உங்களுக்கு புண்ணியமாக போகும். அந்தக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ந்து போனார். அனுசுயா அக்கா, வள்ளியக்கா என்ற அங்கிருக்கும் மக்களை பெயர் சொல்லி அழைத்து அவர்களுடன் உரை யாடி மக்களோடு மக்களாக ஒன்று கலந்துவிட்ட தோழர் தளபதி பாண்டியன், “அந்தக்கடவுள் இந்தத் தண்ணீரை வராமலேயே தடுத்திருக் கலாமே அக்கா” என்றதும், அந்தப்பெண், “அது வும் சரிதான்” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டார். அதன்பிறகு தோழர்களிடம் விசா ரித்து, தொண்டு செய்கிற அனைவரும் பெரியார் தொண்டர்கள் என்று தெரிந்து கொண்டார்.
பெரியார் தொண்டறம் அணியை வழி நடத்திக் கொண்டிருக்கும் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பில், வழக்குரைஞர்கள் தமிழன் பிரசன்னா, தளபதி பாண்டியன், துரை அருண், பிரின்சு முகநூலைப் பார்த்து தன்னார்வலராக வந்து கலந்து கொண்ட சட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர் கென்னத் அருள், பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி, புரசை சு.அன்புச்செல்வன், உடுமலை வடிவேல், முரளி கிருஷ்ணன், சின்னத்துரை, செ.பெ. தொண்டறம், எழுத்தாளர் அதிசா, இராமச்சந்திரன், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். பிற்பகல் 2:30 மணிக்கு பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட தோழர்கள், இரவு 8 மணிக்குத்தான் திரும்பினர். தளபதி பாண்டியனின் கைபேசி உரையாடலிலேயே ஒருங்கிணைப் பட்டு, பூவை தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் அமைந்த கரையில் 1000 பேருக்கு உணவு தயாராகி, டப்பாக்களில் அடைக்கப்பட்டு அடுத்த களப் பணிக்காக காத்துக்கொண்டிருந்தது. பெரியார் தொண்டறம் அணித் தோழர்களும் அடுத்த பணிக்கு அணியமாயினர்.
No comments:
Post a Comment