தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழ்நாடு அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் ஆளுநரே!
தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து போடுவதில்லை. ஒவ்வொரு கோப்பு மீதும் பல்வேறு விளக்கங்களைக் கேட்பதும், விளக்கங்களைக் கொடுத்தாலும் தாமதம் செய்வதே அவரின் வாடிக்கை!
அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், "நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம்" என்று கூறினார். அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 200 மற்றும் 163-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.
தற்போதுவரை 12 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெழுத்திடாமல் உள்ளார். ஏற்கெனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு ஆளுநர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு 2 ஆவது முறையாக சட்டப் பேரவையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய பிறகுதான் வேறுவழியின்றி அந்த மசோதாவில் கையெழுத்திட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஒன்றிய அரசும் ஊறுகாய் ஜாடியில் போட்டு விட்டது.
இதேபோல், மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் ஆளுநரின் கையெழுத்துக்காக நிலுவையில் உள்ளன.
இதுமட்டுமின்றி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் முதலியவை ஆளுநரின் மாளிகையில் குறட்டை விடுகின்றன.
"சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரச மைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்ப தற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழி காட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 3.11.2023 அன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக் கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கென்றே ஒரு பதவி - அது ஆளுநர் பதவியென்றால் மக்களாட்சி என்பதற்கு என்ன பொருள்?
மசோதா மீதோ, வேறு கோப்பின் மீதோ ஒப்புதல் அளிப்பதற்கு எந்தவிதக் கால வரையறையும் கிடையாது என்னும் வானளாவிய அதிகாரம் அரசு அதிகாரி ஒருவருக்கு அளிக்கப்படுமேயானால், ஆட்சி சக்கரம் எப்படி சுழலும்?
மக்கள் நல அரசாக எப்படி செயல்பட முடியும்? எதற்கும் ஒரு வரையறை வேண்டாமா?
அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஆளுநர்மீது தொடுத்துள்ள இவ்வழக்கு இந்தியாவுக்கே வழிகாட்டப் போகிறது என்பதில் அய்யமில்லை.
இன்னும் சொல்லப் போனால், அறிஞர் அண்ணா சொன்னாரே - 'ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?' அந்தக் கேள்விக்கு நியாயமான விடை கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
வெள்ளைக்காரர்கள் - அவர்களின் வசதிக்காக உண்டாக்கப்பட்ட இந்தப் பதவி - வெள்ளைக் காரர்கள் வெளியேறிய பிறகும் நீடிப்பது ஏன்? என்பது முக்கியக் கேள்வியாகும்.
No comments:
Post a Comment