‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் - சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை- விளக்கவுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் - சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை- விளக்கவுரை!

featured image

* என்றைக்கும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்!
* பெண்களே ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி 1938 இல் பெண்கள் மாநாடு கூட்டி ‘‘பெரியார்” என்று பட்டம் கொடுத்ததை நினைவூட்டுகிறது!
* சால்வை அணிவிப்பதைத் தவிர்த்து ‘விடுதலை’ சந்தாக்களைத் தாரீர்!
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் ஹிந்துத்துவா இந்தியாவுக்கும்- திராவிட இந்தியாவிற்குமிடையே நடக்கும் முக்கிய தேர்தல்!
தோழர்களே, பெண்களை முன்னிறுத்துங்கள், பாராட்டுங்கள்!

சென்னை, டிச.12 எனது பிறந்த நாள் விழா என்ற பெயரில் எனக்கு வழங்கப்பட்ட பாராட்டெல்லாம் தந்தை பெரியாருக்கே உரியது. நான், ‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்” என்பதுதான் எனக்குப் பெருமை என்றும். தோழர்கள் பெண்களை முன்னிறுத்தவேண்டும், பாராட்டவேண்டும் என்றும், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் என்பது ஹிந்துத்துவா இந்தியாவுக்கும் – திராவிட இந்தியாவுக் குமிடையே நடைபெறக் கூடியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா!
நேற்று (11.12.2023) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் – சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:

அரை நூற்றாண்டு காலத்தில் நடந்தவற்றையெல்லாம்
ரீ-வைண்டிங் செய்து பாருங்கள்!
பெரியோர்களே, தோழர்களே, மேடையில் வீற்றிருக் கக்கூடிய தோழர்களே, கழகப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் மிக அருமையான உரையினை இங்கு ஆற்றி, ஓர் உற்சாகத்தினை எனக்கு மட்டு மல்ல, நம் அனைவருக்கும் ஊட்டியுள்ளார்கள். தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவர் தமது இறுதிப் பேருரையை ஆற்றிய நாள் வருகின்ற 19 ஆம் தேதியாகும். நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது; இந்த அரை நூற்றாண்டு காலத்தில் நடந்தவற்றையெல்லாம் ரீ-வைண்டிங் செய்து பாருங்கள் – என்னவெல்லாம் நடந்திருக்கின்றன?
அக்காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலம் – இப்பொழுது அறிவிக்கப்படாத நெருக்கடி காலம். எல்லாக் காலத்தையும் வென்று காட்டக்கூடியவர்கள் நாங்கள் என்று இங்கே திரண்டிருக்கின்ற அருமைப் பெரியோர்களே, இயக்கப் போராளிகளாக இருக்கக்கூடிய தோழர் களே, கொள்கைக் குடும்ப உறவுகளே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை மீண்டுமொருமுறைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கை வெற்றிக்கு
ஓர் ஆவணம்தான் இந்த மலர்
அருமையான மலர் என்ற முயற்சியிலே, ஒரு கொள்கை வெற்றி – அந்தக் கொள்கை வெற்றிக்கு ஓர் ஆவணம்தான் இந்த மலரே தவிர, எனக்குப் பாராட்டு மலர் என்று நான் கருதவில்லை.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். இருக்கிறதே என்று எதிரிகள் சங்கடப்படக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
இருக்கும் என்பதை மற்றவர்கள் நம்புகிற அள விற்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு நம்மு டைய தோழர்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அம்மலரை வெளி யிட்டவர் தோழர் வெற்றிச்செல்வி அவர்களா வார்கள்.
அதேபோன்று அந்த மலரை பெற்றுக்கொண்ட டாக்டர் ச.மீனாம்பாள், பசும்பொன், இறைவி, வி.வளர்மதி, பூவை செல்வி, விஜயலட்சுமி, சு.சுமதி, ம.யுவராணி, மு.ராணி, த.மரகதமணி, செல்வி வினோத், தமிழரசி, த.சுகந்தி, உத்ரா, பழனிச்சாமி ஆகிய தோழர்களே!
அதுபோலவே, இங்கே அற்புதமான பல தலைப்புகளில் உரையாற்றியுள்ள பேராளர்களில் – கழகத்தினுடைய சிறப்புவாய்ந்த உலகறிந்த கொள்கைப் போராளி, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
பெண்ணுரிமைப் போராளியாக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளர் ஓவியா அவர்களே, என்றைக்கும் நம் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய கொள்கையாளர் பேராசிரியர் அரங்க.மல்லிகா அவர்களே,
இணைப்புரையாற்றிய பேராசிரியர் வி.கே.ஆர். செல்வி அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய பவானி அவர்களே,
கழகத்தினுடைய துணைத் தலைவர் உள்பட, தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, அருமைப் பெரியோர்களே, நண்பர்களே, கழகத் தோழர்களே, சான்றோர்களே, ஊடகவியலாளர்களே!

கோர்ட் கலையும்வரை தண்டனை!
அதிகமான அளவிற்கு குற்றம் புரியவில்லை; ஏதோ சந்தர்ப்பத்தினாலே அந்த வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகின்ற நேரத்தில், இவரை விடுதலையும் செய்யக்கூடாது; அதேநேரத்தில் தண்டனையும் கடுமையாகக் கொடுக்கக் கூடாது என்று கருதி, ‘‘கோர்ட் கலையும் வரை தண்டனை” என்று சொல்வார்கள்.
‘‘நீதிமன்றம் முடியும் வரை தண்டனை” என்று சொல்வார்கள். அதுபோல, எனக்கு இங்கே இரண்டரை மணிநேர தண்டனையை சிறப்பாக வழங்கிய, இங்கே நம்முடைய பேச்சாளர்களாக, செயலாளர்களாக இருக்கக்கூடிய அத்துணைப் பேருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறந்த நாளன்று வெளிவந்த அறிக்கையிலும் நான் எழுதினேன் – காணொலியில் உரையாற்றும் பொழுதும் விளக்கிச் சொன்னேன்.

 

எனக்குத் தந்த பாராட்டல்ல!
இவ்வளவும் என்னுடைய பெருமையோ, மற்ற வையோ கிடையாது. அதில் எதாவது உண்மை இருக்குமேயானால், நம் குடும்பத்தில் இருக் கக்கூடியவர்கள் அனைவரும் மகிழ்ந்து பாராட்டி, மேலும் மேலும் உற்சாகத்தோடு பணிகள் குறை வில்லாமல் நடக்கவேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அதனுடைய ரகசியம் என்னவென்று சொல்லும் பொழுது,பிறந்தநாள்அறிக்கையிலும்சுட்டிக் காட்டினேன், காணொலி உரையிலும் சுட்டிக் காட்டினேன். இன்றைக்கும் அதை மீண்டும் புதுப்பிக்கிறேன்.
ஆகவே, அது எனக்குத் தந்த பாராட்டு அல்ல; அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையே நீங்கள் பாராட்டி இருக்கின்றீர்கள் என்று அதற்குப் பொருள்.
காரணம், எனக்கு சொந்த புத்தி கிடையாது.
இயல்பாக, பொதுவாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு இருந்திருக்கலாம்.
என்றைக்கு நான் பெரியார் வாழ்நாள் மாணவன் ஆனேனோ –
என்றைக்குப் பெரியார் என்ற பேராயுதத்தைக் கையில் தூக்கினேனோ –
பெரியார் என்ற ஓர் அறிவாயுதத்தை என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள் என்றைக்கு எனக்குக் கற்பித்தார்களோ –

பெரியார் தந்த புத்திதான்!
அன்றிலிருந்து இன்றுவரையில் பெரியார் தந்த புத்திதான் என்னை வழிநடத்தக் கூடியது என்றால் –
நான், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்றால், அந்தப் பெருமை யாருக்கு?
பெரியாருக்கு!
பெரியார் தந்த புத்திக்குத்தான்!
எனவே, என்னுடைய சொந்த புத்திக்கு வேலையில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றேன்.
சொந்த நலன்கள் என்பதைக்கூட, முன்னால் நிறுத்த முடியாத அளவிற்கு, வாழ்க்கை அமைத்தது தான் தந்தை பெரியாருடைய வாழ்க்கை.
அவர் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகவிருக்கிறது என்று சொன்னேன் – வருகின்ற 19 ஆம் தேதிதான், பெரியடைய கடைசி முழக்கம் தியாகராயர் நகரில்.

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
50 ஆண்டுகளுக்குமுன்!
ஆங்கிலத்தில், கடைசிப் பேருரைக்கு என்ன சொல்வார்கள் என்றால், Swamsong என்று அதற்குப் பெயர்.
அந்தக் காலத்தில் அப்படி ஒரு பழக்கம். அந்த இறுதி முழக்கத்தில், நானும், புலவர் இமயவரம்பன், நிர்வாகி சம்பந்தமும் இருந்தனர்.
சில பணிகளுக்காக, அன்னை மணியம்மையாரை திருச்சியில் விட்டுவிட்டு, அய்யா சென்னைக்கு வந்தார். கூட்டம் முடிந்ததும் இரண்டு நாள் கழித்துச் செல்லலாம் என்றுதான் வந்தார். அதுதான் கடைசிக் கூட்டமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
‘‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா” என்ற வார இதழில், ஓர் அறிவியல் கருத்தை வெளி யிட்டிருந்தார்கள். தாசபிரகாஷ் ஓட்டலை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம்.

தந்தை பெரியாரின் அறிவியல் தொலைநோக்கு!
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது; பல செய்திகளைப்பற்றி பேசிக் கொண்டே சென்றோம்.
அய்யா, ‘‘‘இனிவரும் உலகம்’ பற்றி கூறினீர் கள், 1938 ஆம் ஆண்டு. அதில் டெஸ்ட் டியூப் பேபி (பரிசோதனைக் குழாய் குழந்தை)பற்றி பேசினீர்கள். இன்றைக்கு உங்களுக்கு ஓர் அதிசயமான செய்தி இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்திருக்கிறது; இந்தி யாவிலும் டெஸ்ட் டியூப் பேபி குழந்தை பிறந்திருக்கிறது” என்றேன்.
அப்படியா? என்று பெரியார் அவர்கள் கைதட்டி மகிழ்ந்தார்.
இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது அய்யா என்றேன்.
என்ன? என்றார் அய்யா.
ஆங்கில வார இதழில் வந்திருந்த அந்தச் செய்தியைக் காட்டி, ‘‘ரத்த வங்கியில், ரத்தத்தை சேமிக்கிறார்களே,அதுபோலவே,விஞ்ஞானிகள் ஆண்களுடைய விந்தணுக்களை சேகரித்து வைக்கிறார்கள். அந்த ஆண் இறந்து போனாலும், அந்த விந்தணுக்களை ஊசிமூலம் செலுத்தி, குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு அந்த விந்தணுக்களை 10 ஆண்டு காலம் வரை பாதுகாக்கலாம்” என்றேன்.

அய்யா அடைந்த ஆச்சரியம்!
அதைக் கேட்டவுடன், ஆச்சரியம் தாங் காமல், தந்தை பெரியார் அவர்கள் துள்ளிக் குதித்து, ‘‘ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அறி வியல் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே – பகுத்தறிவினுடைய பயன் பாருங்கள்” என்றார்.
பெரியார் அவர்கள் ஒரு சமூக விஞ்ஞானி – அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்றவர். மனிதனுக்குச் சுதந்திரம் என்பதுகூட, அடுத்ததுதான்.
‘‘நான் சொல்கிறேன் என்பதற்காகவோ, அவர் சொல்கிறார் என்பதற்காகவோ, இந்த இயக்கம் சொல்கிறது என்பதற்காகவோ அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டாம்! உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதைக் கேள்!” என்றார்.
உடனே நீங்கள் எல்லாம் கேட்கலாம், ‘‘சொந்தப் புத்தியை பயன்படுத்தவில்லை, பெரியார் தந்த புத்தியைத்தான் பயன்படுத்துகிறேன்” என்பது எப்படி என்று நினைக்கலாம்.
அறிவுக்குச் சுதந்திரம் கொடு என்றாலே, அதில் எல்லாமும் அடங்கிவிட்டது. அதனால், தனியே அக்கேள்விக்கு அவசியமில்லை.
தந்தை பெரியாரின் ‘‘இறுதிப் பேருரை”யில் மிக முக்கிய பல தகவல்களைச் சொன்னார்.
‘‘நாங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் – காரணம், அறிவின் அடிப்படையில் நாங்கள் சிந்திக்கின்றோம்” என்று சொன்னார்.
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நண்பர்களே, அய்யா அவர்கள் உடலால் மறைந் தும், அவருடைய கொள்கைகள் ஒவ்வொரு நாளும் – பலத்த எதிர்ப்புகள் இருந்தாலும், நாணய மற்ற எதிரிகள் இருந்தாலும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுதான் நமக்குப் பெருமை – அதுதான் எனக்கு வெகுமானம்.

சால்வைகளைத் தவிர்ப்பீர் –
சந்தாக்களைத் தாரீர்!
பயனாடை போர்த்துவதும், சந்தா கொடுப்பதெல் லாம் உற்சாகம் ஊட்டுபவையே! சந்தாக்களை எதற் காகக் கேட்கிறோம் என்றால், அந்தக் கொள்கைகள் பரவவேண்டும் என்பதற்காகத்தான்.
இன்றைக்குக்கூட சந்தாக்களைக் கொடுத்தீர்கள் – உங்களுக்கெல்லாம் நன்றி! கொடுத்துக்கொண்டே இருங்கள் – சந்தாக்களைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். மக்கள் படித்துக்கொண்டே இருக்கட்டும்.
நமக்காக அல்ல – சமூகத்திற்காக – நாட்டிற்காக – புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பதற்காக.
இன்னொரு வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன் – பல தோழர்கள், அன்பின் காரண மாகவோ, வேறு காரணங்களுக்காகவோ அதனைக் கடைப்பிடிப்பதில்லை.
கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று இரண்டு செய்திகளை சொல்கிறேன்.
ஒன்று, பொன்னாடை போர்த்துகிறீர்கள் – ஒரு காலத்தில் கைத்தறி ஆடைகள் பயன்பட்டன. புத்தகங்களையும் நிறைய கொடுக்கிறீர்கள். அது ஒரு நல்ல வளர்ச்சிதான் – அதை செய்யவேண்டியதுதான்.
நம்மைப் பொறுத்தவரையில், உரிமையுள்ள ஒரு வேண்டுகோள் – அன்புக் கட்டளையான ஒரு வேண்டுகோள் என்னவென்றால்,
என்னைப் பார்க்கும்பொழுது தயவு செய்து, பொன்னாடையோ, சால்வையோ, ஆடையோ அணிவிக்காமல், புத்தகங்களைக் கொடுக்காமல், ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுங்கள்; ‘‘ஓராண்டு சந்தாவிற்கான தொகை இரண்டாயிரம் ரூபாய் அல்லது ஆறு மாத சந்தாவென்றால், ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டுமே – நாமோ கையில் 200 ரூபாய்தானே வைத்திருக்கிறோம் – அது எப்படி முடியும்?” என்று நீங்கள் நினைத்தால், ‘விடுதலை’ நிதி, கழக நிதி என்று கொடுங்கள். அது புத்திசாலித்தனம்.
பொன்னாடைகளை, சால்வைகளை, ஆடை களைத் தேடி வாங்குவதற்காக நேரத்தை நீங்கள் வீணாக்குகிறீர்கள். அதனை நாங்கள் போடுவது 2 நிமிடம்கூட இருக்காது. நீங்கள் வாங்கி வந்துவிட்டீர்களே என்பதற்காக நான் அதை கூட்டம் முடியும்வரை போட்டிருந்தால், என்ன சொல்வார்கள் – ‘‘இவருக்குப் பொன்னாடையே இதுவரை அணிவித்ததில்லை போலிருக்கிறதே, கடைசிவரை அதை எடுக்கவில்லையே” என்று சொல்வார்களே தவிர, வேறொன்றுமில்லை.
அதனால் என்ன பயன்?
ஆகவே, பொன்னாடை, சால்வை ஆடை, புத்தகங்களுக்குப் பதில் சந்தாக்களையோ, நன் கொடைகளையோ கொடுங்கள்.

உடலால் பெரியார் மறைந்தார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்புதான்!
அடுத்தது, பெரியார் என்ற கட்டளை – 50 ஆண்டுகள் அவர் உடலால் மறைந்தாலும், இன்றும் வாழ்கின்றார். பெரியார் வெறும் உருவமல்ல – பெரியாருக்கு தோற்றம் – மறைவு என்பதெல்லாம் கிடையாது.
உடலால் அவர்கள் மறைந்தது என்பது ஒரு குறிப்புதானே தவிர, வேறொன்றுமில்லை. பெரியார் அவர்கள் மறையவில்லை.
சாக்ரட்டீஸ் மறைந்தாரா? திருவள்ளுவர் மறைந்தாரா? புத்தர் மறைந்தாரா? என்றால், இல்லை. அது ஒரு குறிப்பு நாள்.
தலைவர்கள் தத்துவங்களாகும்போது – தத் துவங்கள் தலைவர்களாகும்போது அவர்கள் மறைவதில்லை.
நெஞ்சத்தில் நிறைகிறார்கள். நம்முடைய ரத்த ஓட்டத்தோடு அவர்கள் உறைகிறார்கள். உறைந்து போகிறார்கள்.
பெரியார் அவர்கள் நம்மிடம் உறைந்து போயிருக்கிறார் – நிறைந்திருக்கிறார்.
இன்னுங்கேட்டால், பெரியார் ஒரு பேராயுதம் – போராயுதம் என்று நாம் சொல்வது, அவை பெரி யாரைப் பெருமைப்படுத்துகின்ற வார்த்தைகள் என்று யாரும் தயவு செய்து நினைத்துவிடவேண்டும்.
இன்றைக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி குறித்து, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்தத் தீர்ப்பைப்பற்றி மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவைப்பற்றி பேசுகிறார்கள்.
அப்பொழுது நம்முடைய கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய தி.மு.க.வைச் சேர்ந்த அப்துல்லா என்ற சிறந்த கொள்கையாளர் – தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கக்கூடிய இளைஞர் – திராவிட இயக்கக் கொள்கைகளை அப்பட்டமாகப் பின்பற்றக்கூடிய தெளிவுள்ள ஒரு பெரியாரிஸ்ட் அவர்.
அவர் உரையாற்றும்பொழுது சொன்னார் – ‘‘பெரியார் அனைத்து இனங்களுக்கும் சுய நிர்ண யம் வேண்டும்” என்று அன்றே சொன்னார் என்று, பெரியார் கொள்கையை நாடாளுமன்ற மாநிலங்கள வையில் இன்று (11.12.2023) காலை சுட்டிக்காட்டிப் பேசினார்.
உடனே, அங்கே இருக்கின்ற பி.ஜே.பி.,க்காரர்கள் அலறிப் போய், சத்தம் போட்டு, அவையே அமளி துமளியானது. உடனே, பேரவைத் தலைவர், அப்துல் லாவின் உரையை நாங்கள் அவைக் குறிப்பிலிருந்து இருந்து நீக்கிவிடுகிறோம் என்று சொல்கிறார்.

பெரியாரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கலாம்; ஆனால், மக்கள்
உள்ளத்திலிருந்து நீக்க முடியுமா?
உங்களால் பெரியாரை எங்கே இருந்து நீக்க முடியும்? உங்கள் குறிப்பிலிருந்துதான் நீக்க முடி யுமே தவிர, கோடானு கோடி மக்கள் இந்த உலகம் முழுவதும் வாழ்கிறார்களே, அவர்களுடைய உள் ளத்திலிருந்து, அவர்களுடைய ரத்தத்திலிருந்து உங்களால் நீக்க முடியுமா?
இதுதான் பெரியார் வாழ்கிறார் என்பதற்கு அடையாளம்.
50 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரியாரைக் கண் டால் மிரளுகிறார்கள்.
பெரியார் என்கிற வார்த்தையை சொல்வதற்குக் கூட அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ரத கஜ துரக பதாதிகள் இருக்கின்றனர்; அம்பறாத் தூணி எடுத்த ராமருக்குப் புதிதாகக் கோவிலைக் கட்டும் அளவிற்கு படை பலங்கள் அவர்களிடம் இருக்கிறது. ஆனால், பெரியார் என்ற ஒரு சொல்லைக் கேட்டவுடன், அவர்கள் அலறுகிறார்கள்.
ஆகவேதான், பெரியார் வாழ்ந்து கொண்டிருக் கிறார்.
பெரியாரை இனிமேல் பரப்பவேண்டிய அவசியம் கிடையாது.
பெரியாரை சுவாசிக்கவேண்டும். இளைஞர்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி வருகிறபொழுது நண்பர்களே, நம்மு டைய பொதுவாழ்க்கை என்பதே இந்தக் கொள் கையை மக்களிடம் எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டும்.

என் வாழ்நாளில்
மறக்க முடியாத நிகழ்ச்சி!
மற்ற எல்லா நிகழ்ச்சிகளைவிட, இந்த நிகழ்ச்சி என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
எப்படி தந்தை பெரியார் அவர்களுக்கு, 1938 ஆம் ஆண்டு ‘‘பெரியார்” என்ற பட்டத்தை அளித்து, பெண்கள் மாநாட்டினை இதே சென்னையில் நடத்தினார்களோ, அதுபோல, இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்.
நிகழ்ச்சி சிறியதாக இருக்கலாம்; ஆனால், இது வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
அதேபோல, என்னுடைய வாழ்விணையர் அவர்களை அழைத்து நீங்கள் பாராட்டி, சிறப்பு செய்தீர்கள் அல்லவா!

மகளிரைப் பாராட்டுங்கள்!
தயவுசெய்து ஏதோ ஒரு குடும்பத்திற்கு இதைச் செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். இனிமேல் எந்த இயக்க நிகழ்ச்சிகள் நடந்தாலும், முதலில் மகளிரை அழைத்துப் பாராட்டுங்கள்; அதைக் கண்டிப்பாக செய்யவேண்டும். அவர் களைப் பாராட்டவேண்டும். அவர்களை உற் சாகப்படுத்துங்கள்.
முதலில் அவர்கள் வருவதற்குக் கூச்சப்படு வார்கள்; சங்கடப்படுவார்கள். வற்புறுத்தி நீங்கள் வரவழைக்கவேண்டும். என்னுடைய துணைவியார் அவர்கள் வரமாட்டார்கள்.
யாரும் சாதிக்க முடியாததை, இன்றைக்கு மகளிர் சாதித்திருக்கிறீர்கள். நான் தோற்றுப் போன இடத்தில், நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்; அதற்காக உங்களுக்கு வாழ்த் துகள்!
தோல்வியிலும் மகிழ்ச்சி இருக்கிறது; வெற்றியிலும் மகிழ்ச்சி இருக்கிறது.
இங்கே வெளியிடப்பட்ட மலரை என்னிடம் கொடுத்தார்கள். அதில், என்னுடைய வாழ்விணை யரின் பேட்டியும் வெளிவந்திருக்கிறது என்று சொன்னார்கள்.

அடித்தளமே முக்கியம்!
எப்பொழுதும் கட்டடங்களுடைய அடித்தளம் மண்ணிப் புதைந்துதான் இருக்கும். இதுவரையில் கோபுரங்களையே வர்ணித்துத்தான் நாம் பழக்கப் பட்டு இருக்கிறோமே தவிர, கோபுரத்தில் உள்ள சிலைகள், கோபுரங்களைப்பற்றி சொல்லியிருக்கி றோமே தவிர, புயல் வரும்பொழுது, அந்தக் கோபுரம் நிலைத்து நிற்கிறது என்று சொன்னால், அதற்கு எது காரணம்?
மேலே இருக்கின்ற கட்டுமானமா என்றால், அல்ல – புதைந்திருக்கின்ற அஸ்திவாரம் அடிக்கட்டு மானம்தான் தோழர்களே!
ஆசிரியருக்கும்- ஆசிரியருடைய வாழ்விணை யருக்கு மட்டும்தான் பாராட்டென்பது உரியது என்று நினைக்காதீர்கள்.
நீங்கள்ஒவ்வொருவரும் உங்களுடைய வாழ் விணையரை அழைத்து வாருங்கள். கமிட்டி என் றாலும், பொதுக்கூட்டம் என்றாலும், வாழ்விணை யரைப் பாராட்டுங்கள்.
முதலில் அவர்களுக்கு சங்கடமாக இருக்கலாம். தொடங்கும்பொழுது கடினமாக இருக்கும். ஆனால், அதை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். அதற்குப் பிறகு இது நடைமுறையாகவேண்டும்.
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில், அன்னை மணியம்மையாரை அழைக்கும்பொழுது, ‘‘அம்மா” என்று அழைப்பார்.
அவர்கள் என்னுடைய தாய்க்குமேல் என்று சொல்வார் தந்தை பெரியார் அவர்கள். அன்பானவர் களின்மீது உரிமை எடுத்துக்கொண்டு சில நேரங்களில் ‘‘அவன்” என்ற ஒருமை வார்த்தையைப் பயன்படுத்துவார்.
‘‘நான் சொல்வதைவிட, அந்த அம்மா சொன் னால்தான் அவன் கேட்பான்” என்று சொல்வார்.
அவ்வளவு தூரம் அவர்கள்மீது ஈர்ப்புக் கொள்வதற்குக் காரணம் என்ன? என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறதே, அவருடைய பழக்கம், அவருடைய சிந்தனைதான்.
நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னீர்களே, எது செய்வதென்றாலும், எங்களுக்குக் கடினம் இல்லை.

நாள்தோறும் ‘பெரியார் மேடை’யில்
பேசுகிறேன்!
இன்றைக்கு இந்தப் பிரச்சினை வந்தால், என்ன செய்வார் அய்யா? நடைமுறையில் இருக்கிறது. அந்தப் புத்தியைப் பயன்படுத்தவேண்டுமே தவிர, வேறொன்றுமில்லை. அஸ்திவாரங்கள் தயாராக இருக்கின்றன – அதைப் பயன்படுத்தி இருக்கிறேனே தவிர, நான் அதை சாதித்தேன், இதை சாதித்தேன் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஒரு சிறிய செய்தி – ‘‘பெரியார் மேடை” என்ற தலைப்பில், நான் நாள்தோறும் உரையாற்றவேண்டும் என்று நம்முடைய பிரின்சு என்னாரெசு பெரியார் போன்ற தோழர்கள் வேண்டுகோள் விடுத்தனர். நாள்தோறும் 8 நிமிடம் சில முக்கிய தகவல்கள்குறித்து உரையாற்றி வருகிறேன்.
ஏனென்றால், நிறைய செய்திகளை நாம் பதிவு செய்யவேண்டும். அப்படி சொல்கின்ற நேரத்தில், ஒரு செய்தி- அய்யா அவர்களுடைய சிந்தனை என்பது மிகவும் வித்தியாசமானது.
பெரியார் தந்த புத்தி என்பது இருக்கிறதே, அதற்குப் பெரிய விளக்கம் இருக்கிறது.
இன்னொருவரிடமிருந்து இரவல் வாங்குகிறோம் என்று அர்த்தமல்ல அதற்கு. அதுதான் பகுத்தறிவினுடைய முழுவடிவம்.

நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்!
‘‘நான் ஒரு பூரண பகுத்தறிவுவாதி” என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
எனக்கென்று வேறு எந்தப் பெருமையும் கிடை யாது. ஒரே ஒரு பெருமைதான் – ‘‘பெரியாரின் வாழ்நாள் மாணவன் நான்” என்பதுதான். ‘‘கடைசிவரை பெரியாரை வாசித்துக் கொண்டிருந்தவன் – சுவாசித்துக் கொண்டிருந்தவன்” அப்படித்தான் வரவேண்டும் செய்தி.
அதற்கு என்ன காரணம் என்றால், அதுதான் நம்மைக் காப்பாற்றும். நம்மை என்று சொல்லும் பொழுது, அது ஒரு குறுகிய வட்டம் அல்ல. நம்மை என்றால், மனித இனத்தை. நமக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது.
மானுடப் பற்று – உலகப் பார்வை –
‘‘பெரியாரை உலகமயமாக்குவோம் –
உலகத்தை பெரியார் மயமாக்குவோம்” என்று நாம் சொல்லுகின்றபொழுது, அந்தப் பார்வை இருக் கிறதே, அது மனித குலத்திற்கு.

ஆரியர் – திராவிடர் என்பது
ரத்தப் பரிசோதனை அல்ல!
இன்றைக்கு இங்கே ஆரிய – திராவிடப் பிரச்சினை.
அதேபோன்று, திராவிடம் என்பது இருக்கிறதே, அதற்குக் குறுகிய மனப்பான்மை கிடையாது. ரத்தப்பரிசோதனை அல்ல என்று அய்யா சொல்லியிருக்கிறார்.
ஆரியமும் – திராவிடமும் கலந்து போயிற்று – இப்பொழுது போய் ஆரியம், திராவிடம் என்று சொல் கிறீர்களே என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.
பண்பாடு என்பதுதான் மிகவும் முக்கியம். அந்தப் பண்பாட்டு அடிப்படையில்தான் அனைத்தும் இருக்கவேண்டும்.
2024 இல் நடைபெறவிருக்கின்ற போராட்டம் என்ன?
பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே, அலறக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்களே, ஏன்?
அதனுடைய அடிப்படை என்ன?
தேர்தலை, தேர்தலாக நாம் பார்க்கவில்லை. அரசியல் கட்சிகள், தேர்தலை, தேர்தலாகப் பார்க்கலாம். ஆனால், நம்மைப் போன்ற லட்சியப் போராளிகள், நம்மைப் போன்ற கொள்கைப் போராளிகளுக்கு – இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை.
மனிதம் இருக்கிறது – சமத்துவம் இருக்கிறது – சமூகநீதி இருக்கிறது – சம உரிமை இருக்கிறது – சம வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், ஆண் – பெண் என்ற பேதம் இருக்கக் கூடாது.
இன்னுங்கேட்டால், பார்ப்பனப் பெண்கள் என்றால், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதோ, வேற்றுமைப்படுத்துவதோ, கேலி செய்வதோ, கிண்டல் செய்வதோ கூடாது. எந்தப் பெண்ணாக இருந்தாலும். ஏனென்றால், அவர்களும் ‘‘நமோ சூத்திரர்கள்” என்று அடக்கி வைக்கப்பட்டவர்கள்.
ஆகவேதான், சரி பகுதி, சம உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்கு நல்ல உதாரணத்தைச் சொன்னார் –
இரண்டு கைகளுக்கும் சம பலம் வேண்டாமா? என்று எளிய உதாரணத்தைச் சொன்னார்.
இரண்டு கால்களும் இயங்கவேண்டும் அல் லவா! ஒரு பக்கம் இயங்கி, இன்னொரு பக்கம் இயங்கவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
பக்கவாதத்தை எதிர்ப்பதற்கு நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். உடனே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மருத்துவத்தைப்பற்றி சொல்லுகிறோம்.
ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் பக்கவாதம் இருக்கிறதே – ஒவ்வொரு பெண்ணையும், பக்கவாதத் தோடுதானே நாம் நடத்துகின்றோம்.
இதைத்தானே பெரியார் கண்டித்தார். பெரியார் தந்த புத்தி என்பது இதுதானே!

