இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5060 கோடி கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5060 கோடி கோரிக்கை

தமிழ்நாட்டில் 47 ஆண்டுகளுக்குப்பின் வீசிய புயல் மற்றும் கடும் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தண்ணீரில் தெப்பம் போல் மிதக்கின்றன.
தமிழ்நாடு அரசு முதலமைச்சர் முதல் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிவாரணப் பணிகளை கால நேரம் பாராமல் மேற்கொள்கின்றனர் என்பது கண்ணுள்ள எவருக்குமே தெரிந்த ஒன்றே!
என்னதான் திட்டமிட்டுப் பாடுபட்டாலும் இயற்கையின் சீற்றம் என்பதை முழு அளவில் எதிர் கொள்வது என்பது எளிதான காரியமன்று.
தன்னார்வ நிறுவனங்கள் அரசோடு கைகோர்க்க முன்வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இலயோலா கல்லூரி மற்றும் பள்ளிகள் வாசல்களைத் திறந்து விட்டுத் தொண்டறப் பணிகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கதாகும்.
திராவிடர் கழகத்தினரைப் பொறுத்த வரையில் தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை என்பதுபோல், புயலும் மழையும் நின்றாலும் மழை வெள்ளம் முற்றாக வற்றிப் போய்விடவில்லை.
வீட்டுக்கு வெளியில் வெள்ளம் இருக்கும்போது வெளியே வருவது என்பது கடினமான ஒன்றே! அத்தகையவர்களுக்கு வாய்ப்பு வசதி உள்ளவர்கள் தேவையான உணவுப் பொட்டலங்களையும், பிஸ்கட் முதலியவற்றையும், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கிட முன் வர வேண்டும்.
மருத்துவமனைகளிலும்கூட தண்ணீர் புகுந்தது என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். நோயாளிகளையும் பைஃபர் படகுகள் மூலம் வெளியே கொண்டு வந்து, வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்ப்பது தலைசிறந்த தொண்டறப் பணியாகும்.
போர்க்கால அடிப்படையில் அதிவேகத்தில் பணிகள் நடைபெறுவதைக் கண்டும் இதிலும் அரசியல் செய்வது என்பது மனிதநேயமற்ற செயலாகும்.
சென்னை மாநகர மேயர் எங்கே? உதயநிதி எங்கே? என்று சமூகவலைதளங்களில் பதிவிடுவதும் – யூடியூப்களில் வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பதிவிடுவதும் “எருதின் புண்ணின் வலி காக்கைக்குத் தெரியாது” என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.
சென்னை மாநகர மேயர் சகோதரி ஆர்.பிரியா வெள்ளக்காட்டுக் குகிடையே பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான உதவிக்கரம் நீட்டுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

குறைகூறும் ஆசாமிகளுக்கு அறிவார்ந்த முறையில் பதிலடி கொடுத்துள்ளார் மேயர் ஆர்.பிரியா. ‘அரசியல் செய்யாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள் – அரசு நிறைவேற்றித் தரும்’ – என்று உச்சக்கட்ட நாகரிக மொழியில் கருத்துக் கூறி யிருக்கிறார்.
அதே போல அமைச்சர் உதயநிதி அவர்கள் களத்தில் நிற்பதைப் பார்த்தும், பைத்தியக்காரத்தனமாக விமர்சிப்பது வெட்கக் கேடானது!
இன்றைக்கு ஏகடியம் பேசும் அதிமுக தலைவர்கள் 2015இல் வெள்ளத்தின்போது என்ன நடந்தது என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவை மீறி நீர் வந்தபோது, ஏரியைத் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் அனுமதி பெறத் “தவம்” கிடந்தது மறந்து விட்டதா?
காலந் தாழ்ந்த நடவடிக்கையால் எத்தனைக் கிராமங்கள் மூழ்கின? எத்தனை உயிர்கள் பலியாகின?
இது மனிதத் தவறால் ஏற்பட்ட பேரிடர் என்று சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிட்டுள்ளதே!
“வைத்தியரே, வைத்தியரே! முதலில் உங்கள் உடல் நோயைப் பாருங்கள்!” என்ற நடைமுறை மொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
இழவு வீட்டிலும் அரசியல் என்பது ஆரோக்கியமானது அல்ல.
மற்றொரு முக்கிய விடயம் – தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடருக்கு – பேரிடர் மேலாண்மைக் குழு கூட்டம் அதிமுக ஆட்சியில் அதற்கு முன் மூன்று ஆண்டுகளாக கூட்டப் படவில்லை என்பதும் கசப்பான உண்மையும் – பொறுப்பற்ற தன்மையுமேயாகும்.
இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி கேட்டு பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆதாரங்களைத் திரட்டிக் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் திமுக உறுப்பினர்கள் முறையே டி.ஆர். பாலு அவர்களும், திருச்சி என்.சிவா அவர்களும் அந்தக் கோரிக்கையை ஆதரித்துள்ளனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். இதிலும் அரசியல் பார்வையைச் செலுத்தாமல், இந்தியாவுக்கே பொதுவான பிரதமர் என்ற சிந்தனையோடு – காலங் கடத்தாமல் தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்திற்கு மதிப்பளித்து கேரிய ரூ.5060 கோடியை அனுப்பி உதவுவார் என்று எதிர்பார்க்கிறோம் – வலியுறுத்துகிறோம்.
பேரிடர் நிகழ்ந்த பகுதிகளைப் பார்வையிடும் ஒன்றிய அரசின் குழுவை வழக்கம் போல எல்லாம் முடிந்து ஆறிய பின் அனுப்பி வைக்காமல் உடனடியாக அனுப்பி வைத்து உண்மை நிலவரத்தை – ஓர்ந்து கண்ணோடாமல் – நிதியை அளிப்பதும் ஒன்றிய அரசின் அதி முக்கிய கடமையே!
ஹெலிகாப்டர் மூலம் பார்ப்பது எல்லாம் வாண வேடிக்கைகளே!
எங்கே பார்ப்போம்!

No comments:

Post a Comment