உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் தரவுகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் தரவுகளும்

"சுதந்திரம் என்ற பெயரில், அரசுகளின் தலையீடுகள் இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், நீதித்துறை யில் உள்ளோரின் நலனுக்காக செயல்படும், 'லாஏசியா' அமைப் பின் கருத்தரங்கம், கருநாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது
இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:
"சுதந்திரம் என்பது, யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தன் விருப்பத்தை ஒருவர் தேர்வு செய்வது என்பதே பாரம்பரியமாக நம்முடைய கண்ணோட்டமாக இருந்து வருகிறது ;  ஆனால் தற்கால நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக நீதியில் -  அரசுகளின் பங்களிப்பு, குறிப்பீடு, தலையீடு இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்
அரசின் தலையீடு இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், அவற்றில் பின் தங்கியவர்களை அடக்கி ஆளும் நிலை உருவாவதற்கு முக்கிய காரணமாகும். மதம், மொழி, ஜாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பதற்கு, சுதந்திரம் குறித்த தவறான கண்ணோட்டமே காரணமாக இருந்து வந்துள்ளது. தற்போது நாம் செயற்கை நுண்ணறிவு காலத்தில் உள்ளோம். இதில் செயற்கை நுண்ணறிவுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள குழப்பமான விடயங்களையும் கவனிக்க வேண்டும். இதுபோலவே, சட்டங்களிலும், ஆண்களை உயர்வானவர்களா கவும், பெண்களை ஆண்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களாகவும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது - இது போன்ற பாரபட்சம், பாகுபாடுகளை நாம் உடைத்து வருகிறோம். ராணுவத்தில் பெண்களும் பணியாற்றும் உரிமையை நீதிமன்றம் பெற்றுத் தந்துள்ளது" இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கதாகும்.
'ஆண்டான் அடிமை' என்ற ஒரு சமூக அமைப்பில் அரசு தலையீடு இருந்தாலொழிய இந்த ஏற்றத் தாழ்வை நீக்க முடியாது.
குறிப்பாகக் கல்வியை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட உயர் ஜாதியினர் தான் படிக்க வேண்டும். இது கடவுளின் கட்டளை - மதத்தின் கட்டளை என்று    இருந்த நிலையில் - மக்கள் போராட்டமும் அதன் விளைவாக அரசு தலையீடும் இருந்ததால்தான் அதில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
இடஒதுக்கீடு என்ற ஒன்றை அரசு சட்டரீதியாகக் கொண்டு வரத் தவறியிருந்தால் - பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி கற்றிருக்க முடியுமா? உத்தியோகப் படிக்கட்டுகளைத் தான் மிதித்திருக்க முடியுமா?
இதன் பின்னணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தலைவர்களின் பங்களிப்பும் மிக - மிக முக்கியானதே.
இடஒதுக்கீடு என்று வருகின்றபோது 1950க்கும் 1977க்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த 50 நீதிபதிகளில் 48 பேர் பார்ப்பனர்கள் என்று தமிழ்நாடு திட்டக் குழுத் தலைவராக இருந்த பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன் கூறியதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சிலையை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறிய தகவல்களும், கருத்துகளும் கவனிக்கத்தக்கவை.
"நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதிமன்றஙகளில் நியமிக்கப் பட்ட 604 நீதிபதிகளில் 72 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள், 458 பேர் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். 45 மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேரா சிரியர்கள் 4 விழுக்காடு மட்டுமே" என்கிற தகவல்கள் எல்லாம் திடுக்கிட வைக்கவில்லையா?
மக்கள் தொகையில் சரிபகுதியினரான பெண்களின் உரிமை நிலைக்கு முட்டுக்கட்டை எங்கே இருக்கிறது என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய "அரசின் தலையீடு தேவை" என்பதன்   பொருள் என்னவென்று புரியும். பழைமைச் சித்தாந்தங்களை உயிர்நாடியாகக் கொண்டவர்கள் கையில் அரசு சிக்கினால் வேறு மாதிரியான  சமூக அநீதிதான் தலைதெறித்து ஆடும். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியின் கருத்தும்  - தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்த புள்ளி விவரங்களும் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

No comments:

Post a Comment