வைக்கம், நவ.4- கேரளா மாநிலம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை நேற்று (3.11.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் மற்றும் துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.
வைக்கம் போராட்டத்தின் போது தந்தை பெரியார் கைதுசெய்யப்பட்டு ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலை வட்டம், அருவிக்குட்டி என்ற கிராமத்தில், காவல் நிலையச் சிறைவைக்கப்பட்ட இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்கள்.
1924ஆம் ஆண்டு வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். இதற்காக அப்பகுதி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் போராட்டத்தை தொடர்ந்து, தந்தை பெரியார் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார்.
அனைவரும் வழிபாடு செய்வதற்கு பொதுவானவர்கள், அனைவரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமையை பெற்றுத்தந்த வரலாற்று சிறப்பு மிக்க இப்போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் இதனை சிறப்பு செய்யும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்புகள் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகளை குறித்த காலத்தில் விரைந்தும், தரமாகவும் கட்டி முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இவ்வாறு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment