“ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே!” என்று சொல்லுவதுபோல், பிஜேபி – சங்பரிவார்களைப் பொறுத்தவரை தார்மீகம் பற்றி நீட்டி அளப்பார்கள், பக்தியைப் பழமாய்ப் பிழிந்து எடுப்பார்கள்.
ஆனால், நடைமுறையில் ஒழுக்கத்திற்கும், தார்மீகத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பற்றவர்கள் என்பதை நாளும் அறிய முடிகிறது. அதுவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின் அட்டகாசங்களுக்கு அளவே கிடையாது.
அதுவும் ராமன் பிறந்ததாகப் பீற்றிக் கொள்ளும் அயோத்தியை உள்ளடக்கிய உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் முறைகேடுகளும், பாலியல் வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
உத்தரப்பிரதேசம் சோல்பேத்ர மாவட்டத்தின் துதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்துலார் சிங் கோண்ட். இவர் 2014 ஆம் ஆண்டு பள்ளி சென்று கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு டம்ளர் மோரும், 10 ரூபாயும் கொடுத்து விரட்டியுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் கூறிட அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு முதலில் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தார் வந்தால் மட்டுமே புகாரைப்பதிவு செய்வோம் என்று கூறி விரட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அழைத்து குற்றவாளியும், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினருமான ராம்துலார் மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் புகார் செய்யாமல் இருந்துவிட்டனர். மேலும் காவல்நிலையம் செல்லாமலும் இருந்துவிட்டனர். இந்த நிலையில் சிறுமியின் சகோதரன் தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாராகக் கொடுத்தார். அந்தப் புகாரைப் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்க மியோர்பூர் காவல்நிலையத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனை அடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, முதலில் சாதாரண பாலியல் சீண்டல் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிமீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது தனது அரசியல் வாழ்க்கைக்குக் களங்கம் விளைவிக்க தன்மீது போலியான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும், அந்தச் சிறுமியின் நடத்தை குறித்து தன்னிடம் சிலர் புகார் அளித்தனரெனவும், அது குறித்து விசாரிக்கவே தான் அந்தச் சிறுமியை அழைத்ததாகவும் நியாயவாதிபோல் பேசினார்.
சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையிலும் மருத்துவப் பரிசோதனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பாஜக சட்டமன்ற உறுப்பினர் தான் என்பது உறுதியானது – இதனை அடுத்து வழக்கு விசாரணை 7 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தது, இந்த நிலையில் இவர் குற்றவாளி என்று தெரிந்தும் 2022 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் துதி தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரான பிறகு சாட்சிகளைக் கலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். சிறுமியைக் காப்பாற்றி அழைத்துச்சென்று முதலில் புகார் கொடுத்த இளைஞரான விகாஸ் சாக்யாமீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அந்த இளைஞர் மிரட்டப்பட்டார். இருப்பினும் வழக்கை விசாரணை செய்த நீதிபதி தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி, சாட்சிகளை மிரட்டியுள்ளார் என்பதையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு அவரைக் குற்றவாளி என்று உறுதி செய்தார். ராம் துலார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் 2017 ஆம் ஆண்டு “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” (பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் – படிக்க வையுங்கள்) என்ற திட்டத்தின் பரப்புரையாளராக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘இராமலிங்க விலாஸ் மிலிட்டரி’ ஓட்டல் என்பது போல!
இதே போன்று உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் என்பவரும் உதவி கேட்டு வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததனால் சிறையில் அடைக்கப்பட்டவர். அவரும் சாட்சிகளைக் கலைக்க சிறுமியின் உறவினர்களையும் வழக்குரைஞரையும் பல்வேறு இடங்களில் வைத்து கொலை செய்தார். சிறுமியின் தந்தையையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்தனர். அந்தக் கொடூரங்களை நிகழ்த்திய போதும் தற்போது உன்னாவ் தொகுதியில் குல்தீப் சிங் செங்காரின் மனைவி பாஜகவின் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமானால் இத்தகைய ‘தகுதி’கள் முக்கியமாகத் தேவைப்படும் போலும்!
Thursday, December 14, 2023
பிஜேபியில் சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி எந்த அடிப்படையில்?
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment