வி.சி.வில்வம்
தமிழர் தலைவர், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில், சிறப்புக் காணொலி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிகழ்வில் (2.12.2023) பங்கேற்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், "தான் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கான காரணங்களை" இயக்கத் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சமூகத்திற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல்!
பொதுவாக வயதில் மூன்று வகை உண்டு. பிறந்த நாளை வைத்துக் கணக்கிடுவது ஒருவகை (Historical Age). இரண்டாவது உறுப்புகளின் வயது (Physiological Age). மூன்றாவது மனம், சிந்தனை தொடர்பானது (Psychology Age). ஒரு மனிதருக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவது இயற்கை! அப்படியான நிலையிலும் சிலர் மாத்திரை, மருந்துகள் சாப்பிட மாட்டேன் என்பார்கள். அது பெருமை அல்ல; ஆபத்து! நவீன மருத்துவ இயல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியம்.
அதேபோன்று சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் அதற்கு துணை நிற்கின்றன! என்னைப் பார்த்து, "எப்போதும் நீங்கள் உற்சாகமாக இருக்க காரணம் என்ன?" என அடிக்கடி கேட்கிறார்கள். நான் நிறைய செயல்கள் செய்துள்ளதாக சொல்கிறார்கள்
நான் மட்டுமல்ல, இராணுவ கட்டுப்பாடான தோழர்கள் இருப்பதால் அது சாத்தியமாகிறது. எதையும் எதிர்பார்க்காத, ஜாதி, மத, பாலின வேறுபாடு இன்றி செயல்படும் அற்புதமான தோழர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். "துறவிகளை விட மேலானவர்கள் என் தொண்டர்கள்", என்றார் தந்தை பெரியார்!
பெரியார் மீது கிரிமினல் வழக்கு!
இந்தப் பிறந்த நாளில் ஒரே ஒரு செய்தியை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். பெரியாரின் தந்தை "வெங்கடப்ப நாயக்கர் மண்டி" என்றொரு கடை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கடை பெரியாரின் நிர்வாகத்திற்கு வந்தது. இந்நிலையில் அந்தக் கடையின் பெயரை "இராமசாமி நாயக்கர் மண்டி" என அவரின் தந்தை மாற்றம் செய்தார். கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கும் போது ரசீது கொடுப்பது வழக்கம். இந்நிலையில் ஏற்கெனவே இருந்த "வெங்கடப்ப நாயக்கர் மண்டி" என்கிற பெயரிலேயே கையொப்பம் இட்டு பெரியார் வழங்கியுள்ளார்.
மற்றவர் கையெழுத்தை எப்படி போடலாம் என ஒருவர் "போர்ஜரி" வழக்குத் தொடர்ந்தார். வெள்ளைக்கார "கலெக்டர்" வந்து விசாரித்து வழக்கும் உறுதியானது. அன்றைய காலங்களில் சிறைச் சாலைக்குச் செல்வது அவமானகரமாகப் பார்க்கப்பட்டது. அதுவும் செல்வந்தர் வீடுகளில் பெரிய விசயமாக நினைப்பார்கள். இந்நிலையில் வழக்கும், "கிரிமினல்" வழக்காக மாறியது. பெற்றோர்கள் அழுது புலம்பினார்கள். பெரியாரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனப் பெரிய, பெரிய வழக்குரைஞர்களை நியமித்தார்கள்.
விடுதலை செய்த நீதிபதி!
திருச்சியில் தான் விசாரணை நடைபெற்றது. அதேநேரம் தண்டனை உறுதி என எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். பெரியாரும் சிறைக்குச் செல்லத் தயாரானார். தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிவிட்டார். தரையில் படுத்து பயிற்சி பெற்றார். சிறை வாழ்க்கை அதிர்ச்சியாக இருக்கக் கூடாது என முன்பாகவே தன்னைத் தயார் செய்து கொண்டார்!
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. "அந்தக் கையெழுத்தை நான் போடவில்லை," என்று மட்டும் சொல்லுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள் வழக்குரைஞர்கள். ஆனால் நீதிபதி பெரியரைப் பார்த்து, "இந்தக் கையெழுத்தை யார் போட்டது?", எனக் கேட்க, பெரியார் எந்தத் தயக்கமும் இன்றி, "நான் தான் அந்தக் கையெழுத்தைப் போட்டேன்" என்றார். "தந்தைக்கு வரவேண்டிய பணத்தை வாங்கி கொண்டு, கையப்பமிட்டு ரசீது கொடுத்தேன்" என்றார். "இது வணிகத்தில் இயல்பாக நடப்பது தான்! மற்றபடி யாரையும் நான் ஏமாற்றவில்லை. அந்த நோக்கமும் எனக்கில்லை" எனப் பெரியார் விளக்கமளித்துப் பேசிய போது, நீதிபதி வியந்து பார்த்துள்ளார். "இவர் செய்த செயலால் யாருக்கும் பாதிப்பில்லை", எனக் கூறி நீதிபதி பெரியாரை விடுதலை செய்தார்.
நான் சாகாமல் இருக்க காரணம் என்ன?
இந்நிகழ்வு நடந்து முடிந்து 120 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து பெரியார் விடுதலையில் விரிவாக பதிவு செய்திருக்கிறார். பொது வாழ்க்கைக்கு வருவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். உண்மையைப் பேசுவதற்கு எனக்கு எப்போதும் தயக்கமில்லை என்கிறார் பெரியார். "நம்மை நாமே எண்ணிக் கொள்வதில் ஒரு பெருமை, எங்கும், எப்போதும் துணிச்சலாகப் பேசும் தன்மை, ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அதில் கூட ஒரு திருப்தி, அதேநேரம் நேர்மை, ஒழுக்கம் குறித்து நாம் செய்யும் வழிகாட்டி பிரச்சாரம்", என இலக்கிய நயத்துடன் அற்புதமாக எழுதியிருக்கிறார் பெரியார்.
"இதுபோன்று என் வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளது, அதுகுறித்து விரிவாகக் கூறினால் அது தற்பெருமையாகத் தெரியும். ஒரு மனிதர் நேர்மையாக நடந்து கொள்வதில் கூட, ஒரு சுயநலமும் இருக்கிறது. காரணம் பெருமை வருகிறதுதானே! எனது கவனக் குறைவால் தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பொது வாழ்க்கையில் நான் சாகாமல் இருப்பதற்கு, என் நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதை தான் காரணம்", எனப் பெரியார் எழுதியிருக்கிறார்.
பட்ட காயம் ஆறுமோ?
பெரியார் தந்த புத்தி என்பது இதுதான். பெரியாரின் இந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்றுவதால் தான், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். இதுதான் என் 91 வயதுக்கு காரணம்! இந்த உண்மையும், நேர்மையும் தான் என் எல்லா துணிச்சலுக்கும் காரணம்! கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்துப் பேசினார்கள். அந்த நேரத்தில் என் குடும்பத்திற்குக் கிடைத்த அவமானங்கள் மிக மிக அதிகம். தொலைப்பேசி செய்து என் இணையரிடமும் மற்றவர் களிடமும் எவ்வளவோ கடுமையாக பேசி இருக்கிறார்கள். அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குத் தனிச் சட்டம் இயற்றினோம்!
இந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்றால் பெரியாரிடம் இருந்து வந்தது! ஆகவே தோழர்களே! இந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்கு நேர்மையாய், உண்மையாய் இருப்பதே முக்கியக் காரணம்! நானும் உற்சாகமாய், சுறுசுறுப்பாய் இருக்கவும் அதுவே காரணம்!", எனத் தமிழர் தலைவர் பேசினார்.
எத்தனைத் தகவல்கள்! எவ்வளவு நிகழ்வுகள்!!
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது, "இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்! ஆசிரியர் வேக நடை நடக்கிறார் என எல்லோரும் சொல்கிறார்கள். வேகமாக நடப்பது மட்டுமல்ல: அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்! அவரைப் போல ஒரு முன்மாதிரி வேறு யாரும் இருக்க முடியாது! நாம் செய்ய வேண்டியது, அவரைப் பின்பற்றுவது ஒன்றுதான்! ஆசிரியரோடு 55 ஆண்டு காலமாகப் பயணிக்கிறேன். அடுத்தாண்டு வந்தால் பெரியார் திடலுக்கு நான் வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற போகிறது! ஆசிரியர் அவர்களை அருகே இருந்து பார்த்தவன் என்கிற அடிப்படையில், எவ்வளவோ தகவல்களும், நிகழ்வுகளும் நினைவுகளில் அலைமோதுகின்றன!
புதிய தலைமுறைக்குச் சில தகவல்களை நான் கூற வேண்டும். ஆசிரியர் அவர்கள் உடலில் கத்தி படாத இடமே கிடையாது! எத்தனையோ அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னரும், அவர் வேகமாக உழைக்கிறார்! காரணம் நம் இனத்திற்காக! தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிக்காக!! தொடர்ந்து பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், இயக்கம் பொலிவோடும், வழிவோடும் செயல்பட்டு வருகிறது! இளைஞர்கள் நிறைய வருகிறார்கள்! வாராவாரம் பெரியார் பயிற்சிப் பட்டறைகள் நடந்து கொண்டிருக்கின்றன! ஆசிரியரின் செயல் திட்டங்கள், சீர்திருத்தங்கள் நம் கண் முன்பே வெற்றி பெற்று வருகின்றன!
பெரியார் எனும் இமயம் சாய்ந்த பிறகு!
இயக்கம் நடத்தும் முறை, அதன் வீச்சு பெரியது. ஏனெனில் பெரியார் எனும் இமயம் சாய்ந்த பிறகு, இந்த இயக்கத்தை வழிநடத்துவது சாதாரணமானது அல்ல! இவ்விசயத்தில் ஆசிரியர் பெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நான் மனப்பூரிப்போடு கூறிக் கொள்கிறேன்! குன்றக்குடி அடிகளார் அவர்கள், "வெறிச்சோடி போக இருந்த தமிழ்நாட்டை வீரமணி காப்பாற்றினார்," என்று ஒருமுறை கூறினார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருச்சி கல்வி வளாகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, "பெரியாருக்குப் பின்னாலே இந்த இயக்கமும், அறக்கட்டளையும் வீரமணி அவர்களால் தான் இவ்வளவு வளர்ச்சி பெற்றது", என்று சொன்னார். இந்த இயக்கத்தின் அவசியம் இன்று இந்திய அளவிற்குத் தேவைப்படுகிறது! தமிழ்நாட்டில் இருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற பின், தந்தை பெரியார் வாழ்க! வெல்க திராவிடம்! என்று சொன்னார்களே, அதற்குப் பின்னால் இந்த இயக்கம் இருக்கிறது!
பெரியாருக்குப் பின்னால் இந்த இயக்கம் என்ன ஆகுமோ எனக் கவலைப்பட்டவர்கள் சிலர்! இந்த இயக்கம் இருக்கக் கூடாது என ஆசைப்பட்டவர்கள் பலர்! அந்தக் காட்சிகள் எல்லாம் மறைந்து, இன்றைக்குப் பெரும் நம்பிக்கையும், உற்சாகமும் நிலவுகின்றன! ஒரு மாதத்தில் அதிக நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் தலைவராக நம் ஆசிரியர் இருக்கிறார்! பத்திரிக்கையில், தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப் பார்த்தால், ஒரு நொடியில் அதன் தன்மையைப் புரிந்து கொள்கிற நுணுக்கமான, நுட்பமான கணினி நம் ஆசிரியர்!
எம்ஜிஆர் வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்த போது, உடனடியாக அதிலுள்ள ஆபத்துகளை அரசியல் தலைவர்கள் முதல், தமிழ்நாட்டின் அத்தனைப் பேர்களுக்கும் கொண்டு சேர்த்தவர் ஆசிரியர்! அதேபோல 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, தனிச் சட்டம் இயற்ற வைத்து, அதைப் பாதுகாத்தவர். அதுவும் தமிழக முதல்வராக பார்ப்பனர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமராகப் பார்ப்பனர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவராகப் பார்ப்பனர் சங்கர் தயாள் சர்மா இருந்த போதே இந்தச் சாதனையை அவர் செய்து காட்டினார்!
இந்திய அளவில் இடஒதுக்கீடு 27 விழுக்காடு
அதேபோன்று தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அளவில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கக் காரணமாய் இருந்தார். மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்த 42 மாநாடுகள், 16 போராட்டங்கள், இந்திரா காந்தி வீட்டு முன் ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் எனத் திகார் சிறை வரை சென்று வந்தது நம் இயக்கம்! மண்டல் அவர்கள் பெரியார் திடல் வந்த போது மிகச் சிறப்பான வரவேற்பு கொடுத்தோம்! "பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் மூலம் தான் இடஒதுக்கீடு சாத்தியம், அதுவும் ஆசிரியர் வீரமணி கையில் தான் அது உள்ளது", எனக் கூறி சென்றவர் மண்டல்! இப்படி ஏராளமான செய்திகளைக் கூறிக் கொண்டே போகலாம்", எனக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பேசினார்!
பாராட்டுவது எளிது! பின்பற்றுவது கடினம்!
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், "இன்று ஒரு மகிழ்ச்சியான தருணம்! காலையில் தான் ஆசிரியரை திடலில் சந்தித்தேன்! ஆசிரியர் விரைந்து நடக்கிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். விரைந்து நடப்பது மட்டுமல்ல, 91 வயதிலும் ஆழ்ந்து படிக்கிறார்; நமக்கு வழிகாட்டுகிறார்! பொது வாழ்வில் அவர் முன்னோடியாக இருக்கிறார். ஆசிரியரைப் பாராட்டுவது எளிது! பின்பற்றுவது கடினம்!
தம் உடல் நிலையை நன்றாக அவர் வைத்திருக்கிறார். உடல் நன்றாக இருக்க வேண்டும் என்பதை விட, நன்றாக இருந்தால் தான் ஊருக்கு உழைக்க முடியும் என்கிற சிந்தனை ஆசிரியருக்கு! அண்மையில் 90 இல் 80 விழா நடந்தது. நானும் பங்கேற்று பேசினேன்! 90 வயது வாழ்வதே மகிழ்ச்சியான செய்தி! அதில் 80 வயது பொது வாழ்க்கைக் கூடுதல் மகிழ்ச்சி! அந்த விழாவில் ஆசிரியர் அவர்கள், "80 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்ததால் தான், இந்த 90 வயது என்று கூறியதை மறக்கவே முடியாது!
பொது வாழ்க்கையில் கவலைகள் குறைவு!
யாரெல்லாம் பொது வாழ்க்கையில் இருக்கிறீர்களோ, உழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழ முடியும் என்கிற ஒரு மறைமுக செய்தி இதில் இருக்கிறது. தன் வாழ்வு குறித்து மட்டுமே சிந்திக்கும் ஒருவருக்கு கவலையே மிஞ்சும். சமூகம் குறித்துச் சிந்திக்கும் போது மட்டுமே, தனிப்பட்ட கவலைகள் குறையும்.
பொது மனிதராக வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிப் பாசறை முகாமாக திராவிடர் கழகம் இருக்கிறது! பொதுவாக வயது ஏற, ஏற உறவுகள், நண்பர்கள் தொடர்பு குறையும். வெறுப்பினால் அல்ல; இயல்பாகவே இது நடக்கும். எப்படி தனி மனிதராகப் பிறந்தோமோ, அப்படியே தனி மனிதராகவே இருக்கும் சூழல் வந்துவிடும். ஆனால் பொது மனிதராக இருப்பவர்களுக்கு நட்பு கூடுமே தவிர ஒருபோதும் குறையாது!
நாம் தனி மனிதரல்ல!
நாம் தனி மனிதர் என்கிற எண்ணமே இல்லாமல் புதிய நண்பர்கள், புதிய செய்திகள் எனப் பொலிவோடு திகழ்வோம்! இதுபோன்ற மனநிலை ஒருவர் பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. அந்த மனநிலை ஆசிரியரிடம் நிறைய இருக்கிறது! அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்! யாரைப் பார்த்தாலும் கேட்பதற்கு ஒரு செய்தி ஆசிரியரிடம் இருக்கும்! இன்று காலை என்னை பார்த்த போது கூட, "ஜனவரி ஒன்றாம் தேதி திராவிட முழக்கம் என்கிற புதிய புத்தகம் தொடங் குகிறீர்களே", எனக் கேட்டார். இது ஒரு தலைவருக்கான உணர்வு மட்டுமல்ல; ஒரு மூத்த சகோதரருக்கு உரிய குணாதிசயமும் கூட!
ஆக ஒவ்வொருவரிடமும் உணர்வுபூர்வமாகப் பேசும் போது, தனி மனிதர் மீதும் அவர் வைத்திருக்கிற அக்கறை தெரிகிறது! நாங்கள் ஆசிரியர் என அழைப்பது "விடுதலை" இதழின் ஆசிரியர் என்பதால் மட்டுமல்ல! எங்களைப் போன்றோருக்கு என்றென்றும் அவர் தான் ஆசிரியராக இருக்கிறார்!", என சுப.வீரபாண்டியன் பேசினார்.
பெரியார் எனும் பட்டறையில்!
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்கிய போது, "பெருமைப்படுகிற தலைவரை நாம் பெற்றிருக் கிறோம்! அந்த உணர்வுதான் நம் அனைவர் மனதிலும் இருக்கிறது! இயக்கத் தலைவர், குடும்பத் தலைவர், கொள்கைத் தலைவர், தனிப்பட்ட வழிகாட்டி என அத்தனை வகையிலும் பின்பற்றக்கூடிய ஒரு தகைசால் தமிழரைத் தான் நாம் பெற்றிருக்கிறோம்! தந்தை பெரியார் எனும் பட்டறையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு ஆசிரியர்!
கல்வி, பணி, திருமணம் என்பது ஒரு தனி மனிதரின் வாழ்க்கை உரிமை! ஆனால் தொண்டுக்காகக் கல்வி கற்ற ஒருவர் நம் ஆசிரியர் தான் எனப் புரட்சிக்கவிஞரே பாடியிருக்கிறார்! வழக்குரைஞர் பணியில் ஆசிரியர் இருந்திருந்தால், உச்சநீதிமன்றம் வரை சென்று புகழ் பெற்ற வழக்குரைஞராக இருந்திருக்க முடியும். ஏனெனில் ஒரு விசயத்தை நாம் சொல்ல வேண்டும் என்றால், அது சரியாக இருக்க வேண்டும். தன்னைப் பற்றிய மதிப்பீடு அது! முன்பின்னாகவோ, குழப்பத் துடனோ, யூகத்தின் அடிப்படையிலோ, சந்தேகத் திடனோ என எந்த வளைவுகளுடனும் பேசாமல், "திட்டமிட்டு" பேசுவது ஒரு சிறப்பு அம்சம்! அக்கருத்தில் பிறர் உடன்படலாம் அல்லது முரண்படலாம்.
தந்தை பெரியார் ஆணை ஒன்றே!
சொல்ல வந்த கருத்தைப் பிறருக்கு நியாயமாக கொண்டு சேர்க்கக் கூடிய அந்த முனைப்பு! அந்த ஆற்றல்!! இது பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விசயமல்ல. மாறாகத் தம் கருத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி பிறரிடம் கொண்டு செல்வது! இவையெல்லாம் ஆசிரியர் பேச்சின் சிறப்புகள்! இந்தச் சிறப்போடு, உழைப்பும் சேர்த்து வழக்குரைஞராக பணியாற்றி இருந்தால், பெற்றிருக்கக் கூடிய செல்வ வளம் என்பது கணிக்க முடியாத ஒன்று! ஆக இவை அனைத்தையும் புறந்தள்ளி, பெரியாரிடம் தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர் நம் ஆசிரியர் அவர்கள்! இதுதான் தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு!
மிக முக்கியமாக இளையவராக இருந்த போது அவர் அப்படி இருந்தார்; மாணவராக, இளைஞராக இருந்த அவர் இப்படி இருந்தார் என்றெல்லாம் சொல்வதற்கு இங்கு இடமே இல்லை! ஏனென்னில் "தந்தை பெரியார் ஆணை ஒன்றே" என இன்று வரை வாழ்ந்து வருபவர் அவர்! தத்துவ வாழ்க்கை வேறு; தனிமனித வாழ்க்கை வேறு என்றில்லாமல் வாழ்பவர் தான் தமிழர் தலைவர் ஆசிரியர்", என வழக்குரைஞர் அருள்மொழி பேசினார்.
பெரியார் பெரியாராக இருக்கிறார்!
தொடர்ந்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பேசும் போது,
இன்றைக்கு நாம் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறோம். இன்று காலை பெரியார் திடல் சென்றபோது, எல்லோருமே தம் வீட்டு நிகழ்ச்சியில் இருப்பது போலவே உணர்ந்தோம்! இயக்கத் தோழர்கள் ஒருவரை ஒருவர் வரவேற்று மகிழ்ந்தார்கள்!
பெரியாரை நேரடியாகப் பார்க்காத தலைமுறை, ஆசிரியரைப் பார்க்கிறது! பெரியாரின் பேச்சுகளை நேரடியாகக் கேட்காத தலைமுறை, ஆசிரியர் பேச்சுகளைக் கேட்கிறது. பெரியார் எங்களுக்கு எழுத்து மூலம் தான் அறிமுகம். ஆனால் பெரியாரை முழுமையாகக் காட்சிப்படுத்தக்கூடிய சூழல் இங்கே நிலவுகிறது! எவ்வளவோ பலம் வாய்ந்த பார்ப்பனியம், பெரியாரிடம் மட்டும் நெருங்க முடியவில்லை! அதனால் தான் பெரியார் பெரியாராக இருக்கிறார்! கூடுதலாக ஆசிரியராக இருக்கிறார்!
