2014 குஜராத் மாடலின் அவலங்கள் 2024இலும் தொடர வேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

2014 குஜராத் மாடலின் அவலங்கள் 2024இலும் தொடர வேண்டுமா?

featured image

பாணன்

அய்யோ என்ன நடந்தது? ஏன் இப்படி நடக்கிறது? எனது வாரிசுகள் அனைவருமே இல்லாமல் போய்விட்டார்களே என்று ஒரு முதியவர் தெற்கு குஜராத்தில் உள்ள டிங்குச்சா என்ற சிற்றூரில் அழுது புரள்கிறார். தனது மகன், மருமகள், பேரக் குழந்தைகளின் மரணத்தைப் பார்ப்பதை விட .ஒரு தந்தைக்கு வேறு என்ன பெரிய தண்டனையாக இருக்க முடியும். அவர் தொடர்ந்து வாழ்கிறாரா?” அவர் துக்கத்தில் தரையில் சரிந்தபோது அவருக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் உறவுகளை இழந்த மொத்தக் கூட்டமும் உறைந்து போய் அமர்ந்திருந்தது.
இந்த ஆண்டு – 17.02.2023 அன்று குஜராத்தின் மெஹசேனா மாவட்டத்தில் உள்ள டிங்குச்சா என்ற சிற்றூரில் இருந்து சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசாவில் துபாய் சென்று அங்கிருந்து மொராக்கோ வழியாக நிகரகுவா சென்று அங்கிருந்து கப்பல் மார்க்கமாக கனடா சென்றது ஒரு குடும்பம் – ஜெகதீஷ் பாட்டில் (39), வைஷாலி (35), விஹாங்கி (11) மற்றும் தர்மிக் (4) அங்கிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய கால் நடையாக காட்டுப்பாதையில் நடக்கத்துவங்கினர். ஆனால் குளிர் 12 டிகிரி மைனஸ் சில கிலோ மீட்டர் காட்டிற்குள் சென்ற பிறகு மனிதக் கடத்தல்காரர்கள் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
விளைவு – எங்கு செல்வது என்று தெரியாமல் கடுமையான குளிரில் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்தனர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அணியின் ரேடார் கருவி காட்டுப்பகுதியில் மனித உடல்கள் கிடப்பதைக் காட்டியது. முதலில் அவை பனிமான்களின் உடலாக இருக்க கூடும். ஓநாய்கள் வேட்டையாடி அவற்றை சேமித்து வைத்திருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் அவை மனித உடல்கள் என்று உறுதியான பிறகு அங்கு சென்று பார்த்த போது பனிக்கட்டியாக உறைந்த நிலையில் 4 உடல்கள் – எல்லை பாதுகாப்பு அணியினரே அதிர்ந்து விட்டனர்.

அந்த உடல்களை சோதனை செய்த போது அவர்களிடம் கிடைத்த ஆவணங்களின்படி அவர்கள் கள்ளத்தனமாக மனிதக் கடத்தல் காரர்களின் உதவியுடன் குஜராத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து அமெரிக்கா செல்ல முயன்றவர்கள் என்று தெரியவந்தது. இறந்தவர்களின் தகவல் அவர்கள் வீட்டிற்குத் தெரியவந்த பிறகு நடந்தவைதான் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டது.
இது நடந்தது பிப்ரவரியில் – டிங்குச்சா என்ற சிற்றூர் உள்ள அதே மெஹசேனா மாவட்டத்தில் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 14.04.2023 அன்று ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வருகிறது. அதாவது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பிரவின் சவுத்ரி (50) அவரது குழந்தைகளான விதி (23) மற்றும் மித்துகுமார் (20) போன்றோரின் உடல்கள் கனடாவின் கிழக்கு பகுதியான செயின்ட் லாரன்ஸ் பிராந்தியத்தில் ஆறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன. பிரவீன் சவுத்ரியின் மனைவி திக்‌ஷாவின் உடல் நீண்ட தேடல்களுக்குப் பிறகு பனிப்பாறை ஒன்றில் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரவின் சவுத்ரியும் அவரது குடும்பத்தினரும் மனிதக் கடத்தல் குழுவினரால் அமெரிக்காவிற்கு கடத்தப் பட்டார்கள். முதலில் பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா – அங்கிருந்து ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு பப்புவா நியூகினியாவின் போர்ட் மோர்ஸ்பி சென்றனர். அதன் பிறகு சரக்கு விமானத்தின் மூலம் கனடாவின் செயிண்ட் லாரன்ஸ் சென்று பிறகு கடல் மார்க்கமாக அமெரிக்காவின் மைனே பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் செயிண்ட் லாரன்ஸிலிருந்து படகு மூலம் நதியைக் கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது, ஆற்று நீரின் அதீத குளிர் காரணமாகவும் நீச்சல் தெரியாத நிலையிலும் அனைவருமே இறந்துவிட்டனர்.
குஜராத்தில் இரண்டு மாத இடை வெளியில் நடந்த இந்த பேரவலம். அதே குஜராத்தின் சதரல் என்ற பகுதியில் இருந்து பிரிஜ்குமார் அவரது மனைவி பூஜா மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்ல மனித கடத்தல்காரர்களை அணுகி உள்ளனர். அவர்கள் ஒருவருக்கு தலா ரூபாய் 6 லட்சம் என்று ரூ.18 லட்சம் பெற்றுக்கொண்டு அவர்களை முதலில் கொழும்பு, அங்கிருந்து தான்சானியா, தான்சானியாவிலிருந்து தரைமார்க்கமாக மொரோக்கோ அழைத்துச்சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் தென் அமெரிக்காவில் உள்ள ஹுண்டுராஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து நடை பயணமாக மெக்ஸிகோ சென்றனர்.

மத்திய மெக்ஸிகோவில் அமெரிக்க நாட்டு எல்லையைக் கடக்கும் போது ‘டிரம்ப் சுவர்’ என்ற பெயர் கொண்ட பெரிய சுவரின் மீது தனது குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு கள்ளத்தனமாக மனிதர்களை கடத்தும் நபர்கள் உதவியுடன் பெரிய கயிற்றை மேலே கட்டி அதன் வழியாக ஏறி உள்ளார். உயரமான இடத்திற்குச் சென்ற பிறகு மிகவும் குறுகிய சுவர் ஆகையால் மேலே சென்ற அவர் தடுமாறி அமெரிக்காவின் பக்கம் விழுந்து உயிரிழந்தார். அவரது முதுகில் இருந்த குழந்தை பலத்த காயத்தோடு உயிர் பிழைத்தது. இந்தப் பக்கம் அவரது கணவர் உயிரிழந்துவிட்டார் என்று கூட தெரியாமல் கயிறு மேலே இழுக்கப்படுவதைக் கண்டு கதறிக்கொண்டு இருந்தார் அவரது மனைவி பூஜா.
மறு நாள் இரவு அவரது கணவர் அமெரிக்க எல்லையில் விழுந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த கூர்மையான கம்பிகளில் குத்தப்பட்டு உடனடியாக உயிரிழந்ததும் – அவரது குழந்தை பலத்த காயத்தோடு எல்லைப் பாதுகாப்பு சுகாதாரத்துறை மருத்துவமனையின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது, இந்த தகவல் கிடைத்ததும் மாரடைப்பால் அவரது மனைவி மெக்ஸிகோவில் உயிரிழந்தார். இந்த மூன்று குடும்பத்தினரின் உடல்களும் கனடாவிலும் மெக்ஸிகோவிலும் யாருமற்ற பிணங்களாக எரியூட்டப்பட்டன.

கடத்தல் கும்பல்கள் செழித்து வளர்கின்றன
இந்த மூன்று குடும்பங்களும் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக செல்வது குறித்து இங்குள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் போய்விட்டது. மூன்று குடும்பத்தினருமே தாங்கள் துபாய்க்கு சுற்றிப்பார்க்கச் செல்கிறோம் என்று கூறித்தான் சென்றுள்ளார்கள். வேறு எந்தத் தகவலையும் வீட்டாருக்குச் சொல்லவில்லை.
மெக்ஸிகோவில் இறந்துபோன பிரிஜ்குமாரின் சகோதரன் அதுல் என்பவர் கூறும் போது ”தாங்கள் குடும்பத்தோடு அபுதாபி சுற்றுலா செல்வதாகவும் வரும் போது என்னவாங்கிவரவேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். நான் நல்ல மொபைல் போன் ஒன்று வாங்கி வாருங்கள் என்று கூறினேன்” என்று ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தார்.
உண்மையில், மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் மூன்றாவது பெரிய பங்கை இந்தியா கொண்டுள்ளது.

குஜராத் மாடல் எங்கே?
மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு இந்தியா முழுமைக்கும் ஒன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
”குஜராத் மாடல்” – தமிழ்நாட்டிலும் இங்குள்ள பத்ரிக்களும், பிரசன்னாக்களும் வலைப்பூக்கள் துவக்கி தொடர்ச்சியாக மோடி பஜனைப் பாடிக்கொண்டு இருந்தனர்.
ஆனால், உண்மையாக குஜராத் மாடலின் அசிங்கம் பச்சை மற்றும் வெள்ளைத் திரைச்சீலைகளுக்குப் பின்னாலும், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இறந்துபோன பிரிஜ்குமார் குடும்பம் மற்றும் ஜகதீஷ் பாட்டில் உடல்களின் சாம்பலுக்குப் பின்னாலும் அப்படியே கரைந்து போனது.
இங்கிருந்துகொண்டு ராமராஜ்ஜியம் குறித்து பேசும் சங்கிகளும் அவர்களின் பஜனைக்கு சிங்கி அடிக்கும் ஊடகங்களும் 2022ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளார்கள் என்ற செய்தியை தந்திரமாக மறைத்துவிட்டன.
இந்த புள்ளிவிவரங்கள் 2023ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியது ஆகும். இதில் பெரும்பாலானவர்கள் குஜராத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையை கடக்கும்போது மக்கள் சந்திக்கும் ஆபத்துகள் அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் தகுந்த வருமானம் இருந்தும், உயிரைப் பணயம் வைத்து ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள்?

நடுத்தர வர்க்க குஜராத்திகள் மேலே குறிப்பிட்டது போன்று சட்டவிரோதமாக துபாய் வழியாகவும், பாகிஸ்தான் வழியாகவும் ராமேஸ்வரம் வழியாகவும் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த ஆண்டு சட்டவிரோத கப்பல் என்ற சந்தேகத்தில் கெனிய நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட ஒரு கப்பலில் இருந்த கண்டெய்னரில் சுமார் 54 இந்தியர்கள் (இதில் ஆண்கள் பெண்கள் சிறார்களும்) இருந்தனர். இந்தியாவின் ஏதோ ஒரு துறைமுகத்தில் இருந்து கண்டெயினரில் 12 நாட்களுக்கு முன்பு ஏற்றப்பட்ட இவர்கள் இரண்டு வாரம் கழித்துத்தான் கெனிய, கடற்படையினரால் பிடிபடுகின்றனர். இந்த 12 நாட்கள் கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதியுமே இல்லாத காற்று மிகவும் குறைவாகவே உள்ள கண்டெயினரில் எப்படி பயணம் செய்திருப்பார்கள். கண்டய்னர் எங்கும் மனிதக் கழிவுகள். அதன் மீதே இவர்கள் பிளாஸ்டிக் ஷீட்டுகளை விரித்து அமர்ந்து கொண்டு வந்துள்ளனர் என்பது மிகவும் கொடுமையான தகவல் ஆகும். ஆனால் இது தொடர்பாக மைக்ரோஸ்கோப் கொண்டு தேடினால் மட்டுமே ஆங்கில நாளிதழ்களில் ஏதோ ஒரு மூலையில் செய்தியாக வந்திருக்கும்.
இப்படி சட்டவிரோதமாகச் செல்பவர்களில் நான்கில் மூன்று பங்கு நபர்கள் குஜராத்திகள் என்பதால் எந்த நாளிதழ்களும் இந்தச்செய்திகளை வெளியிட மறுக்கின்றனவோ என்னவோ?

