47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 5, 2023

47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம்

நமது முதலமைச்சரின் வேகமான செயல்பாடுகளால் அமைச்சர்களும் - அதிகாரிகளும் - பணியாளர்களும் ஆற்றிடும் அரும்பணி!

‘திராவிட மாடல்' ஆட்சியின் போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம் - நமது முதலமைச்சரின் வேகமான செயல்பாடுகளால் அமைச்சர்களும் - அதிகாரிகளும் - பணியாளர்களும் ஆற்றிடும்அரும்பணி -  ‘திராவிட மாடல்' ஆட்சியின் போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டை மிரட்டிய ‘மிக்ஜாம்' புயல் ஒருவழியாக இன்று (5.12.2023) அதிகாலை தமிழ்நாட்டைக் கடந்து, ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம், பாபட்லா பகுதி அருகே கரையைக் கடந்து செல்லுவதால், தமிழ்நாட்டில் பெய்த அடைமழை -  47 ஆண்டுகளுக்குமுன்பு பெய்ததுபோல, அடாது பெய்த மழையை தமிழ்நாடு அரசும், பேரிடர் மேலாண்மைத் துறையும் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறை, ஊடக செய்தி தகவல் துறை போன்ற பல துறையினரும் நன்றாக ஒருங்கிணைந்து சமாளித்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

பொதுமக்களும் பெரிதும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

முதலமைச்சரின் துரிதமான செயல்பாடுகள் - ஏற்பாடுகள்!

தமிழ்நாட்டு மின்சார வாரியத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், மின்வாரியமும் மின் தடுப்பு ஏற்படுத்தி, இம்மாதிரி நேரங்களில் வழமையாக ஏற்படும் உயிரிழப்புகள் முதலியவற்றைத் தவிர்த்து, மழை குறைந்தவுடன் மின்சாரம் மக்களுக்குக் கிடைக் கும் ஏற்பாட்டினை சிறிதும் கவனச் சிதறல் இன்றி செய்தனர்.

நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான முறையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறையினர் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுடன் அவ்வப்போது தொடர்பு நிலையில் இருந்து, செய்யவேண்டிய பணிகள், ஆங் காங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்து, ஆணை களைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார்; நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலவரங் களைக் கேட்டறிந்து, வரைமுறைப்படுத்தி மீட்புப் பணிகளை மின்னல் வேகத்தில் செய்தார். அதிகம் பாதிக்கப்படவிருந்த மாவட்டங்களுக்கு அய்.ஏ.எஸ். உயர் அதிகாரிகளைப் பொறுப்பாக்கி, உடனடியாகக் கண்காணித்து செயல்பட ஆணையிட்டுத் தொடர்ந்து தேவைப்படும் பகுதிகளுக்குக் கூடுதல் அதிகாரிகளையும் பொறுப்பாக்கி கண்காணிக்கச் செய்தார்.

இவற்றை மேற்பார்வையிட்டு துரித கதியில் விரைந்து செயலாற்றிட, உதவிட மூத்த அமைச்சர் பெருமக் களையும் அனுப்பி, செயல்பட வைத்து, எந்த முடிவுகளை எடுப்பதிலும் தாமதமின்றி செயல்பட்டு மக்களைக் காப்பாற்றும் பணிகளை வரையறை செய்தார்.

அமைச்சர்களின் - அதிகாரிகளின் அரிய பணிகள்!

சென்னை, செங்கற்பட்டு, திருவள்ளூர், தாம்பரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கடுமையான, மிகக் கனத்த மழை பெய்ததால், சென்னையே வெள்ளக்காடு ஆவதைத் தடுக்க இயலாத சூழ்நிலை; ஏராளமான பம்பு செட்டுகள், என்ஜின்கள் மற்றும் மரம் விழுந்தால் அகற்றும் கருவிகள் முதலியவற்றுடன் தயார் நிலையில் அதிகாரிகள், அமைச்சர்கள் - முதலமைச் சருக்கு உடனடித் தகவல் தந்து, களத்தில் இருந்து வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளை விரைவாகச் செய்தனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் ‘‘வெள்ளக்காடாக சென்னையின் பல பகுதிகள் ஆனதற்கு முக்கிய காரணம், கடல் நீர் உள்வாங்கி, பிறகு கடல் நீர் கரையிலிருந்து வெளியே வருவதால், உள்ளே செல்லவேண்டிய மழை வெள்ள நீர் போகாமல் உள்ளது. மழை நின்றவுடன் இந்த வெள்ளம் வடிய ஆரம்பித்துவிடும்; யாரும் கவலை கொள்ளவேண்டாம்'' என்று மக்கள் திருப்தி அடையும் விளக்கத்தைத் தந்துள்ளது பாராட்டத்தக்கது.

வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடக் கத்திலிருந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.

மிகக் குறைந்த உயிர்ச்சேதம் ஒற்றைப் படையில் ஏற்பட்டுள்ளது!

வழமையாக புயல், டெல்டா பகுதியிலும், தஞ்சை, நாகை, கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி போன்ற பகுதிகளைத் தாக்கி, விவசாயிகளையும், மீனவர்களையும் பெரும் பாதிப்புக்கும், இழப்புக்கும் உள்ளாக்கும் நிலை இம்முறை ஏற்படாது - சென்னை பக்கம் அது பயணித்து, ஆந்திர மாநிலம் சென்றுள்ளது. இயற்கையால் ஏற்பட்ட கெட்டதிலும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஆந்திரப் பகுதி மக்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே நமது பேரவா!

மக்களுக்கான ‘திராவிட மாடல்' அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, சிறுகுறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி போன்றவர்களின் கண்காணிப்பு, ஒருங் கிணைப்பு எல்லாம் மக்களைக் காப்பாற்றிட - உணவு தரும் முகாம்கள், மருத்துவமும் மற்ற வசதிகளும்  செவ்வனே அமைந்து எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பாதுகாத்தது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கான ஓர் அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு நல்லாட்சிதான்; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற முதலமைச்சரின் ஆட்சி, ‘திராவிட மாடல்' ஆட்சி என்ற ஆட்சியின் இந்தப் போர்க்கால நிவாரணப் பணிகளும், அசம்பாவிதங்கள் இல்லாமல், உயிர்ச்சேதத் தடுப்புப் பணிகளும்  சாட்சியங்களாக அணிவகுத்தன.

உண்மையில், மக்களாட்சியின் மாண்புக்கு இவை நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.12.2023



No comments:

Post a Comment