நமது விடுதலை ஆசிரியர்!
இளைய தலைமுறைகள் நாங்கள் ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் உள்ளன! ஆசிரியர் 1968 ஆம் ஆண்டு மலேசியா சென்று வந்த போது, விடுதலை இதழ் பணி தோழர்கள் பாராட்டு விழா வைத்திருந்தார்கள்! ஆசிரியருக்கு அப்போது வயது 35. அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றது 1929. ஆக ஆசிரியர் அவர்கள் மலேசியா சென்று வந்ததைப் பெரியார் இப்படி எழுதுகிறார். "நமது விடுதலை ஆசிரியர் மலேசியா சென்று வந்திருக்கிறார்", என எழுதுகிறார். வேறு எந்த வார்த்தைகளையும் பயன் படுத்தியிருக்கலாம். எனினும் "நமது ஆசிரியர்" என அவர் விளிக்கிறார். "மலேசியா போகும் போது என்னால் வழியனுப்ப இயலவில்லை; வந்த பிறகும் வரவேற்க அங்கு இல்லை", என எழுதுகிறார். இதுபோன்ற ஒரு நிகழ்வை வேறு எங்கும் நாம் காண முடியுமா? ஒரு தலைவர், ஒரு தொண்டரை ஆசிரியராக வைத்து அழகு பார்க்கிறார்! அதேநேரம் ஆசிரியர் எவ்வளவு திறம்பட செயல்பட்டிருந்தால், பெரியார் இதுபோன்று உணர்வுப்பூர்வமாக எழுதி யிருப்பார்!
24 மணி நேரமும் பொது வாழ்க்கை!
ஆசிரியர் குறித்து 35 வயதில் பெரியார் எவ்வளவு உயர்வாக எழுதினாரோ, பேசினாரோ அதில் எந்த மாற்றமும் இல்லாமல் 91 வயதிலும் அது அதிகமாகவே மிளிர்கிறது! ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேச ஆசிரியருக்கு ஒரு செய்தி இருக்கும்!
"பெரியார் 24 மணி நேரமும் பொது வாழ்க்கைக்குத் தயாராக இருப்பார்", எனக் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா சொல்வார்கள். அதிகாலை 4 மணி என்றாலும், இரவு 12 மணி என்றாலும் அழைத்தால் பெரியார் வந்துவிடுவாராம்! இந்த வாழ்க்கை முறையைப் பெரியாரிடம் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் ஆசிரியரிடம் காண்கிறோம்! அதிகாலை இறங்கும் தொடர்வண்டி பயணத்தில் கூட கசங்காத சட்டை, மடிப்பு கலையாத துண்டு, களைப்பில்லாத முகம் என எப்போதும் ஆசிரியரைக் காண முடியும். எப்போதாவது சிலர் இருப்பார்கள்; எப்போதுமே இருப்பவர் என்றால் அது நம் தலைவர் தான்!
"நான்" என்பதைக் கேட்டதில்லை!
அந்த நேர்த்தியான வாழ்க்கை 30, 40 வயதுகளில் இருந்திருக்கலாம். 91 வயதிலும் தொடர்கிறது என்பது தான் மிகப்பெரிய வியப்பு! அதேபோல தன்முனைப்பு என்பது ஆசிரியரிடம் நாம் பார்க்கவே முடிய ஒன்று! அதேபோல "நான்" என்கிற வார்த்தையை அவர் எங்குமே பயன்படுத்தியது கிடையாது! "நாம் பெற்றிருக்கிறோம், கழகம் செய்திருக்கிறது, பெரியார் கொள்கையே காரணம்", என்கிற சொற்களைத்தான் ஆசிரியர் பயன்படுத்துவார்!", என சே.மெ.மதிவதனி பேசினார்.
இந்நிகழ்வில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற கருநாடக வழக்குரைஞர் இரவிவர்மாகுமார் அவர்களின் மகள் வழக்குரைஞர் பெல்லி ரவிவர்மா குமார் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் காணொலியில் சற்றொப்ப 250 பேர் நேரலையிலும், பெரியார் வலைக்காட்சி மூலமாக 1500 பேரும் பார்த்தனர்!
No comments:
Post a Comment