08.05.1948 - குடிஅரசிலிருந்து....
பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக உழைக்க ஒப்புக்கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.
யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் - சூத்திரர்களாம்
நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சதனென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.
யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசுகளுக்கு அதுபற்றிக் கவலையேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.
சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்?
சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும்.
ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!
வந்த சுதந்திரம் மனிதத் தன்மையைத் தந்ததா?
திராவிட மக்கள்தான் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரம் வந்துவிட்டதென்று கூறிவிட்டால் மட்டும் திருப்தி ஏற்பட்டுவிடாது. இந்த உயர்வு தாழ்வு ஒரே மட்டமாக்கப்படவேண்டும். பணம் பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பதவி பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பட்டங்கள் பல பெற்றாலும் இப்பட்டம் நீங்காது. பணம், பட்டம், பதவி இவற்றை என்று வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். ஆனால், இந்த இழிவு நீங்குவது மட்டும் அவ்வளவு சுலபமானதல்லவே. சர்.எ. இராமசாமி முதலியார் பட்டம் பல பெற்றவர்தான். பணமும், செல்வாக்கும் உடையவர்தான். பெரிய பதவிகளை எல்லாம் வகித்தவர்தான். வகித்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திறம்பட நடத்தி உலகத்தின் இரண்டாவது அறிவாளி என்று அமெரிக்க மக்களாலேயே புகழ்ந்து பேசப்பட்டவர்தான். இன்றும் திவான் பதவியில் இருந்து வருபவர்தான் என்றாலும், அவர் சூத்திரர்தானே? அவ்விழிவு அவரது பட்டத்திற்கோ, பணத்துக்கோ, பதவிக்கோ பயந்து ஓடிவிடக் காணோமே! ஆகவே, இவ்விழிவு நீங்க வேண்டுமென்பதுதான் பட்டம், பணம், பதவி இவை பெறுதலைவிட மகா முக்கியமான காரியமாகும்.
இவ்விழிவு நீங்கினால் தம்பிழைப்புப் போய்விடுமே என்று அஞ்சுபவர்களுக்காகவோ அல்லது அவர்களுக்காகப் பரிதாபப்படுபவர்களுக் காகவோ நாம் இவ்விழிவை இதுவரை மறந் திருந்தால்தான், ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரிகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சிறுமைப்படுத்தப் பட்டிருக்கிறோம்.
நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்றுவிட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெறவேண்டாமா? ஒருவன் உயர்ஜாதி மற்றொருவன் இழிஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்?
இந்த நாட்டு மக்கள் மனிதத் தன்மை அடைவதற்காக நான் செய்துவரும் இவ்வேலையை யார் ஒப்புக்கொண்டாலும், நான் அவருக்குக் கையாளாயிருந்து பணியாற்றத் தயாராயிருக்கிறேனே! நான் வேண்டியது இழிவு நீக்க வேலையே ஒழிய தலைமைப்பதவி அல்லவே.
No comments:
Post a Comment