மழித்தறியா
மலர்முகத்தாடி!
மனவோட்டமோ
மக்களைத் தேடி!
அவர் பேச மாட்டார்!
கர்ச்சிப்பார்!
கடல் அலைகளின்
காதுகளையும்
செவிடாக்கும்!
கால் வைக்கும்
பயணமோ
பல பூமிப் பந்துகளை
உதைத்துத் தள்ளும்!
சிரிப்போ
சிலிர்க்க வைக்கும்
மலர்த் தோட்டத்தின்
சிகப்பு நட்சத்திரம்
சீர்திருத்தம்
அவருக்குப் பிடிக்காத
சில்லறைத்தனம்!
சீறிப் பாயும்
புயல் போன்ற
புரட்சியாளர்!
புரைப் புண்ணுக்குப்
புனுகுப் பூச்சல்ல!
அவர் கரத்திலோ
அறுவைச் சிகிச்சைக்
கத்தி!
புத்தகப் புழு
அல்ல!
புதிய சிந்தனைகளின்
பூந்தோட்டம்!
சுயசிந்தனையின்
சூரிய ஊற்று!
ஆண்டு அய்ம்பது
அவர் மறைந்து!
ஆனாலும்
அதிருது அதிருது
ஆரியம்
அவர் பெயர் கேட்டு!
சிலையைக் கண்டும்
சில்லிட்டுப்
போகிறார்கள்!
பெரியார் என்ற
பெயரைக்
கேட்டதுமே
பிரதமரும்
பதறுகிறார்
நாடாளுமன்றமே
நாக்குளறுகிறது!
உடல் மறையும்!
உதிர்த்துச் சென்ற
உயர் எண்ணங்களோ
ஒரு நாளும்
உதிர்வதில்லை!
உள்ளங்களை
ஆட்சி செய்பவர்
‘உலகளந்த
பெருமாள்’ என்பது
சுத்தப் பொய்!
‘உலகளந்த
பெரியார்’ என்பதே
மெய்! மெய்!!
பலன் பெற்ற
மக்களின்
வேர்களில்
பழுத்துத்
தொங்கும் பலா!
எந்தப் பற்றுமல்ல –
மானுடப் பற்று
மட்டுமே
மனதில் குடிகொண்ட
மண்ணை மணந்த
மணாளர்!
பெரியாரைப்
போற்றுதும்! போற்றுதும்!
No comments:
Post a Comment