நடக்கவிருக்கும் தேர்தல்
எந்த அடிப்படையில்?
ஆண் – பெண் ஆகிய இரண்டு பேருக்கும் சம வாய்ப்பு என்று வைத்துக்கொண்டால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான சமூகம் -இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதை நன்றாக நீங்கள் எண் ணிப் பார்க்கவேண்டும். அந்தப் பணியைத்தான் இப்பொழுது நாம் செய்கின்றோம்.
தேர்தலைப் பொறுத்தவரையில், ஹிந்துத்துவா என்ற ஸநாதன பழைமைவாதம் – ஜாதி – வருண தர்மத்தைச் சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சாமர்த்தியமாகப் பேசுகிறார்கள் – ஜாதி வேறுபாடுகள் கூடாது – ஜாதி வித்தியாசம் கூடாது- தீண்டாமை கூடாது – ஆனால், ஜாதி இருக்கவேண்டும்; வருணம் இருக்கவேண்டும் என்று.
அப்படியென்றால் என்ன அர்த்தம்?
மலம் இருக்கவேண்டும்; ஆனால், நாற்றம் அடிக் காமல் இருக்கவேண்டும் என்றால், என்ன அர்த்தம்?
இதை நான் சொல்வதற்காக என்மீது வழக்குப் போட்டாலும் நல்லதுதான் – இன்னொருமுறை நீதி மன்றத்திற்குப் போகலாம்.
பெரியார் சொன்ன உதாரணம்தான் இது. எனக்குப் பெரியார் தந்த புத்திதான். அதை நான் வெளிப்படையாக சொல்கிறேனே!
‘‘ஹிந்து மதத்தைக் குறை சொல்கிறாயே, நீ ஒரு மதத்தை சொல்லவேண்டாமா?” என்று பெரியாரைப் பார்த்துக் கேட்டார்கள்.
‘‘ஏண்டா, ஓரிடத்தில் மலம் இருக்கிறது, அதைத் தூக்கிப் போடுங்கள் என்று சொன்னால், அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பாய்?” என்று கேட்டார் தந்தை பெரியார்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் என்பது ஹிந்துத்துவ இந்தியாவிற்கும் – இந்தியா கூட்டணிக்கும் ஒரு லட்சியப் போராக நடக்குமே தவிர, அது வெறும் பதவிக்காக இல்லை. இந்தக் கட்சிக்கு எத்தனை இடம்? அந்தக் கட்சிக்கு எத்தனை இடம்? என்றெல்லாம் பாகுபாடுகள் வரக்கூடாது. அப்படி வந்தால், நாம் ஏமாந்துவிடுவோம். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
இந்த இயக்கம், இந்தக் கொள்கை அழிக்கப் படுமானால், இங்கே மட்டும் இருட்டு அல்ல; உலகம் முழுவதும் இருட்டாகிவிடும்.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் ஒரு நாள் மின்சாரம் இல்லை என்றபொழுது எவ்வளவு அவதிப்பட்டோம் நாமெல்லாம்?
மின்சாரம் என்ன முப்பத்து முக்கோடி தேவர்கள் கண்டுபிடித்ததா? அது சுதந்திர அறிவு இல்லையா? சுதந்திர விஞ்ஞானம் அல்லவா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
ஹிந்துத்துவா இந்தியாவிற்கும் – திராவிட இந்தி யாவிற்கும்தான் போட்டி. அதை முதலில் மிக அழகாக எடுத்துச் சொன்ன பெருமை தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.

யார் வரக்கூடாது என்பதுதான்
முக்கியம்!
ஒரே ஒரு கொள்கையைத்தான் இந்தியா கூட் டணியினர் பின்பற்றவேண்டும். அதைப்பின்பற் றினால், நிச்சயமாக வெற்றி தானாக வந்து சேரும்.
பெரியாருடைய புத்திதான்- தந்தை பெரியார் சொன்ன கருத்துதான் – – நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சொன்னார்.
அது என்னவென்றால், ‘‘யார் வரவேண்டும் என்பது முக்கியல்ல; யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம்!” என்பதையே முன்னிலைப்படுத்த வேண்டும்.
நமக்கு நோய் வரக்கூடாது – மற்ற மற்ற தொல் லைகள் வரக்கூடாது என்றுதானே நினைப்போம். ஆகவே, வரக்கூடாதவர்களைத் தடுப்பது எப்படி? என்கிற சிந்தனையோடு இந்தப் பிரச்சினையை அணுகினால், சரியாகிவிடும்.
இதில், தன்னலம் – சுயநலம், கவுரவம் – மானம், அவமானம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
மற்றவர்கள் எல்லாம் நம்மை கேலி பேசுகிறார்களே, நம்மை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுகிறார் களே என்று நினைக்கக்கூடாது.
என்னுடைய வாழ்விணையரைப் பொறுத்த வரையில், எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில், நான் நன்றியோடு பாராட்டவேண்டிய விஷயம் என்னவென்றால், எனக்கு வந்த கடிதங்களில் சிலவற்றை ‘‘‘பாராட்டுக் கடிதம்’ வந்திருக்கிறது பாருங்கள்” என்று அவர்களிடம் காட்டுவேன்.
படிக்க முடியாத ஆபாசமான சொற்கள் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும். இப்பொழுதுகூட அதுபோன்ற கடிதங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்டு கேட்டு, என் வாழ் விணையருக்கும், என் குடும்பத்தினருக்கும் அதை சகித்துக் கொள்கின்ற பக்குவம் வந்துவிட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி வரவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

பாராட்டைக் கேட்பதுதான்
ஒரு தண்டனை!
பாராட்டை இவ்வளவு நேரம் கேட்டதுதான் தண்டனை என்று நான் கருதுகிறேன். தலைகுனிந்து இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன். அதேநேரத்தில், எதிர்ப்பு வந்திருந்தால், இவ்வளவு நேரம் தலை குனிந்துகொண்டா அமர்ந்திருப்போம்? பெரியார் என்கிற பேராயுதம் அதனுடைய வேலையை செய்யும் அல்லவா!
ஒரே ஒரு செய்தியை சொல்லுகிறேன். பெரியார் தன்னுடைய கருத்துக்காக திருக்குறளைப் பயன் படுத்தக் கூடியவர்.

திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார், ஆகவே நான் சொல்லுகிறேன் என்று எடுத்துச் சொல்லுபவர் அல்ல தந்தை பெரியார் அவர்கள். அவர் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர்!
எனக்கும், என்னுடைய வாழ்விணையருக்கும் பிரச்சினை ஏற்படும்பொழுது அவர் சொல்வார், ‘‘நீங்கள் கட்சியில் சேர்ந்தவர்; நான் கட்சியிலேயே பிறந்தவள்; அதனால், உங்களைவிட நான் ஒருபடி மேலேதான்” என்பார்.
அதைக் கேட்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அதேநேரத்தில், கொள்கையில், யார் அதிகமாக இருக்கிறோம் என்பதில்தான் நான் பெற்ற பேறு. அவர்களுக்கு எவ்வளவு வசதி? அவர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? என்பது முக்கிய மல்ல. எனக்குக் கொள்கைச் சொத்துதான் முக்கியம். மற்றவை எல்லாம் சாதாரணம்.

நெருக்கடி காலத்தில் எங்கள் வீட்டார் செய்த
ஒரு சாதனை!
நெருக்கடி காலத்தில், எங்கள் வீட்டின்பக்கம் யாரும் திரும்பிப் பார்க்காத காலம்; பேசுவதற்கே பயப்பட்ட காலம். தனிமைப்படுத்தப்பட்ட நேரம். அந்த காலகட்டத்தில், எங்கள் பிள்ளைகள் சிறுபிள்ளைகளாக இருந்த நேரத்தில், பெரியார் பிறந்த நாள் விழா – அந்த விழாவை நடத்தக் கூடாது – பெரியார் படம் வைக்கக்கூடாது – பெரியார் திடலேயேகூட ‘சீல்’ வைத்துவிட்டார்கள். நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அனுமதி கிடையாது என்று உத்தரவு போட்டிருந்தார்கள்.
நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, எந்த சிறைச்சாலையில் இருக்கி றோம் என்று யாருக்கும் தெரியாது. எங்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
எனது வாழ்விணையர், செப்டம்பர் 16ஆம் தேதி இரவு, பெரியார் சிலைக்கென்று ரகசியமாக மாலை வாங்கி வரச் சொல்லி, கல்லூரி படிப்பைப் படித்துக் கொண்டிருந்த எங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய், எங்களுடைய ஓட்டுநர் மாரியப்பனை (திருச்சியில் இருக்கிறார் இப்பொழுது) கார் ஓட்டச் சொல்லி, இரவு 2 மணிக்குமேல், தந்தை பெரியார் சிலைக்கு மாலை போட்டுவிட்டு வந்துவிட்டார்.
இவ்வளவு கட்டுப்பாட்டையும் மீறி, எப்படி பெரியார் சிலைக்கு மாலை போடப்பட்டது என்று குழம்பினர்.
யாரால் நடந்தது? என்று யாருக்கும் தெரியாது.
இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இந்த வாய்ப்பைத் தவிர வேறு என்ன வேண்டும்? அவர்கள் பங்குக்கு அவர் செய்தார்.
எங்கள் வீட்டில் பெரியார் படம், கலைஞர் படம் இருக்கும். உறவினர்கள் சிலர், கலைஞர் படத்தை எடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், என்னுடைய வாழ்விணையர், ‘‘கொள் கைக்காக அவர் சிறைக்குச் சென்றிருக்கிறார்; எதற்காக அவர் படத்தை எடுக்கவேண்டும்; எடுக்க முடியாது” என்று சொன்னவர்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இந்தக் கொள்கை உணர்வுதான் பெரியார் தந்த புத்தி.
ஆகவேதான், மானம் – அவமானம் பார்க்கக் கூடாது – பயப்படக்கூடாது என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் அனைத்துக்கும் வழிகாட்டுகிறார் பாருங்கள்.

