திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிடிக்க ஆட்கள் தேவை என வெளியிடப்பட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்யப் படும் இந்த திருப்பதி லட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி செல்பவர்கள் இந்த லட்டை வாங்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதி லட்டை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப் பள்ளியில் ஆச்சாரமாக தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.
அதுமட்டுமின்றி திருப்பதி லட்டு புவிசார் குறியீடும் பெற்றுள்ளது. முதலில் பூந்திதான் திருப்பதி பிரசாதமாக இருந்துள்ளது. 1715 ஆம் ஆண்டு முதல்தான் ஏழுமலை யானுக்கு லட்டு வைத்து நெய்வேத்தியம் செய்யத் தொடங்கியுள்ளனர். பின்னர் 1803 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டுப் பிரசாதம் விற்பனை செய்யப் படுவதாக கூறப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோமுந்திரி , 150 கிலோ ஏலக்காய் , 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ காய்ந்த திராட்சை ஆகியவற்றைக் கொண்டு லட்டு தயாரிக் கப்படுகிறது. சுமார் 200 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு தொடர்பான அறிவிப்பால் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஊழியர்களை வழங்கும் சிறீ லட்சுமி சிறீனிவாசா மேன் பவர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வகைப் பிரசாதம் மற்றும் பணியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக் கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் - தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 21,139 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு நிறுத்தினால் பரவாயில்லை. அடுத்து வருவதுதான் படமெடுக்கும் பார்ப்பனத்தனம்.
குறிப்பாக வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதான் இந்த சர்ச்சைக்கு காரணமாக உள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க ஆட்கள் வேண்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், விண் ணப்பதாரர்கள் சிறீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது ஏன்?
இந்த நிலையில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி, தலைமுடிகளை வகைப்படுத்தும் பணி, கழிப்பறை தூய்மைப் பணி இந்தப் பணிகளுக்கு ஆண் - பெண் பணியாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த வேலைகளுக்குச் சேர கட்டாயம் ஹிந்துவாக இருக்க வேண்டும் அதிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கவேண்டும் என்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறது? பார்ப்பானாவது - சூத்திரனாவது? எல்லாம் வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை - அவிழ்த்து விட்ட கரடி என்று சொல்லும் பார்ப்பனர்கள், அவர்களின் அடி வருடிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்.
ஹிந்து மதக் கோயிலில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த எவரும் உரிய ஆகமப் பயிற்சி பெற்றால் அர்ச்சகராகலாம் என்றாலும் எதிர்க்கிறார்கள். குறிப்பிட்ட பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்று உச்சநீதிமன்றம் சென்று கதவைத் தட்டுகிறார்கள்.
பிரசாதம் செய்வதிலும் பிராமணாள், சூத்திரன் பேதம் கற்பிக்கிறார்கள்.
இதனை சுட்டிக்காட்டினால் வகுப்புத் துவேஷம் என்று கூறுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களே புரிந்து கொள்வீர்!
மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பது மட்டும் நினைவிருக்கட்டும்!
No comments:
Post a Comment