சென்னை,டிச.12- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91 ஆம் பிறந்த நாள் விழா கடந்த 2.12.2023 அன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, தொடர் மழை, புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொடர் மழை, புயல் ஓய்ந்த பின்னர் நேற்று (11.12.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் நடைபெற்றது.
10 வயதில் தொடங்கி தந்தை பெரியார் கொள்கை எனும் இலட்சிய முழக்கமிட்டு தமிழினம் தலைநிமிர ஒரே தலைவர், ஒரே இயக்கம் என ஏற்றுக்கொண்ட கொள்கையை செயலாற்றுவதையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு தொண்டாற்றி வருவதுடன் அதன் வெற்றிகளைக் கண்ணாரக் காணுகின்ற ஒப்பற்ற தலைவராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் அரசியல், சமுதாயக் கோட்பாடு களுக்கு சமத்துவ, சமூகநீதி பாட்டையில் வழி காட்டியாக இருந்து வழிநடத்தி வருகிறார்.
அரசியல் நிலைப்பாடுகள், சமத்துவ நோக் கில் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள், அறிவியல், மருத்துவ அறிவியல், பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகள் நாளும் அவர் எழுத்துகளில் பளிச்சிடுகின்றன. அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள், புத்தகங்கள் வெளியீடு, இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் காலத் துக்கேற்ப ஊடகங்களில் பேட்டிகள், சமூக ஊடகங்களில் பதிவுகள், கரோனா கொடுநோய்த் தொற்று பரவல் தடுப்பு காலத்திலும் காணொலி வாயிலாக தொடர் பொழிவுகள், தொண்டர் களுடன் சந்திப்புகள், அளவளாவுதல் என ஓய்வில்லாத தொடர் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வருபவர் தமிழர் தலைவர்.
கட்சி பேதமில்லாமல் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், கொள்கை எதிரிகளும் போற் றுகின்ற அறிவாற்றல், தொண்டறப்பணிகளில் ஓய்வின்றி பணியாற்றி வருபவர் ஆசிரியர் ஆவார்.
தேனீக்கள்கூட ஓய்வெடுக்கலாம். கடிகார முள்கூட ஓட மறக்கலாம். தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் ஆங்கே முதல் குரலாய் சமூக நீதியைக் கட்டிக்காக்கின்ற தலைவராக ஒலிப் பவர் தமிழர் தலைவர் ஆசிரியர். நீதிமன்றத் துக்கே நீதி சொல்லும் சமத்துவ நோக்கும் சமூக நீதியை சாயாத துணிந்த சட்ட நியாய அறிஞர் ஆசிரியர்.
அவருக்குப் பாராட்டு விழாக்கள் கசப்பு மருந்து. எதிர்ப்பு, போராட்டம், சிறைவாசம் கட்டிக்கரும்பு. அத்துணையும் இன நலன், பாகுபாடற்ற சமுதாயம் காண விரும்பிய தந்தை பெரியார் வழி செயல்பாடுகளுக்காகவே.
எள் முனையளவு பயன் என்றாலும் இனத்துக்கு என்றால் வாரி அணைத்திடுவார்.
அதே எள் முனையளவு தீங்கு என்றால் ஆணவ, அதிகாரத்துடன் அடக்குமுறைகள் நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி காண்பவர் ஆசிரியர்.
பெரியார் பன்னாட்டமைப்பு மூலம் உலகின் பல்வேறு பெருநகரங்களில் மாநாடுகள் நடத்தப் படுகின்றன. பெரியார் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தலைவர் தந்தை பெரியார் கொள்கைகள் பன்மொழிகளில் புத்த கங்களாக வெளியாகியவண்ணம் உள்ளன.
தொடர் மழை, புயல் எச்சரிக்கை காரணமாக நிகழ்ச்சிகள் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டன. ஆனாலும், தமிழர் தலைவர் பிறந்த நாளில் சென்னை மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் கழகப்பொறுப்பாளர்கள் பெரியார் திடலில் குவிந்தனர். பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பலரும் ஆசிரி யரை நேரில் சந்திக்க ஆவலுடன் பெரியார் திடலுக்கு வருகைதந்து ஆசிரியருக்கு 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
பயனாடைகள் அணிவித்தும், புத்தகங்கள், நன்கொடைகள் சந்தாக்கள் வழங்கியும் பிறந்த நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அன்று மாலை காணொலி வழியாக கூட்டமும் நடை பெற்றது.
எனினும் தோழர்களின் வேண்டுகோளுக் கிணங்க “அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (11.12.2023) மாலை 6 மணிக்கு கழக துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன் பக்கனி தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்றார்.
திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தொடக்கவுரை யாற்றினார்.
கருத்தரங்கம்
பேராசிரியர் அரங்க மல்லிகா ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்’ ஆசிரியர் எனும் தலைப்பிலும், எழுத்தாளர் ஓவியா (புதியகுரல்) ‘பெண்ணுரிமைப் போராளி’ ஆசிரியர் எனும் தலைப்பிலும், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் தலைப்பிலும் கருத்தரங்கத்தில் உணர்ச்சி பூர்வமாக தமிழர தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தைபெரியார் வழியில் கட்டுக் கோப்புடன் இயக்கத்தை வழி நடத்திச் செல் வதையும், கொள்கை வழியில் வீறுநடைபோட்டு வருவதையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை ஆற்றினார்.
மலர் வெளியீடு
மகளிர் அணி சார்பில் தயாரிக்கப்பட்ட “பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரை” சி.வெற்றிச் செல்வி வெளியிட, மருத்துவர் ச.மீனாம்பாள், பசும்பொன், கலைச்செல்வி அமர்சிங், வழக்குரைஞர் வீரமர்த்தினி, வி.வளர்மதி, பூவை செல்வி, விஜய லட்சுமி, க.சுமதி, ம.யுவராணி, மு.ராணி, த.மரகதமணி, தமிழரசி, த.சுகந்தி, உத்ரா பழனிச்சாமி உள்ளிட்ட சென்னை மண்டல மகளிரணி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நூல்கள் வெளியீடு
பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் (நன்கொடை ரூ.200), விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் (நன்கொடை ரூ.150), வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 17 (ரூ.300) ஆகிய ரூ.650 மதிப்பிலான 3 நூல்களும் ரூ.500க்கு வழங்கப்பட்டது. பார்வையாளர்களாகத் திரண்டிருந்த சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், வெளி மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள், கழக ஆர்வ லர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்து, தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஊமை.ஜெயராமன், குடியாத்தம் சடகோபன், சைதை மு.ந.மதியாகன், சி.அமர்சிங், புதுச்சேரி சிவ.வீரமணி, அன்பரசன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி, செல்வ.மீனாட்சி சுந்தரம், தென்.மாறன், தா.இளம்பரிதி, விழுப்புரம் துரை.திருநாவுக்கரசு, சுடரொளி என்.சுந் தரம், பெருமாள், மு.ரா.மாணிக்கம், ஜனார்த்தனன், தங்க.தனலட்சுமி, கவிதா, செங்கை.சுந்தரம் உள்பட பலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பல்வேறு மாவட்டங்களி லிருந்து திரண்ட கழகப்பொறுப்பாளர்கள், கழக ஆர்வலர்கள் அணி அணியாக சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், விடுதலை, கழக ஏடுகளுக்கான சந்தாக்கள், நன்கொடைகளை வழங்கியும் பிறந்த நாள் வாழ்த் துகளைத் தெரிவித்தனர்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மேடை யேறிய பார்வை மாற்றுத்திறனாளியான பெரியார் பெருந் தொண்டருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
விழாவில் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கழகத் தலைவருக்கும், மோகனா அம்மையாருக்கும் பலத்த கரவொலிகளுக்கிடையே பயனாடை அணிவிக் கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் அரங்க.மல்லிகா, எழுத்தாளர் ஓவியா, வழக்குரைஞர் அ.அருள் மொழி ஆகியோருக்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
மலரை வெளியிட்ட சி.வெற்றி செல்வி, மலரைப் பெற்றுக் கொண்ட மருத்துவர் மீனாம்பாள், பெரியார் செல்வி, பசும்பொன், மு.பவானி உள்ளிட்ட கழக மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
விழா முடிவில் திராவிட மகளிர் பாசறை தென் சென்னை மாவட்டத் தலைவர் மு.பவானி நன்றி கூறினார்.
பேராசிரியர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி இணைப்புரை வழங்கினார்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், கிராமப்பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்ப ழகன், துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, தொழி லாளரணி மாநில செயலாளர் திருச்சி சேகர், தலைமைக்கழக அமைப்பாளர்கள் ஈரோடு த.சண்முகம், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், காஞ்சி கதிரவன், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செய லாளர்கள் உள்பட கழகத்தின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment