அய்ந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும் சரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சரி ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள்.
காங்கிரஸ் ஜாதியை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்துகிறது என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
இதன் மூலம் அவர்கள் எதை முன்னிறுத்துகிறார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும், சமூகநீதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் இளந் தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோரும் பேசி வருகிறார்கள்.
குறிப்பாக காங்கிரஸ் இளந் தலைவர் குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தில் இவற்றை வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்தார்.
ஒன்றிய அரசு செயலாளர்கள் 90 பேரில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் மூன்று பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்கள் அனைவரும் உயர் ஜாதியினரே என்று தக்க தரவுகளுடன் குறிப்பிட்டார்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.
பிற்படுத்தப்பட்டவர்கள் – 27.12%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 36.01%
பட்டியலினத்தவர் – 19.65%
பழங்குடியினர் – 1.68%
பொதுப் பிரிவிரன் – 15.52%
இந்தப் புள்ளி விவரங்கள் சில அடிப்படையான உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
63 விழுக்காடுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடு வெறும் 30 விழுக்காடு மட்டுமே. 17 விழுக்காடுள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 16 விழுக்காடு வழங்கப்பட்டு வருகிறது.
பீகாரில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 17.71% ஆனால் இவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
ஒட்டு மொத்தமாக 50 விழுக்காடு அளவில் மட்டும் இருந்த இடஒதுக்கீட்டின் விழுக்காடு ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு 75 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. (இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடும் அடங்கும்).
பீகார் மாநிலத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியதை எதிர்த்து, சமூகநீதிக்கு எதிரானவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் வரை சென்று முட்டி மோதிப் பார்த்தனர். அவையெல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜாதிவாரி கணக்கெடுப்பால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தோர், பழங்குடி மக்களின் இடஒதுக்கீடு உயரும் நிலை ஏற்படும் என்பதை பீகார் மாநிலம் உணர்த்தி விட்டது.
முழுச் சுளையாக கல்வி, வேலை வாய்ப்புகளை தங்களின் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு மேல் விழுங்கி ஏப்பம் விட்ட உயர் ஜாதியினர், குறிப்பாக பார்ப்பனர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் தங்களின் விகிதாசார ஆதிக்கத்தின்மீது மண் விழுந்து விடுமே என்ற அச்சத்தில்தான் கூக்குரல் போடுகின்றனர்.
பொருளாதார அடிப்படையில் உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதம்! சட்டவிரோதமாக 10 விழுக்காடு அனுபவிப்பவர்கள், சட்ட ரீதியான கல்வியிலும், சமூகத்திலும் பின் தள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் ஆத்திரத்தை, சமூக அநீதியை பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின, பழங்குடி மக்கள் எதிர்த்து பொங்கி எழ வேண்டாமா? சட்டப்படிப் போராட வேண்டாமா?
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது சட்டத்தின் நிலைப்பாடு. அதன்படி 2011ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளி யிடப்படவில்லை. அவ்வாறு வெளியிடாதது காங்கிரஸ் செய்த தவறுதான் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் கூறியிருப்பது அவரின் அறிவு நாணயத்தை வெளிப்படுத்துகிறது.
2024இல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதன் மூலம் பட்டியலின மக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பலன் பெறுவார்கள்.
சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற அரசமைப்புச் சட்டப்படியான கட்டுமானத்தைக் கட்டிக் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
2024 தேர்தலை இந்த இரண்டின் அடிப்படையில் “இண்டியா” கூட்டணி மக்களைச் சந்திக்கும்.
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மதவாதத்தை முன்னிறுத்தியே பிஜேபி தேர்தலைச் சந்திக்கும் நிலை; சாதனை என்று சொல்லுவதற்கு எந்தக் கைச் சரக்கும் பிஜேபி வசம் இல்லை.
சமூகநீதி – மதச்சார்பின்மை என்பதுதான் 2024 மக்களவைத் தேர்தலின் முடிவை நிர்ணயம் செய்யும் என்பதில் அய்யமில்லை.
இவற்றைப் பெரு மழைப் பிரச்சாரமாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கடைகோடி வாக்காளருக்கும் எட்டு வகையில் “இண்டியா” கூட்டணியின் செயல்பாடுகள் அமையட்டும் – அமைய வேண்டும் – வெற்றி உறுதி – இது கல்லின்மீது பொறிக்கப்பட்ட எழுத்துகள்!
No comments:
Post a Comment