பழ.அதியமான் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

பழ.அதியமான் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு வெளியீடு

'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் தெளிவாக இருக்கிறது!

தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

சென்னை, நவ.29 பழ.அதியமான் அவர்கள் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு நூலினை இன்று (29.11.2023) காலை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி மகிழ்ந்தார்.

இந்நிகழ்விற்குப் பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேசியபோது,

''வைக்கம் வரலாறு'' என்ற வைக்கம் போராட்ட வரலாற் றைத் தமிழில் எழுதி, மலையாளத்தில் மொழி பெயர்த்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவில் வெளியிட்டார்.

இந்த சூழ்நிலையில், அந்த வரலாறு பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்படவேண்டும் என்ற முயற்சி தமிழ்நாடு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கன்னடத்திலே மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகம் இன்று (29.11.2023) வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, மற்ற மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது.

வைக்கம் போராட்ட வெற்றி நாளாகக் கொண்டாடப் பட்ட இதே நாளில், சென்னை தலைமைச் செயலகத்தில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, அதனை நான் பெற்றுக்கொண்டேன். இது ஒரு பெரிய மகிழ்ச்சியான ஒரு வாய்ப்பு.

காரணம். இந்தியாவினுடைய முதல் மனித உரிமைப் போர் - மிகப்பெரிய போராட்டம் - அறப் போராட்டம் - சத்தி யாகிரகம் என்ற முறையில் இடம்பெற்ற வரலாறு என்பது அதன் சிறப்பாகும். இன்றைக்கும் ஜாதீய ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், அப்போராட் டம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப் பெற்றதோ, அது ஒரு தொடர் போராட்டமாகவே இருந்து கொண்டுள்ளது.

அன்றைக்குத் தொடக்கம்- இன்றைக்கும்அது முடி வில்லாமல் நடந்துகொண்டிருக்கக் கூடிய அளவிற்குப் பல பகுதிகளிலும் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்பது தொடர் கிறது என்பதற்கு அடையாள மாகத்தான் இந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன.

ஜாதி ஒழிப்பில் 'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் மிகத் தெளிவாக இருக்கிறது என்பதற்காகத்தான், இதுபோன்ற நல்ல நூல்களை, அதி காரப்பூர்வமான வரலாற்றை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூல் வெளியீடு.  ஆகவே, அதை நான் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment