"மாண்புமிகு" என்று மட்டும் இருந்த அரசியல் உலகத்தில் "மானமிகு" என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய தலைவர் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ - ஏடுகள், தொலைக்காட்சிகள் இருந்தாலும் "ஆசிரியர்" என்று சொன்னால் அது மானமிகு கி.வீரமணி அவர்களை மட்டுமே குறிப்பதை ஆச்சரியமாகப் பலரும் கருதக்கூடும்.
உண்மையை உணர்ந்தால் அந்த ஆச்சரியமும், அய்யப்பாடும் அக்கணமே பறந்து ஓடிவிடும்.
மக்களுக்கு அன்றாடம் அறிவுப் பாடம் நடத்தி வரும் 89 ஆண்டு காலமாக ஏறு நடைபோட்டு வரும் 'விடுதலை' நாள் ஏட்டின் ஆசிரியராக - 61 ஆண்டுகளாகப் பரிணமிக்கும் உலக சாதனையாளர் - இவர் அல்லால், வேறு யார்?
அதனால்தான் ஆசிரியர் என்றால் இவரையே குறிக்கிறது.
வேறு யாருக்கும் தந்தை பெரியாரிடமிருந்து கிடைக்கப் பெறாத பெரு நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை நமது தலைவர் ஆசிரியர் ஆயிற்றே!
"'விடுதலை'யை வீரமணியின் முழுப் பொறுப்பில் ஏக போகமாக விட்டு விடுகிறேன்" என்று தந்தை பெரியார் சூட்டிய கிரீடம் இவருக்கல்லால் வேறு யாருக்கு?
'விடுதலை' ஆசிரியராக அறிவித்தது மட்டுமல்ல; அந்த 'விடுதலை' ஆசிரியரின் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்து அந்த ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்த வரலாற்றுக் கரம் தந்தை பெரியாருடையது அல்லவா!
அய்யா வைத்த நம்பிக்கை வீண் போயிற்றா? வெற்றிப் புன்னகையை வீசியதா? எண்ணிப் பாருங்கள் தோழர்களே!
நான்கு பக்கமாக இருந்த 'விடுதலை' இன்றைக்கு எட்டுப் பக்கத்தில் பல வண்ணங்களில் நவீன யுக்தியில் பளிச்சிடுகிறதே! சென்னையில் மட்டும் வெளிவந்த அந்த சமூகப் புரட்சிப் போர்வாள் திருச்சியிலும் இரண்டாம் பதிப்பாக வெளி வருவது - சாதாரணமா?
'விடுதலை' என்பது வெறும் காகிதம் அல்ல - மக்கள் உரிமைக் குரலின் போர் ஆயுதமே! அதனுடைய வளர்ச்சி என்பதும் - அதற்குக் காரணமாக இருந்தவர் இவர் என்பதும் சாதனைப் பேரேட்டில் என்றும் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும்.
50 ஆண்டு விடுதலை ஆசிரியர் என்ற கால கட்டத்தில் 50 ஆயிரம் சந்தாக்களையும் 60 ஆண்டு ஆசிரியர் என்ற கால கட்டத்தில் 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களையும் கழகத் தோழர்கள் தேனீக்களாய்ப் பறந்து பறந்து திரட்டியதும், 'விடுதலை'யால் விளைச்சல் பெற்ற பல்வேறு துறைகள், நிலைகளிலிருந்த பெருமக்கள் சந்தாக்களை அன்று பூத்த மலர்போல் முகம் மலர்ந்து அளித்ததும் சாதாரணமானவை தானா?
ஒரு ஊராட்சி உறுப்பினரைக்கூட பெற்றிராத (எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத இயக்கமாயிற்றே!) இந்த இயக்கம் அதன் போர்வாளான ஏடுகள், வெளியீடுகள் பிரச்சாரங்கள், போராட்டங்கள் மட்டும் வெளிச்சத்தைக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாடு நாடாகவா இருந்திருக்கும் - காடாகத்தானே இருள் மண்டியிருக்கும்?
எத்தனை எத்தனை நூல்கள் வெளியீடு - ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாடு தழுவிய தொடர் பயணம் - என்பது எல்லாம் வீண் போகவில்லை. இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித் தன்மையுடன் தலை தூக்கி நிற்கிறது தமிழ்நாடு என்றால் என்ன காரணம்? இந்தக் கருஞ்சட்டை இராணுவப் பட்டாளத்தின் பருவம் பாராப் பெரும் பணிதானே.
சங்பரிவாரங்கள் தங்களின் 'சக்கராயுதங்களை' ஏவிய போதும் ரத கஜ துர பதாதிகளை அணி வகுத்து நிறுத்தியபோதும், அந்தப் பருப்பு பெரியார் மண்ணில் வேகாது என்பதை வார்த்தையாலல்ல - நடைமுறையில் நிலை நிறுத்தி இருக்கிறோமே!
இதற்கு அடிப்படை தந்தை பெரியாருக்குப் பிறகும், அன்னை மணியம்மையாருக்குப் பிறகும் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மானமிகு ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமை ஏற்பும்தானே!
தந்தை பெரியார் மறைந்த நிலையில், திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அன்னை மணியம்மையார் தலைமையில் நாம் ஏற்றுக் கொண்ட அந்த உறுதிமொழியை ஒரு கணம் நினைவூட்டிப் பார்ப்போம்.
"தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில், எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!" என்று உறுதிமொழி எடுத்ததோடு, அதில் எள் மூக்கு முனை அளவுக்கும் பிறழாமல் நடைபோட்டு வருவதால்தான் கழகம் தலை நிமிர்ந்து தடுப்பரணாகவும் தமிழர்களுக்கு வலுவோடு ஓங்கி நிற்கிறது.
இன்றைக்குத் தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணை பாதுகாப்போடு ஒளிர் விடுவதற்கும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒன்றிய அரசு துறைகளில் இடஒதுக்கீடு கிடைத்திருப்பதற்கும் ஆணி வேராக இருந்த தலைவர் அல்லவா நமது தகைசால் தமிழர் தலைவர்.
தந்தை பெரியார் காலத்திலும் அன்னை மணியம்மையார் கால கட்டத்திலும் நமது அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்றைக்கு விண்ணைத் தொட்டுள் ளனவே! பல்கலைக் கழகம் அளவுக்கு வளர்ந்துள்ளனவே, அதற்கு யார் காரணம்?
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒப்பற்ற முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள், கல்வி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து, அங்குப் பளிச்சிட்ட கல்வி நிலையங்களால் கவரப்பட்டு, தந்தை பெரியாருக்குப் பிறகு இளவல் வீரமணி கரங்களில் பெரியார் அறக்கட்டளையும், கழகமும் ஒப்படைக்கப்பட்டதன் அருமையை மனம் குளிர்ந்து மனம் திறந்து பாராட்டிய காட்சி கண் முன்னால் நிற்கிறது.
சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் 'வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்!" என்றாரே - ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம் - நம் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றனவே!
கழக அமைப்பிலும் எத்தனை எத்தனை அணிகள் - கழகப் பொறுப்பாளர்கள் திறன்பட செயல்பட எத்தனை எத்தனை மாவட்டங்கள் உருவாக்கம் - அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய மதவாத அதிகாரம் தலை தூக்கி நிற்கும் கால கட்டத்தில் தமிழர் தலைவரின் பங்களிப்பு முக்கியமானது. மதவாத அரசியல் நோய்க்குச் சரியான அறுவைச் சிகிச்சை தந்தை பெரியார் தத்துவம் என்பது வட இந்தியாவிலும் பரவ ஆரம்பித்து விட்டது. அது மேலும் பரவ வேண்டிய அவசியமான கால கட்டம் - அதற்கு நமது தலைவர் ஆசிரியர் பணியும் பங்களிப்பும் தேவை.
நமது தலைவர் ஆசிரியர் நூறாண்டு மட்டுமல்ல - அதற்கு மேலும் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்துவது அவருக்காகவோ அவர்தம் குடும்பத்திற்காகவோ அல்ல - நாட்டுக்குத் தேவை - தேவையே!
வாழ்க தகைசால் தமிழர்!
No comments:
Post a Comment