இதுதான் தி.க. - டாக்டர் ஷாலினி, மனநல மருத்துவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

இதுதான் தி.க. - டாக்டர் ஷாலினி, மனநல மருத்துவர்

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா துவக்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பை பெற்றேன். 

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் திரு. ஆ.ராசா, திரு. தொல் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் திரு. வீரமணி அவர்கள், கவிஞர் கலிபூங்குன்றன் உள்பட பலரும் பேசினர். 

இதனை முன்னிட்டு அன்று காலை சென்னை விமானநிலையத்தில் திரு. வீரமணியை சந்தித்தேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து பார்க்கிறோம். அவர் கேட்ட முதல் கேள்வி, “வீட்டில் எல்லாரும் நலமா?” என்பதெல்லாம் இல்லை -“என்ன புத்தகம் எழுதினீர்கள்?” என்று தான்!!

“கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாகின்ஸ்” புத்தகத்தை கொடுத்தேன். விமானம் மதுரையை அடைவதற்குள் பாதிக்கு மேல் படித்துவிட்டார். நிறைய பாராட்டினார்.

அவருடைய பெரிய வாகனத்திலேயே விருதுநகர் போனோம். 

விருதுநகரில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பட்ட தடைகள் பற்றி உடனிருந்தவர்கள் அவரிடம் சொன்னார்கள். டீ அருந்திக்கொண்டே அது பற்றி பேசி முடிப்பதற்குள் விருதுநகர் வந்துவிட்டது. அவர் தங்கியிருந்த விடுதியில் தொண்டர்களை பார்ப்பதில் பிஸியாகிப் போனார். 

நான் டாக்டர் கவுதமன், திரு. தமிழ்செல்வன், திரு. திருப்பதி என்று சில அறிமுகங்களை பெற்றேன்.

பிறகு எனக்காக பதிவு செய்யப்பட்ட ஓட்டலுக்கு போய் “மீல்ஸுக்கு” நியாயம் செய்துவிட்டு ரொம்ப நாள் கழித்து ஒரு மத்தியான தூக்கம்!!

மாலை நிகழ்ச்சிக்கு வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடம்.... போலீஸ் பொதுக் கூட்டம் போட வழக்கமான நல்ல இடங்களை தரவில்லையாம். ஏதோ ஒரு புறநகர்ப் பகுதி, அங்கே ஒரே பூச்சித் தொல்லை. விதம் விதமான பூச்சிகள் வந்து மொய்த்தன. இந்த மாதிரி புறப்பகுதிகளில் பூச்சிக்கடி ஏற்பட்டால் “ஸ்கரப் டைபஸ்” மாதிரியான நோய்கள் தாக்க வாய்ப்புண்டு. அது ஒரு public health hazard என்பதை யாராவது விருதுநகர் காவல்துறையின் காதில் போட்டு வைத்தால் தேவலை!!

நான் தான் அந்த மேடையின் ஒரே odd person out. ஒரே பெண் என்பதனால் மட்டுமல்ல. நான் மட்டும் தான் அவர்களின் எந்த கழகத்திலும் சேராத வெளியாள். பிரைவேட் பகுத்தறிவாளர்.

பொதுக் கூட்டம் துவங்கியது. எல்லா நாற்காலிகளும் நிரம்பின. நிறைய பேர் தூரத்தில் நின்றுக்கொண்டே கேட்டார்கள். நாங்கள் எல்லோரும் பாசிசப் போக்கை கண்டித்து பேசி முடித்தோம்.

இரவு இரயிலில் சென்னைக்கு திரும்ப திட்டம். இரயில் நிலையத்தின் பார்க்கிங் லாட்டிலேயே எல்லோருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. எனக்கு ஸ்பெஷல் விருதுநகர் எண்ணெய் பரோட்டா!! பெரியார் காலத்து பிக்னிக் சாப்பாடுகள் பற்றி எல்லோரும் ஒரே மலரும் நினைவுகள்! பெரியார் இறந்து 46 ஆண்டுகள் ஆகிய பிறகும் இவர்கள் எல்லோரும் அவர்மீது இவ்வளவு வாஞ்சையாக இருப்பது ஆச்சரியமான விடயம்! எந்த அளவிற்கு அவர் ஜெனியுன்னாய் இருந்திருந்தால் அவர் போய் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவர்கள் இவ்வளவு உருகுவார்கள்?!

நிறைய இளைஞர்கள் தன்னார்வமாய் உதவிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு வாலிபன் வந்து கைக்குலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டார், அவர் அய்.எஸ்.ஆர்.ஓ.வில் விஞ்ஞானியாம். அவருடைய அப்பா, தினக்கூலியாக இருந்து தன்னை படிக்க வைத்ததை கூறி அறிமுகக்கப்படுத்தினார். நான் அந்த அப்பாவின் கையை பிடித்து குலுக்கினேன்.

ரயில் வரும் வரை வீரமணி சார் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். 

திராவிடர் கழகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு தி.க. என்ன செய்தது?

பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் எங்கு கிடைக்கும்?

பெரியார் எவ்வளவு மென்மையானவர், 

மணியம்மையார் எவ்வளவு வைராக்கியமானவர்....

என்று பல விடயம் பேசினோம்.

ரயில் வந்தது. என் கம்பார்ட் மெண்ட்டிற்கு போனேன். திரு. கலி.பூங்குன்றன், வழக்குரைஞர் வீரசேகரன் மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்று மூன்று சகபயணிகள். என் பர்த்துக்கு போய் தூங்கினேன்.

காலையில் coffeeயோடு நிறைய அரட்டை. நான் திரு. கலி.பூங்குன்றனிடம் சொன்னேன், “கடந்த 24 மணி நேரம் உங்கள் எல்லோருடனும் பயணித்திருக்கிறேன். நான் மட்டும் தான் இங்கு ஒரே பெண். ஆனால் இவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறேன்”

அவருக்கு அது பெரிய பொருட்டாகப்படவில்லை. இதெல்லாம் ஒரு மேட்டரா? நாங்க எப்பவுமே இப்படித்தானே! என்பது போல அவர் அசால்ட்டாய் அதைக் கடந்தார்.

எக்மோர் வந்து சேர்ந்தோம். எங்கள் பெட்டியை விட்டு இறங்கி திரு. வீரமணியின் பெட்டி வாசலுக்கு போனோம். அவர் என்னிடம் ஒரு துணிப் பையை தந்தார். 

அதில் புத்தகமும், நான் ஆசைப்பட்ட டீ ஷர்ட்டுகளும்!!

நேற்று இரவு பத்தரை மணிக்கு விருதுநகரில் பேசியது, காலை எட்டரை மணிக்கு சென்னைக்கு வந்து இறங்கியதும் ஜி பூம்பாவாய்!

என் திகைப்பை பார்த்து திரு வீரமணி சிரித்தார், “இது தான் தி.க.” என்றார்!!

வாவ்!

No comments:

Post a Comment