உத்தராகண்ட் மாநிலத்தில் மலைப்பாதையைக் குடைந்து நடந்துகொண்டு இருக்கும் சாலைப் பணியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 15 நாட்களாக 41 தொழி லாளர்கள் நீண்ட குகைக்கு உள்ளே சிக்கிக்கொண்டனர். முதலில் எளிதில் மீட்டுவிடுவோம் என்று கூறிய ஒன்றிய அரசு நாட்கள் ஆக ஆக பன்னாட்டு மீட்புக் குழுவினரின் உதவியைப் பெற முயன்றது,
ஆனால் அடுக்குப் பாறைகளால் ஆன மலை என்பதால் சிறு அதிர்வுகள் கூட முழுமையாக சுரங்கத்தை சரித்து உள்ளே இருப்பவர்களை அப்படியே சமாதி ஆக்கிவிடும் என்பதால் மீட்புப் பணிகள் 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர் ஆகியோர் விபத்துப் பகுதிக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் வரும் பாதையில் கார்கள் குலுங்காமல் இருக்க ஜேசிபி இயந்திரம் கொண்டு பாதை முழுவதும் கற்களை அகற்றி மேடு பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. மேலும் முதலமைச்சர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களின் வருகைக்காக சிகப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது.
விபத்தில் சிக்கிய 41 பேரின் குடும்பத்தினர் குகைக்கு அருகே கண்ணீரோடு அழுதுகொண்டு இருக்கும் நிலையில் - அமைச்சர்கள் இன்பச்சுற்றுலா வருவது போல் - அவர்களுக்கு என்று வசதியான மேடை, சிவப்புக்கம்பள வரவேற்பு - புதிய சாலை போடுதல் போன்ற வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அப்பகுதியில் ஏற்படும் சிறு சிறு அதிர்வுகளும் முழு குகையையுமே தரைமட்டமாக்கி விடும் என்று எச்சரித்தும், அமைச்சர்கள் அலுங் காமல் குலுங்காமல் வரவேண்டும் என்பதற்காக கனரக வாகனங்களைக் கொண்டு சாலை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது மாநில பிஜேபி அரசு.
மனிதாபிமானம் உள்ளவர்கள் - உத்தராகண்டில் குகைக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் மக்கள் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று கவலையோடு இருக்கிறார்கள். நல்ல செய்தி வராதா என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் பிஜேபிகாரர்களோ, மாநில, ஒன்றிய அமைச்சர்களோ அதைப்பற்றி எல்லாம் சற்றும் கவ லைப்படாமல், பாதிக்கப்பட்ட பகுதிக்கு அமைச்சர்கள் சுகமாக வருவதற்குத் தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருப்பது வெட்கக் கேடு.
மதம் என்ற நோய் பிடித்தால், மனிதாபிமானம் என்ற மூச்சுக்காற்று நின்று போய்விடும்.
"மதம் என்ற பிணி பிடியாமல் இருக்க வேண்டும்" என்று கூறினார் வடலூர் வள்ளலார். வாழ் நாள் எல்லாம் மதத்தின் ஆணி வேரைத் துவம்சம் செய்தார் தந்தை பெரியார்.
அவை எல்லாம் எத்தகைய பேருண்மைகள் என்பதை பி.ஜே.பி. சங்பரிவார்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வீர்!
No comments:
Post a Comment