ஒன்றிய அரசின் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களுக்கு அளிப்பதாக தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காகத் தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து திமுக உண்மைச் சோதனைக் குழு விளக்கியுள்ளது.
அதில், “மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு ரூ.1011.29 கோடி அறிவித்தது ஒன்றிய அரசு. பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து 450 கோடி ரூபாயும், நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் 561.29 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல்” என ஒரு ஊடகம் ஷேர் கார்டு வெளியிட்டுள்ளது. அதை பாஜகவினர் பலர் சமூக வலைதளங்களில் பொய் சேதியாகப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1011.29 கோடி அறிவிப்பு என்ற தகவல் முற்றிலும் தவறானது. இது போலி செய்தி. உண்மை என்னவென்றால், விஷன் 2047-இன் கீழ், பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் வகையில் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அய்தராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக 13.06.2023 அன்று டில்லியில் மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை அடுத்து சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.561.29 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்வதாக 09.08.2023 அன்று ஊடகங்களில் உண்மைக்கு மாறாக செய்தி வெளியாகின.
சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் என்பது, நகரத்தில் உள்ள பழைய சிறு நீர்நிலைகளுக்கு உபரி கால்வாய்களைச் சீரமைத்தல், 484 ஏக்கர் பரப்பளவில் உள்ள எட்டு நீர்நிலைகளை மீட்டெடுத்தல், வெள்ளப்பெருக்கின் போது ரெகுலேட்டர்களை தொலைதூரத்தில் இயக்குவதற்கான மென்பொருளை நிறுவுதல் ஆகியவை ஆகும். இந்தத் திட்டம் கடந்த மூன்று மாதங்களாக அறிவிப்போடு மட்டுமே உள்ளது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதி என்பது, புயல் வெள்ளத்தால் அல்லது வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய பணிகளை மேற்கொள்வதும், இழப்பை ஈடுகட்ட நிதி உதவி வழங்குவதும் ஆகும்.
நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு – இரண்டும் ஒன்றல்ல. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜாம் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் இனிவரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்திற்கான நிதியாகும். இந்த உண்மையை அறியாமலோ அல்லது அறிந்தும் மறைத்தோ சில ஊடகங்கள் ‘மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1011.29 கோடி அறிவிப்பு’ என செய்தி வெளியிட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் நிவாரணமாக 5060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணமாகத் தேவை என ஒன்றிய மோடி அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், ‘யானைப் பசிக்கு சோளப்பொரி’ என்பது போல வெறும் ரூ.450 கோடியை ஒதுக்கி தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு எப்போதும் போல வஞ்சித்துள்ளது.
ஒன்றியத்தில் மோடி ஆட்சிக்கு வந்ததும் பேரிடர் காலங்களில் தமிழ்நாடு கேட்கும் தொகைக்கும் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமே இருந்து வந்துள்ளது.
2015 சென்னை மழை வெள்ளத்தின்போது 25,912 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்ட நிலையில் 1738 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.
2016-2017ஆம் ஆண்டு வறட்சியின்போது 39,565 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்ட நிலையில் 1748 கோடி ரூபாயை மட்டுமே மோடி அரசு ஒதுக்கியது.
வர்தா புயலின்போது 22,573 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒதுக்கியதோ வெறும் 266 கோடி ரூபாய்தான். கேட்ட தொகையில் 1.17 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்டது.
2017-2018 ஒக்கி புயலின்போது 9,302 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒதுக்கியது 133 கோடி ரூபாய்தான்.
கஜா புயலின்போது 17,899 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு கொடுத்தது 1,146 கோடி ரூபாய் மட்டுமே
நிவர் புயல் பாதிப்பின்போது 3,758 கோடி ரூபய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய பாஜக அரசு 63.14 கோடி ரூபாய்தான் கொடுத்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி குஜராத்தை தாக்டே புயல் தாக்கியது. மே 19ஆம் தேதி தானே நேரிடையாக சென்று பாதிப்புகளை ஆராய்ந்த பிரதமர் மோடி உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயும் பின்னர் குஜராத் அரசு கேட்ட முழு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிட்டார்!
எதில்தான் அரசியல் செய்வது என்பதில் நாகரிகமே இல்லையா?
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் – 555)
No comments:
Post a Comment