திருக்குறளும் – பெரியாரும்!
இரண்டு குறள்களை சொல்கிறேன். இதைத் தோழர்கள் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.
பெரியார் களஞ்சியத்தில் – திருக்குறளில் இருக் கின்ற ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
‘‘பொதுநலக்காரனையும், சுயநலக்காரனையும் பாகுபடுத்தி, அவர், அவரவர்க்குப் போதிக்கும் நீதி உய்த்துணர்ந்து போற்றத்தக்கதாகும்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் (குறள் 484)
இது ஒரு குறள், என்றும் காலம் பார்த்து செய்ய வேண்டும்; என்றும் காலம் அறிந்து நடப்பதைச் சிறப்பித்தும் கூறுகிறார்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் 969)
இன்னொரு குறள். என்றும் மானம் கருதி வாழவேண்டியதை சிறப்பித்தும் பேசுகிறார்!
இவை யாருக்குப் போதனை?
இதுவரையில் எத்தனையோ பேர் குறளுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள்; விளக்கம் எழுதி யிருக்கிறார்கள்.
ஆனால், பெரியாருடைய சுய சிந்தனையைப் பாருங்கள். இதுவரையில் யாரும் இந்த செய்தியை கேட்டிருக்கமாட்டீர்கள்.
மேற்சொன்ன இரண்டு குறளையும் பயன் படுத்திவிட்டு,
‘‘மானம் கருதி வாழவேண்டியதை சிறப்பித்து, சுயநலம் கருதுவோருக்கு நற்போதனை செய்யும் வள்ளுவர்” என்று சொன்னார்.
திருக்குறளில் நேரம் கருதி, காலம் கருதி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருப்பது முரண் பாடா? என்று கேட்டால், அது முரண்பாடு இல்லை என்று தந்தை பெரியார் சொல்கிறார்.
திருவள்ளுவர் யாருக்குச் சொல்கிறார்?
சுயநலம் கருதுவோருக்கு நற்போதனை செய்யும் வள்ளுவர், அடுத்ததாக,
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.” (குறள் 1028)
என்று பொதுநலக்காரனுக்குப் போதிக்கிறார்.
இனமானமா? தன்மானமா? என்று வருகிற பொழுது, தோற்கவேண்டியது தன்மானம்; வெற்றி பெறவேண்டியது இனமானம்; அதுபோல, இரண்டு வகையாகப் பிரிக்கிறார்.
சுயநலக்காரனுக்கு நேரம் வேண்டும்; அவன் முதலாளியாகவேண்டும்; பெரிய ஆளாக வேண்டும்; மற்றவர்களிடம் பரிசு வாங்கவேண்டியவனாக ஆகவேண்டும். அவனுக்கு அது சரி.
ஆனால், பொதுநலக்காரன் மானம் பார்க்கக் கூடாது. அவனுக்குக் கெட்ட பெயர்தான் வரும்; இழிபெயர்தான் வரும். அவனுக்கு எதிர்ப்புதான் வரும். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது.
பெரியார் சொல்கிறார்,
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்’’ என்று பொதுநலக் காரனுக்குப் போதிக்கிறார்.
‘‘காலம் பார்த்திராதே, சோம்பல் அடையாதே! அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், உனது தொண்டு பயனற்று போகும். பொதுநலம் கெட்டுவிடும்” என்கிறார்.
உனது குடிக்காக, மற்ற மக்களுக்காக என்பதை உணர்ந்து, உன் மானம் எங்கே போய்விடுமோ என்று கவலைப்படாமல் தொண்டாற்று.
‘‘இடும்பைக் கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு” (குறள் 1029)
என்று ‘‘பொதுநலத் தொண்டால், தனது குடியை, தன் இன மக்களுக்கு ஏற்பட்ட குற்றம் மறைப்பால், அதாவது இழிவு, குறைபாடு, தடை ஆகிய காரியங் களை ஒழிக்கப் பாடுபடுவனுடைய வாழ்வு, உடல் துன்பத்தை, தொல்லையை அனுபவிக்கவே ஏற்பட் டது” என்று கொள்ளவேண்டும்.
பொதுநலத் தொண்டு பல துன்பங்களைத் தன்னி டத்தே கொண்டது என்பதை உணர்ந்தே வள்ளுவர் அப்படி கூறியிருக்கிறார்.

பொதுநலக்காரர்களும் – சுயநலக்காரர்களும்!
நாட்டில் எப்போதும் சுயநலக்காரர்களும், பொறா மைக்காரர்களும், மற்ற மக்களுக்குத் துன்பம், கேடு, மோசம் விளைவிப்பதின்மூலம் வாழ்கின்றவர்களும் மலிந்திருப்பார்கள்.
சுயநலக்காரர்கள், பொதுநலத் தொண்டனுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டுதான் இருப் பார்கள்.
பொறாமைக்காரர்கள், பொதுநலத் தொண்டரைப் பற்றி இழிவாகப் பேசி, அவனை அவமானப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
பொதுநலத் தொண்டனுக்கு இதெல்லாம் சகஜம் என்பதை முன்னமையே உணர்ந்திருந்ததினால்தான், பொதுநலத் தொண்டனுக்கு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். மனதை சமா தானப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
எனவே, வள்ளுவர் மான – அவமானத்தைப்பற்றிக் கவலைப்படதே, துன்பத்தை அடையவே பிறந்தவன் நீ என்று நினைத்துக் கொள் என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
மக்களுக்குப் புரியும்படி பெரியார் அவர்கள் விளக்கம் சொல்கிறார். பெரியார் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

பெரியார் சொன்ன உதாரணம்!
‘‘என்னை பட்டுக்கோட்டையில் உதைக்கிறார்கள் என்றால், அவர்கள் முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு, பாளையங்கோட்டைக்குச் சென்று சொல்” என்றார்.
பெரியாருடைய இயக்கம் எப்படி வளர்ந்தது?
பெரியாருடைய சிந்தனை எப்படி வளர்ந் திருக்கிறது?
ஏன் பெரியார் தோற்கமாட்டார்?
பெரியாரியம் வெற்றி பெற்றே தீரும் என்பதற்கு அடையாளம் இந்தத் தத்துவங்கள்தான்!
பட்டுக்கோட்டையில் உதைத்தார்கள் என்றால், அவர்கள் முட்டாள்கள் என்று கருதிக்கொண்டு, பாளையங்கோட்டைக்குச் சென்று மேலும் தீவிரமாகத் தொண்டாற்றவேண்டும்.
அங்கும் அடி என்றால், அவர்கள் அதைவிட முட்டாள்கள் என்று கருதிக்கொண்டு, அருப்புக் கோட்டைக்குச் செல்லவேண்டியதுதான். அய்யோ, அடித்துவிட்டார்களே, மானம் போய்விட்டதே என்று வருத்தப்பட்டால், தொண்டுக்கே முடிவு ஏற்பட்டுவிடும். சுயநலக்காரர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால், சுயநலக்காரர்களோ, மானம் கருதித்தான் ஆகவேண்டும். சுயநலக்காரனுக்கு மானம் – அவமானத்தைப்பற்றி கவலை இல்லை யென்றால், அப்புறம் அவன் எதையும் செய்யத் துணிந்துவிடுவான்.
ஆகவே, முக்கியமான விஷயத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னார்.

என்னுடைய பிறந்த நாள் செய்தி!
இதுதான் தோழர்களே, என்னுடைய பிறந்த நாள் செய்தி!
பெரியார் தந்த புத்தி!
அந்தப் புத்தியை நாம் பின்பற்றுவோம்!
எதிரிகளை முறியடிப்போம்!
நாட்டையும், சமூகத்தையும், உலகத்தையும் காப்பாற்றுவோம்!
அத்துணை பேருக்கும் பாராட்டுகள்!
ஏற்பாடு செய்த தோழர்களுக்கு, மகளிருக்கு என்னுடைய உளப்பூர்வமான நன்றி!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment