மூடநம்பிக்கைக்கு அளவேயில்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

மூடநம்பிக்கைக்கு அளவேயில்லையா?

பக்தியும், ஆன்மிகமும் எப்படியெல்லாம் மக்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது என்பதற்குக் கீழ்க்கண்ட பரப்புரைகளே சாட்சி!

இதோ அந்தப் பட்டியல்.

பணவரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

 நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மிக வழி முறைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க, வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படிச் செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டுப் பூஜை அறையில் எலுமிச்சைத் தோலில் தீபம் ஏற்றி வைத்தால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் அகலும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை - 1

*மஞ்சள், குங்குமம் - சிறிதளவு

*திரி - 1

*கிராம்பு - 2

*நெய் - தேவையான அளவு

பரிகாரம் செய்வது எப்படி?

முதலில் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்குக் குளித்து விட்டுப் பூஜை அறைக்கு செல்லவும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கால் படாத இடத்தில் பிழிந்து விடவும்.

பின்னர் ஒரு பாதி எலுமிச்சை தோலில் மஞ்சள் குங்குமம் சேர்த்துக் கொள்ளவும். மீதமுள்ள எலுமிச்சை தோலில் மஞ்சள் குங்குமம் சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி பஞ்சுத் திரி போடவும். பிறகு எடுத்து வைத்துள்ள கிராம்பை அதில் சேர்த்து தீபம் ஏற்றவும்.

பிறகு நீங்கள் யாருக்காவது பணம் கொடுத் திருந்தாலோ அல்லது உங்களுக்கு பணத் தேவை இருந்தாலோ மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

இந்த தீபம் ஏற்ற நாள், கிழமை பார்க்கத் தேவையில்லை. எத்தனை நாள் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கணக்கும் கிடையாது. உங்களுக்கு எப்பொழுது விளக்கு ஏற்ற விருப்பமோ அப்பொழுது செய்தால் போதும். இவ்வாறு விளக்கேற்றுவதன் மூலம் உங்கள் எண்ணங்கள், தேவைகள் உடனடியாக நிறைவேறும் என்று ஆன்மிகவாதிகள் மக்கள் மத்தியில் சமூகவலைதளங்கள், ஊடகங்கள் வழியாகப் பரப்பி வருகின்றனர்.

இது போன்ற பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையைத்தான் மூர்க்கமாக விதைக்கும் - சோம்பேறித்தனமான பள்ளத்தில் தள்ளி வதைக்கும்!

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51 A(h).

நாய் விற்றக் காசு குரைக்காது என்ற முறையில் ஏடுகளும் (ஆன்மிகத்திற்கென்றே வாரம் ஒரு முறை சிறப்பிதழாம்) வெளியிடுவது எல்லாம் மக்களை வஞ்சிக்கும் ஆபத்தான மோசடியே!

ஆன்மிக இணைப்புகளை வெளியிடுவோர் அறிவியல் இதழையும் வாரம் ஒருமுறை வெளியிடக் கூடாதா? வஞ்சிக்க வேண்டாம் மக்களை என்பதே நமது அழுத்தமான கருத்தாகும்.


No comments:

Post a Comment