ஒன்றிய பிஜேபி ஆட்சியில் மதப் பாகுபாடு கிடையாது என்று பேசி இருப்பவர் சாதாரணமானவர் அல்லர். ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான் இப்படி 'திருவாய்' மலர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்தான் இந்தக் கருத்தை உதிர்த்துள்ளார்.
"மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்போது பெண்களும், மூத்த குடிமக்களும் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்த அழைத்துச் செல்லப் படுவார்கள். பாஜக தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை அயோத்தி ராமர் கோயிலைக் கட்டுவதை முக்கியக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சியில் மதரீதியாக யாருக்கும் எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை. மற்ற கட்சிகளைப் போல வாக்கு வங்கி அரசியலை பாஜக நடத்துவதில்லை. எனவேதான் நமது சகோதரிகளின் நலன்களைக் காப்பதற்காக உடனடி முத்தலாக் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த விவாகரத்து முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். அதனை சட்டம் மூலம் பாஜக தடுத்துள்ளது.
வறுமை ஒழிப்பு என்ற கொள்கையை காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தும் அக்கட்சியால் வறுமையை ஒழிக்க முடியவில்லை.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொருளாதாரரீதியாக உலகின் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் யாரும் விட்டுவைக்கப்பட மாட்டார்கள் என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்கள் மூலம் ஊழலுக்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்களை வறுமையில் இருந்து மீட்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால், வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மீண்டு வருகிறார்கள்" என்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
('தினமணி' 15.11.2023 பக்கம் 8)
மதப் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் பேசுவது உண்மைக்கு மாறானது என்பதற்கு வேறு இடத்தில் ஆதாரங்களைத் தேடவில்லை. நாடாளுமன்றத்துக் குள்ளேயே நடந்ததை எடுத்துக்காட்டினாலே போதுமானது.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஒரு விவாதத்தின் போது, டில்லியின் தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி.யான ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான டேனிஷ் அலி என்பவரை நாக்கூசும் வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். டேனிஷ் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக, அவரை புரோக்கர், தீவிரவாதி, சுன்னத் செய்தவன், பயங்கரவாதி என அவமானப்படுத்தியிருக்கிறார்(ன்) அந்த பா.ஜ.க எம்.பி. பிதுரி. இது நடந்தது பொதுவெளியிலோ, காவி கும்பலின் மாநாட்டிலோ அல்ல, ஜனநாயகத்தின் கோவில் என பீற்றிக் கொள்ளப்படும் நாடாளுமன்றத்தில் நடந்திருக்கிறது.
இவ்வாறு ஒரு மக்கள் பிரதிநிதியை இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக தகாத வார்த்தைகளால் நாடாளுமன்றத்தில் பேசியதற்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை. தான் இவ்வாறு பேசியதற்காக பிதுரி வருத்தப்படவில்லை, இவ்வாறு அவர் பேசுவது முதன்முறையுமல்ல. பிற பா.ஜ.க. எம்.பி.க்களும் மேசையைத் தட்டி வரவேற்றனர். அந்த அளவிற்கு இஸ்லாமிய வெறுப்பில் ஊறிப் போயுள்ளது இந்த பாசிசக் கும்பல்.
இசுலாமியர் என்றால் அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் இழிவுபடுத்தப்படுவார்கள் என்பதுதான் பாசிஸ் டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை. மானத்திற்கு அஞ்சுகின்ற எந்த ஒரு இஸ்லாமியரும் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றங்களுக்கோ செல்வதற்குத் துணியக் கூடாது என்பதுதான் பாசிஸ்டுகள் கட்டியமைக்கும் உளவியல்.
இனிமேல் இவ்வாறு பேசினால், பிதுரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் ‘எச்சரித்ததைத்’ தாண்டி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இதே பாசிச கும்பல்தான், இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அதானி குறித்து திருமாவளவன் பேசும் போது ஒலி பெருக்கியை நிறுத்தினர். விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சார்ந்த 19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது. மோடியோ இந்த நிகழ்வு குறித்து இது வரை வாய்திறக்கவில்லை. மோடி அரசையோ, மோடியையோ விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவே சர் வாதிகாரி, அரசு, ஜூம்லா, இரட்டை வேடதாரி, நாடகம், சகுனி உள்ளிட்ட வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் தடை செய்யப் பட்டுள்ளன.
இந்த வார்த்தைகளைவிட மோசமான, இழிவான வார்த்தைகள்தான் பிதுரி பேசியவை. இந்த இழிச்செயலைப் பாராட்டும் விதமாக, 29.5 சதவீத முஸ்லீம் மக்கள் நிறைந்த ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்திற்கு பிதுரியை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க.
காவிகளின் ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் அவலநிலை தொடர்கிறது.
2014-க்குப் பிறகு லவ் ஜிகாத், நில ஜிகாத், மதமாற்றம், அந்நிய ஊடுருவல் போன்றவற்றைத் தடுப்பது, பசுப்பாதுகாப்பு என பலபெயர்களில் பொய்களைப் பரப்பி இஸ்லாமியர்கள் மீது அறிவிக்கப்படாத இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது காவி பாசிசக் கும்பல். விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, அனைத்து ஹிந்துப் பண்டிகைகளும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கான முகாந்திரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. ராமநவமியைக் காரணமாகக் கொண்டு குஜராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கலவரங்களை நடத்தி வருகிறது காவிக் கும்பல்.
அரியானாவில் நூஹ் மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முகாந்திரமாகக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது, விஸ்வ ஹிந்து பரிசத் என்ற காவிக் கும்பல்! இந்த வன்முறையில் மசூதிகள் சூறையாடப்பட்டன; சாலையில் நின்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; இமாம் உட்பட அப்பாவி முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமுற்றனர். மேலும், கலவரக்காரர்களுக்கு சொந்தமான வீடுகளை இடிப்பது என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி இஸ்லாமியர்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது அரியானா மாநில பா.ஜ.க அரசு.
கடைகள், வீடுகள் என இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவற்றை இடித்துத்தள்ளி அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து சொந்த நாட்டிலேயே இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கியது. காவி பயங்கரவாதிகள் ஆளும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, அசாம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இத்தகைய புல்டோசர் தாக்குதல்கள் தினந்தோறும் நடந்து வருகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டில், இஸ்லாமியர்களை சட்டப்பூர்வமாக இரண்டாந்தர குடிமக்களாக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டில்லியின் ஷாகீன்பாக்கில் போராடியவர்கள் மீது பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடப்பட்டது. காவிக் கும்பல். இவ்வன்முறையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இஸ்லாமிய மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன, பலர் படுகாயமுற்றனர். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதே பெருந்துயரம்!
இப்படி எடுத்துக்காட்டிக் கொண்டே போகலாம். இமயமலையைக் கை குட்டையால் மறைக்கப் பார்க்கிறது பா.ஜ.க. - மக்கள் தயாராகி விட்டார்கள். மக்கள் தேர்தலில் நல்ல பாடத்தைக் கற்பிப்பார்கள் - இது உறுதி உறுதியே!
No comments:
Post a Comment