கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. உள்ளிட்ட பல முக்கிய ஹிந்து அமைப்புகள் உத்தராகண்ட் முழுவதும் கொடூரமான பிரச்சாரத்தை மேற் கொண்டன.
அதாவது 2023 ஆம் ஆண்டு நவராத் திரிக்குள் (அக்டோபருக்குள்) உத்தராகண்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டினர். பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது; அந்தப் பேரணியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் காரையே இஸ்லாமி யரின் கார் என்று தவறுதலாக அடித்து நொறுக்கிய நிகழ்வும் நடந்தது.
காரணம், உத்தராகண்ட் தேவ்பூமி, இங்கு இறைச்சி சாப்பிடுபவர்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கடவுளின் கோபத்திற்கு நாங்கள் ஆளாகி விடுவோம்; மேலும் இங்கு ஹிந்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றும் - இஸ்லாமியர் கடைகளை மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் - என்றும் மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில், உத்தராகண்ட் சுரங்கவிபத்தில் 17நாட்கள் ஆபத்தான சூழலில் சிக்கித் தவித்த 41 பேரை மீட்ட குழுவில் இருந்தவர்களில் முன்னா குரோஷி, பெரோஷ் குரோஷி, நஷீர்கான், வகீல் ஹசன், இர்ஷாத் அன்சாரி, ரஷீத் அன்சாரி, நஷீம் மாலிக் என்று 7 இஸ்லாமியர்களோடு இரண்டு ஹிந்துக்கள் இருந்த குழுவினர் தான் சுரங்கத்தைத் தோண்டி - சிக்கி இருந்தவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றி - வெளியே கொண்டு வந்ததில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு.
காப்பாற்றப்பட்டவர்கள் ஹிந்துக்கள்; உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியவர்களுள் பெரும் பாலோர் இஸ்லாமியர்கள்.
இந்த இடத்தில் குடி கொண்டது மனித நேயமா? மதவெறியா?
உத்தராகண்ட் கடவுள் உறையும் இடமாம்! கடவுள்தான் இங்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் உத்தராகண்ட்தான் கடவுள் வாசம் செய்யும் இடம் என்பதும், அங்கு இறைச்சி உண்ணக் கூடாது என்பதும் எத்தகைய முரட்டுத்தனமான பித்தலாட்டம்!
அப்படிப் பார்க்கப் போனால் மனிதன்கூட ஒரு மாமிசப் பிராணிதான். அவன் உடல் என்பது என்ன? அவன் இறந்தால் உத்தராகண்டில் எரியூட்டக் கூடாதா?
உத்தராகண்டில் ஏராளமான கோயில்கள் உள்ளன; ஏராளமான மக்கள் அந்தக் கோயில் களுக்கு யாத்திரை செல்கிறார்கள் - காவல் தெய்வம் என்று கூறப்படும். தாரிதேவி கோயிலும் அங்குதான் இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் பயன் என்ன? 2013இல் அங்கு பெய்த கடும்மழை வெள்ளத்தால் 6,000 பக்தர்கள் பரிதாபமாக மரணம் அடைந்தனரே!
13,000 பேரைக் காணவில்லையாம். சர்வசக்தி கடவுள்களின் (?) கோயில்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த யோக்கியதையில்தான் சங்கிகள் உத்தராகண்ட் என்றால் தேவ்பூமி - அதாவது கடவுளின் பூமியாம் - புடலங்காயாம்! அங்கு இறைச்சி உண்ணக் கூடாதாம்!
இறைச்சி உண்ணும் இஸ்லாமியர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமாம்!
இந்த மதவெறியை இதற்குமேல் இந்தப் பூமி தாங்காது. 2024 மக்களவைத் தேர்தலில் இந்த மதவெறிக் கும்பலுக்குப் பாடம் கற்பிப்பீர்!
No comments:
Post a Comment