தமிழர்கள் இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் ராணுவ அச்சுறுத்தல்கள் காரணமாக புகலிடம் தேடிச் சென்று ஏதாவது ஒரு நாட்டு கடற் படையிடம் பிடிபட்டால் இந்தியாவின் ஆங்கில நாளிதழ்கள் முகம் தெளிவாகத் தெரியும் படங்களோடு பெயர் பட்டியல் அடங்கிய 4 கால செய்திகளை வெளியிடும். ஆனால், இரண்டு மூன்று வாரங்கள் இந்தியப் பெருங்கடலில் செல்லும் கண்டெய்னர்களில் மனிதக் கழிவுகளுடனேயே பயணித்து அமெரிக்கா மற்றும் கனடா செல்ல முயலும் வட இந்தியர்கள் குறித்து செய்திகளை பெயரளவிற்கு மட்டுமே வெளியிடுகின்றனர்
கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மக்களவையில் கூறியது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான நிலவரப்படி 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2015இல் 1,31,489 ஆகவும், 2017இல் 1,33,049-ஆகவும் 2018இல் 1,34,561-ஆகவும், 2019இல் 1,44,017-ஆகவும் இருந்தன. கடந்த 2021இல் மட்டும்1,63,370 பேர் இந்திய குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர்.
அதன் அடிப்படையில், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் மொத்தம் 16,21,561 பேர் இந்திய குடியுரிமையை விலக்கிக் கொண்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.
வெளியுறவுத்துறை சமர்ப்பித்த தரவுகளின்படி பார்த்தால் அதிக அளவில் இந்தியர்கள் தாய்நாட்டுக்குடியுரிமையை திருப்பி விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கனடாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64,071 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளார்கள். அதேபோல் ஆஸ்திரேலியாவில் கடந்த 3 ஆண்டு களில் 58,391 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று இருக்கின்றனர். அடுத்தபடியாக பிரிட்டனில் கடந்த 3 ஆண்டுகளில் 35,435 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளனர்.
இத்தாலியில் 12,131 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளார்கள். நியூசிலாந்தில் 8,882 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளனர். ஜெர்மனியில் 6,690 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளனர். நெதர்லாந்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4,128 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று இருக்கின்றனர்.

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை, வாழ்க்கைத்தரம் மிக மோசம், வேலையில்லாத் திண்டாட்டம் என்றெல் லாம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் சமூக – பொருளாதாரக் காரணங்களே இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள அடிப்படையாகும். இது ஒரு சமூகப் பிரச்சினை, இங்கே ஜாதி வெறியோடு நடந்துகொண்டு – தூய்மைப் பணிகளை தீண்டத்தகாத மக்களே செய்வார்கள் – என்று இறுமாப்போடு வாழும் கூட்டம் மல ஜலக் கழிவுகளோடு பல வாரங்கள் ஒரே கண்டெயினரில் பயணித்து அமெரிக்கா, கனடா சென்று அங்கு தினக் கூலிகளாகவும், கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நபர்களாகவும், உடலில் சாயத்தைப் பூசிக்கொண்டு மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் பகல் முழுக்க நின்று பிச்சை எடுக்கும் நபர்களாகவும் உள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் ஆவண மற்ற இந்தியர்களில் குஜராத்திகள் முதலிடத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா ஆகியவை உள்ளன. குஜராத்திகளில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களில், படேல் சமூகம் மிகப் பெரிய குழுவாக உள்ளது.
பெரும்பான்மையான ஆவணமற்ற புலம் பெயர்ந்தோர் குஜராத்திகளுக்குச் சொந்தமான மோட்டல்கள் அல்லது உணவுக் கடைகள் போன்ற சில்லறை வணிகங்களில் பணிபுரிகின்றனர். “அவர்கள் சட்டவிரோதமாக வந்துள்ளனர் என்று தெரிந்தாலும், உரிமையாளர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவார்கள், ஆனால் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டதை விட மிகக் குறைவான ஊதியம் – சுரண்டல் அதிகம்.” அமெரிக்காவில் கார்ப்பரேட் பண்ணைகளில் முள்ளங்கி பிடுங்கவும், கீரைகளைக் கட்டவும், மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லவும், அதன் கழிவுகளை அள்ளவும் என கிடைத்த வேலைகளைச் செய்து பிழைக்கின்றனர்.

No comments:

Post a Comment