புதுடில்லி, டிச. 14- மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதுதொடர்பாக 4 பேரை டில்லி சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
தலைநகர் டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளா கத்துக்குள் கடந்த 2001 டிசம்பர் 13ஆம் தேதி 5 தீவிர வாதிகள் உள்ளே புகுந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் சுதாரித்து பதில் தாக்குதல் நடத்தியதில், 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டை சுமார் அரை மணி நேரம் நடந்தது. இச்சம் பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் 22ஆம் ஆண்டு நினைவு நேற்று (13.12.2023) அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரங்கல் செலுத்தப்பட்டது. அவர்களது புகைப்படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங் கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், நாடாளு மன்ற நடவடிக்கைகள் வழக்கம்போல தொடர்ந்தன.
மக்களவைத் தலைவர்
இருக்கையை நோக்கி..
நேற்று மதியம் 1 மணி அளவில் மக்களவையில் பூஜ்ய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. அவையை ராஜேந்திர அகர்வால் நடத்தினார். அப் போது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஓர் இளை ஞர் திடீரென மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கைப் பகுதியில் குதித்தார். என்ன நடக்கிறது என்று அவர்கள் உணர்வதற்குள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேஜைகள் மீது தாவிக் குதித்து, ‘அராஜகம் ஒழிக’ என்று முழக்கமிட்டபடி மக்களவைத் தலைவர் இருக்கையை நோக்கி ஓடினார். பார்வை யாளர் மாடத்தில் இருந்தமற்றொரு நபர் வண்ணப் புகை குப்பியை வீசினார். அவர்கள் இருவரையும் பாது காப்புப் பணியில் இருந்த காவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரட்டி பிடித்தனர்.
அதேநேரத்தில், இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துசென்று டில்லி சிறப்பு காவல்துறையினர் விசாரித்தனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிகழ்வை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப் பட்டது. நாடாளு மன்றத்தில் டில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா உள்ளிட்டஅதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.
மக்களவைக்குள் புகுந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் (35) என்ற இளைஞர்கள். இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே 2 பேர் முழக்கமிட்டனர். இதில் அரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், சிவில் சர்வீஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். ஆனால், அரசியல் கட்சிகளுடன் இவருக்கு தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. இன்னொருவர் அமோல் ஷிண்டே(25). இவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 2 பேருக்கு தொடர்பு:
டில்லி அடுத்த குர்கான் பகுதியை சேர்ந்த லலித் ஜா என்பவர் உட்பட மேலும்இருவருக்கும் இந்த சதி திட்டத்தில்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். லலித் ஜா வீட்டில்தான் இந்த திட்டத்தில் ஈடுபட்ட மற்ற 5 பேரும் தங்கி இருந்தனர் என்றும் தெரியவந்தது.
மக்களவையின் பார்வையாளர் மாடத்துக்கு செல்ல 2 இளைஞர்களும் மைசூருவை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்கா பரிந்துரையின்பேரில் கடவுச்சீட்டு (‘என்ட்ரி பாஸ்’) பெற்றுள்ள தாக பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி கூறினார். அவர்கள் 5 கட்ட பாதுகாப்பு சோதனையை கடந்த பிறகே உள்ளே நுழைந்துள்ளனர். தனது தொகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் என்பதால், நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கான பாஸ் வழங்க பிரதாப் சிம்கா பரிந்துரை செய்துள்ளார்.
மக்களவைத் தலைவர் ஆலோசனை
பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மக்க ளவை தலைவர் ஓம் பிர்லா நேற்று மாலை ஆலோ சனை நடத்தினார். ‘‘மக்களவையில் நுழைந்தவர்கள் வெளியேற்றியது சாதாரணமான வண்ணப் புகை. பரபரப்பை ஏற்படுத்த இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
மல்லிகார்ஜுன கார்கே
மக்களவையில் நேற்று (டிச.13) நடைபெற்ற பாது காப்பு மீறல் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பியூஷ் கோயல் இது குறித்து கூறும்போது, “மாநிலங்களவை மூத்தவர்கள் சபை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட இந்த நாடு பலமானது என்ற செய்தியை நாம் தெரிவிக்க வேண்டும். எனவே, சபை நடவடிக்கைகள் தொடர வேண்டும். காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது என நினைக்கிறேன். இது நாட்டுக்கு நல்ல செய்தியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இருவர் மக்களவையில் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வெறும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றிய கேள்வி அல்ல. நாடாளுமன்றத்துக்குள் போடப்பட்டிருக்கும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்து பாதுகாப்பு மீறலை ஏற்படுத்த முடிந்தது என்பது தொடர்பானது. இந்தச் சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இந்த தவறு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரு கிறோம். அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொள் கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து இரு அவைகளிலும் விளக்கம் தர வேண்டும்”என்றார்.
அப்போது, அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, “இதுபற்றி அறிந்தவுடன், பாதுகாப்பு இயக்குநருக்கு போன் செய்தேன். அவரிடம் அப்டேட் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு கொடுத்த அப்டேட்டை, சபையில் பகிர்ந்து கொண்டேன். இது கவலைக்குரிய விஷயம் தான், ஆனால் விவரங்களுக்கு காத்திருப்போம், பின்னர்தான் இது குறித்து விவாதிக்க முடியும் என்றார்” என்றார்.
மக்களவைப் பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க் கட்சியினர் சரமாரியாகக் கேள்வி கேட்ட நிலையில், அவை வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப் பட்டது.
மக்களவையில் நேற்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment